இவற்றைச் செய்பவர்களின் மேல் தீர்ப்புக் கூறும் நீயும் இவற்றையே செய்து வருகிறாய். நீ மட்டும் கடவுளின் தீர்ப்புக்குத் தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறாயா?
உன் முரட்டுத் தனம் உன்னை மனந்திரும்ப விடவில்லை; ஆகையால், கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில் உன்மேல் விழப் போகும் தண்டனையை நீ சேர்த்து வைக்கின்றாய்.
ஏனெனில், திருச்சட்டத்தைக் கேட்பதால் மட்டும் யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
திருச்சட்டத்தைப் பெற்றிராத புறவினத்தார் அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகேவே நிறைவேற்றும்போது, அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாத போதிலும் அவர்கள் உள்ளமே சட்டமாய் அமைகிறது.
திருச்சட்டம் கற்பிக்கும் செயல்முறை தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் எண்பிக்கிறார்கள்; ஏனெனில், அவர்களுடைய மனச்சான்று அதற்குச் சாட்சியாய் நிற்கிறது. பிறர் செய்வது குற்றமா, குற்றமில்லையா என அவர்கள் தங்கள் மனத்திற்குள் தீர்ப்பிடுவதும் அதற்குச் சாட்சி.
நான் அறிவிக்கும் நற்செய்தியில் உள்ளதுபோல, இயேசுகிறிஸ்துவின் வாயிலாய்க் கடவுள் மனிதர் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றைத் தீர்ப்பிடும் நாளில் மேற்சொன்னவையெல்லாம் வெளியாகும்.
திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால் விருத்தசேதனத்தால் பயனுண்டு, மெய்தான்; ஆனால் திருச்சட்டத்தை மீறுபவனாய் இருந்தால், நீ விருத்தசேதனம் பெற்றிருந்தும் பெறாதவனாகிவிட்டாய்.
ஆகையால், விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஒருவன் திருச்சட்டத்தின் முறைமைகளைக் கடைபிடித்தால், விருத்தசேதனம் இல்லாத நிலை, விருத்தசேதனம் உள்ள நிலைபோல் கருதப்படும் அன்றோ?
உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாமல் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவன் எழுதிய சட்டத்தையும் விருத்த சேதனத்தையும் பெற்றிருந்தும், திருச் சட்டத்தை மீறுகின்ற உனக்குத் தீர்ப்பிடுவான்.
ஆனால், உள்?ர யூதனாய் இருப்பவனே யூதன்; எழுதிய சட்டத்தின்படியல்லாமல், ஆவியானவர் அருளியபடி உள்ளத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே, விருத்தசேதனம். அத்தகையவன் மனிதரிடமிருந்து அன்று, கடவுளிடமிருந்தே பாராட்டுப் பெறுவான்.