அவர்களை விட்டுச் சற்றப்பால் சென்றதுமே என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரைக் கண்டு கொண்டேன்; அவரைப் பற்றிக் கொண்டேன், விடவே இல்லை; என் தாய்வீட்டுக்கு- என்னைக் கருத்தாங்கிப் பெற்றவளின் அறைக்குள் அவரைக் கொண்டு வந்தேன்.
மூன்றாம் கவிதை: பாலை வெளியிலிருந்து எழுந்து வரும் அது என்ன? புகைத் தூண் போல் தோன்றுகிறதே! வெள்ளைப் போளமும் சாம்பிராணியும் பல்வகை நறுமணப் பொடிகளும் கலந்து நறுமணம் கமழ வருவது யாதோ?
அவர்கள் அனைவரும் வாளோடு நிற்கின்றனர், போர் செய்வதில் அவர்கள் வல்லவர்கள்; இரவு நேரத்தின் திடீர்த் தாக்கல்களை எதிர்க்கவே தத்தம் இடையில் வாள் அணிந்திருக்கின்றனர்.
சீயோனின் மங்கையரே, வெளியில் வந்து சாலமோன் அரசரைப் பாருங்கள்: அவருடைய உள்ளம் மகிழ்ச்சியுற்ற நாளாகிய அவருடைய திருமணத்தின் நாளினிலே, அவர் அன்னை அவருக்குச் சூட்டிய மணி முடியோடு வீற்றிருக்கிறார்.