நீர்மட்டும் என் உடன் பிறந்தவனாய் இருந்தால்! என் அன்னையிடம் பால்குடித்த அண்ணனாயிருந்தால்! வெளியிலே நான் உம்மைக் கண்டால் முத்தமிடுவேன், என்னை எவரும் இகழ மாட்டார்கள்.
முடிவுரை: பாடகர்க்குழு: தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு பாலைவெளியிலிருந்து எழுந்து வரும் அவள் யார்? தலைமகன்: கிச்சிலி மரத்தடியில் நான் உன்னை எழுப்பினேன், அங்கே தான் உன் தாய் நோயுற்று உன்னைப் பெற்றாள், உன்னைப் பெற்றவள் உன்னைப் பெற வேதனையுற்றாள்.
நீ என்னை உன் இதயத்தின் மேல் முத்திரையாகவும், கையிலே இலச்சினையாகவும் பொறித்து வை. ஏனெனில் காதல் சாவைப் போல் வலிமையுள்ளது, காதல் வைராக்கியம் பாதாளம் போல் கொடியது; அதன் சுடர்கள் நெரூப்புச் சுடர்கள் போலும்! அதன் கொழுந்து கொடிய தீக்கொழுந்தையொக்கும்!
பெருங்கடலும் அன்பைத் தணிக்க முடியாது, வெள்ளப் பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது. பிற்சேர்க்கைகள்: அறிஞன் ஒருவனின் முதுமொழி: அன்பைப் பெறுவதற்காக ஒருவன் தன் வீட்டிலுள்ள செல்வங்களையெல்லாம் வாரி வழங்கினாலும், இகழ்ச்சியையே பெற்றுக் கொள்வான்.
பாகாலம்மோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அவர் அந்தத் திராட்சைத் தோட்டத்தைத் தம் காவலர்களிடம் ஒப்புவித்து அதன் பலனுக்காக ஒவ்வொருவனும் ஆயிரம் வெள்ளிக்காசு கொடுக்கும்படி சொன்னார்.