Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Leviticus Chapters

Leviticus 14 Verses

Bible Versions

Books

Leviticus Chapters

Leviticus 14 Verses

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2 குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்.
3 ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே போய்; குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால்,
4 சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டைளையிடக்கடவன்.
5 பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் கொல்லச்சொல்லி,
6 உயிருள்ள குருவியையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்த்து,
7 குஷ்டம் நீங்கச் சுத்திரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனை சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.
8 சுத்திகரிக்கப்படுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் மயிர் முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாகும்படி ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்தில் பிரவேசித்து, தன் கூடாரத்துக்குப் புறம்பே ஏழுநாள் தங்கி,
9 ஏழாம் நாளிலே தன் தலையையும் தாடியையும் புருவங்களையும் தன்னுடைய மயிர்முழுவதையும் சிரைத்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.
10 எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒருவயதான பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், போஜனபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.
11 சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அவ்வஸ்துக்களையும் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.
12 பின்பு, ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,
13 பாவநிவாரணபலியும் சர்வாங்கதகனபலியும் இடும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.
14 அந்த குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசக்கடவன்.
15 பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,
16 தன் இடதுகையிலுள்ள எண்ணெயில் தன் வலதுகையின் விரலைத் தோய்த்து, தன் விரலினால் ஏழுதரம் அந்த எண்ணெயில் எடுத்து, கர்த்தருடைய சந்நிதியில் தெளித்து,
17 தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கபடுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும், முந்தப் பூசியிருக்கிற குற்றநிவாரண பலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி,
18 தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கபடுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
19 ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்கதகனபலியைக் கொன்று,
20 சர்வாங்கதகனபலியையும் போஜனபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான்.
21 அவன் இம்மாத்திரம் செய்யத்திராணியற்ற தரித்திரனாயிருந்தால், அவன் தன் பாவநிவிர்த்திக்கென்று அசைவாட்டும் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியையும், போஜனபலிக்கு எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும்,
22 தன் திராணிக்குத் தக்கபடி இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்று பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தும்படி வாங்கி,
23 தான் சுத்திகரிக்கப்படும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆசாரியனிடத்துக்குக் கொண்டுவருவானாக.
24 அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் போஜனபலியாக அசைவாட்டி,
25 குற்றநிவாரணபலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,
26 அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,
27 தன் இடதுகையிலுள்ள எண்ணெயிலே தன் வலதுவிரலைத் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளித்து,
28 தன் உள்ளங்கையில் இருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்தின்மேல் பூசி,
29 தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,
30 பின்பு, அவன் தன் திராணிக்கும் தகுதிக்கும் தக்கதாய் காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து,
31 அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி, போஜனபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
32 தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கக்கூடாத குஷ்டரோகியைக் குறித்த பிரமாணம் இதுவே என்றார்.
33 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
34 நான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டரோகத்தை நான் வரப்பண்ணினால்,
35 அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
36 அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத் தோஷத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய்,
37 அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக்கண்டால்,
38 ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாள் அடைத்துவைத்து,
39 ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,
40 தோஷம் இருக்கும் அவ்விடத்துக்கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
41 வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,
42 வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
43 கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச்செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால்,
44 ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.
45 ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கல்லுகளையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும்.
46 வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
47 அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்.
48 ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன்.
49 அப்பொழுது வீட்டிற்குத் தோஷங்கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து,
50 ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,
51 கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து,
52 குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து,
53 உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்.
54 இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும்,
55 வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக்குஷ்டத்துக்கும்,
56 தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் அடுத்த பிரமாணம்.
57 குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார்.

Leviticus 14:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×