ஆகையால், நீ இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியது என்னவென்றால்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, நீங்கள் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமந்தபடியினால் நான் என் எரிச்சலினாலும் என் உக்கிரத்தினாலும் பேசினேன்,
ஆதலால், கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் கரத்தை உயர்த்துவேன், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகள் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய்ச் சுமப்பார்கள் என்று சொல்லுகிறேன்.
உங்கள்மேல் மனுஷரையும் மிருகஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்; பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
நான் உங்கள்மேல் என் ஜனமாகிய இஸ்ரவேலின் மனுஷரை நடமாடப்பண்ணுவேன், அவர்கள் உன்னைக் கையாளுவார்கள்; அவர்களுக்குச் சுதந்தரமாயிருப்பாய்; நீ இனிமேல் அவர்களைச் சாகக்கொடுப்பதில்லை.
நான் இனிமேல் புறஜாதிகள் செய்யும் அவமானத்தை உன்னிடத்திலே கேட்கப்பண்ணுவதுமில்லை, நீ ஜனங்களின் நிந்தையை இனிமேல் சுமப்பதுமில்லை; நீ இனிமேல் உன் ஜாதிகளைச் சாகக்கொடுப்பதுமில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாக தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது.
ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்தினிமித்தமும், அதை அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களால் தீட்டுப்படுத்தினதினிமித்தமும் நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றி,
அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய கிரியைகளின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன்.
அவர்கள் புறஜாதிகளிடத்தில் போனபோது அந்த ஜனங்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என் பரிசுத்தநாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.
ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தம் அல்ல, நீங்கள் வந்துசேர்ந்த புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்.
புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள்.
நான் இப்படிச் செய்வது உங்கள் நிமித்தமாக அல்லவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், இது உங்களுக்கு அறியப்பட்டிருக்கக்கடவது; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் வழிகளினிமித்தம் வெட்கி நாணுங்கள்.
கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.
பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டுவருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ, அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.