தலைமகன்: என்னே உன் அழகு! என் அன்பே! என்னே உன் அழகு! உன் முகத்திரைக்குப் பின்னால் இருக்கின்ற உன்னுடைய கண்கள் வெண்புறாக்கள். உனது கருங் கூந்தல் கலாத் மலைச் சரிவில் செல்லும் வெள்ளாட்டு மந்தையை ஒத்துள்ளது.
மயிர்கத்தரித்த பின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறும் ஆட்டு மந்தை போன்றவை உன் பற்கள்; அவ்வாடுகள் எல்லம் இரட்டைக் குட்டி போட்டன; அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
என் தங்காய்! என் மணமகளே! என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயே! உன் கண்களின் நோக்கு ஒன்றினாலும் உன் கழுத்து ஆரத்தின் ஒரு முத்தினாலும் உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயே!
உன் காதலின்பம் எவ்வளவு இனிமை! என் தங்காய்! என் மணமகளே! உன் காதலின்பம் திராட்சை இரசத்தைக் காட்டிலும், உன் தைலங்களின் மணம் பரிமளத்தைக் காட்டிலும், எவ்வளவோ மிகுந்த சிறப்புள்ளவை.
என் மணமகளே! உன் இதழ்கள் தேறலைச் சிந்துகின்றன; உன் நாவின் அடியில் தேனும் பாலும் இருக்கின்றன; உன் ஆடைகள் பரப்பும் நறுமணமோ லீபானின் நறுமணம் போல் கமழ்கின்றதே.