நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது.
என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்.
உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.