பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.
நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.
நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்.
நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.