வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர் அடையும் பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமாயிருக்கவேண்டும்; நீளம் இருபத்தையாயிரங்கோலும், அகலம் பதினாயிரங்கோலுமாயிருப்பதாக.
இருபத்தையாயிரங்கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாயிருக்கும் ஐயாயிரங்கோலோவென்றால், பரிசுத்தமாயிராமல், குடியேறும் நகரத்துக்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருப்பதாக.
நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாயிருப்பதாக.
பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பதினாயிரங்கோலும் மேற்கே பதினாயிரங்கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராயிருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக ஊழியஞ்செய்கிறவர்களுக்கு ஆகாரமாயிருப்பதாக.
பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கும் நகரத்தின் காணிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், அர்ப்பிதநிலத்தினுடைய இருபத்தையாயிரங்கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைமட்டுக்கும், மேற்கிலே இருபத்தையாயிரங்கோலின் முன்பாக மேற்கு எல்லைமட்டுக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரான அது அதிபதியினுடையதாயிருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பிதநிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்.
சுதந்தரிக்கும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.