பின்பு பிரம்புபோன்றதோர் அளவுகோலை என் கையில் கொடுத்துச் சொன்னதாவது; "எழுந்து, கடவுளின் ஆலயத்தையும் அதன் பீடத்தையும் அளவிடு; அங்கே வழிபடுவோரையும் கணக்கிடு.
ஆலயத்திற்கு வெளியே உள்ள முற்றத்தையோ அளக்காமல் விட்டுவிடு. ஏனெனில், அது புறவினத்தார் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. பரிசுத்த நகர் அவர்களால் நாற்பத்திரண்டு மாதம் மிதிபடும்.
அவர்களுக்குத் தீங்கு செய்ய யாராவது முற்பட்டால் அவர்கள் வாயினின்று தீ வெளிப்பட்டு எதிரிகளை விழுங்கி விடும். ஆம், அவர்களுக்குத் தீங்கு செய்ய முற்படுபவனுக்கு இவ்வாறு அழிவு வந்தே தீரும்.
தாங்கள் இறைவாக்குரைக்கும் நாளில் மழை பொழியாதபடி வானத்தை அடைத்துவிட அவர்களுக்கு வல்லமை இருக்கும். விரும்பும் போதெல்லாம் அவர்கள் தண்ணீரை இரத்தமாக்கவும், மண்ணுலகை வாதைகள் பலவற்றால் வாட்டவும் அவர்களுக்கு வல்லமை இருக்கும்.
அவர்களுடைய பிணங்கள் அந்த மாநகரத்தின் பெரு வீதியில் கிடக்கும். அந்நகரைச் சோதோம் என்றும், எகிப்து என்றும் உருவகப்படுத்துவர். அவர்களுடைய ஆண்டவர் அறையுண்டது அந்நகரிலேதான்.
பல இனங்கள், குலங்கள், மொழிகள் நாடுகளைச் சார்ந்த மனிதர் மூன்றரை நாளளவு அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடைப்பதைப் பார்ப்பார்கள். அவற்றைக் கல்லறையில் அடக்கஞ் செய்யவிடமாட்டார்கள்.
மண்ணில் வாழ்வோர் இதைப் பார்த்து, மகிழ்ச்சி கொண்டாடுவர். அந்த மகிழ்ச்சியில் ஒருவர்க்கொருவர் அன்பளிப்புகள் வழங்கிக்கொள்வர். ஏனெனில், இவ்விரு இறைவாக்கினரும் மண்ணில் வாழ்ந்தவர்களுக்குப் பெருந்தொல்லையாக இருந்தார்கள்.
மூன்றரை நாளுக்குப்பின் உயிரளிக்கும் ஆவி கடவுளிடமிருந்து வந்து அவர்களுக்குள் நுழைந்தது; நுழையவே, அவர்கள் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்தவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது.
அப்போது விண்ணகத்தில் உண்டான பெரியதொரு குரல், "இங்கே வாருங்கள்" என்று தங்களுக்குச் சொல்வதை அந்த இறைவாக்கினர் கேட்டனர். உடனே பகைவர் கண்ணுக்கெதிரிலேயே அவர்கள் மேகத்தின் மீது விண்ணகத்திற்குச் சென்றார்கள்.
அதே நேரத்தில் ஒரு பெரும் நில நடுக்கம் உண்டாயிற்று. நகரத்தின் பத்திலொரு பாகம் இடிந்து விழுந்தது. அந்த நில நடுக்கத்தில் ஏழாயிரம் பேர் மடிந்தனர். எஞ்சியிருந்தோர் அச்சமேலிட்டு விண்ணகக் கடவுளுக்கு மகிமை அளித்தனர்.
பின் ஏழாவது வானதூதர் எக்காளம் ஊதினார். விண்ணகத்தில் பேரொலிகள் உண்டாகி, "இவ்வுலகை ஆளும் உரிமை நம் ஆண்டவருக்கும் அவரின் மெசியாவுக்கும் உரியதாயிற்று; அவர் என்றென்றும் ஆட்சி செலுத்துவார்" என்று முழங்கின.
ஏனெனில், உம் பெரும் வல்லமையைக் காட்டி ஆட்சி செலுத்தலானீர். புறவினத்தார் சினந்தெழுந்தனர்; உம் சினமும் வெளிப்பட்டது. இறந்தோருக்குத் தீர்ப்பிடவும், உம் அடியார்கள், இறைவாக்கினர், பரிசுத்தர்கள் உம் பெயருக்கு அஞ்சுவோர், சிறியோர், பெரியோர் அனைவர்க்கும் கைம்மாறு அளிக்கவும், மண்ணுலகை அழிப்பவர்களை அழித்து விடவும் நேரம் வந்துவிட்டது.
பின்பு விண்ணகத்தில் கடவுளின் ஆலயம் திறக்கப் பட்டது. உடன்படிக்கையின் பேழை அவரது ஆலயத்தினுள் காணப்பட்டது. மின்னல்களும் பேரிரைச்சலும் இடிமுழுக்கமும் நில நடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின.