Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

1 Kings Chapters

1 Kings 3 Verses

Bible Versions

Books

1 Kings Chapters

1 Kings 3 Verses

1 சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன்அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.
2 அந்நாட்கள் மட்டும் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்ததினால், ஜனங்கள் மேடைகளிலே பலியிட்டு வந்தார்கள்.
3 சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.
4 அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.
5 கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.
6 அதற்குச் சாலொமோன்: என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மனநேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்.
7 இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்.
8 நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.
9 ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.
10 சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
11 ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்,
12 உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.
13 இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை.
14 உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார்.
15 சாலொமோனுக்கு நித்திரை தெளிந்தபோது, அது சொப்பனம் என்று அறிந்தான்; அவன் எருசலேமுக்கு வந்து, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தி, தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துசெய்தான்.
16 அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
17 அவர்களில் ஒருத்தி: என் ஆண்டவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன்.
18 நான் பிள்ளைபெற்ற மூன்றாம் நாளிலே, இந்த ஸ்திரீயும் ஆண்பிள்ளை பெற்றாள்; நாங்கள் ஒருமித்திருந்தோம், எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை.
19 இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று.
20 அப்பொழுது, உமது அடியாள் நித்திரைபண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் மார்பிலே கிடத்திவிட்டாள்.
21 என் பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலமே நான் எழுந்திருந்தபோது, அது செத்துக் கிடந்தது; பொழுது விடிந்தபின் நான் அதை உற்றுப்பார்க்கும்போது, அது நான் பெற்ற பிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள்.
22 அதற்கு மற்ற ஸ்திரீ: அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள்.
23 அப்பொழுது ராஜா: உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,
24 ஒரு பட்டயத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்; அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.
25 ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாக பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான்.
26 அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள்.
27 அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான்.
28 ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.

1-Kings 3:4 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×