அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான்.
அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.
அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச்செய்தார்.
சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டு விழுந்தார்கள்.
அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.
அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.