உன் மதிப்பின்படி செலுத்தக்கூடாத தரித்திரனாயிருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனைபண்ணினவனுடைய திராணிக்கேற்றபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.
அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக.
ஒருவன் தன் வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்துக்கும் இளப்பத்துக்கும்தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது.
தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.
ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாய் இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
யூபிலி வருஷத்துக்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருஷம்மட்டுமுள்ள மற்ற வருஷங்களின்படியே ஆசாரியன் திரவியத்தைக் கணக்குப்பார்த்து, அதற்குத்தக்கது உன் மதிப்பிலே தள்ளப்படவேண்டும்.
வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
அது யூபிலி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும்விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.
சுத்தமல்லாத மிருகத்தினுடைய தலையீற்றானால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.
அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.