Indian Language Bible Word Collections
Psalms 51:19
Psalms Chapters
Psalms 51 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 51 Verses
1
இறைவா, உம் இரக்கத்திற்கேற்ப என்மீது இரக்கம் வையும்: உம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என் குற்றங்குறைகளைப் போக்கிவிடும்.
2
நான் செய்த குற்றத்தை என்னிடமிருந்து முற்றிலும் கழுவிப் போக்கிவிடும்: என் பாவத்தைக் கழுவி என்னைத் தூய்மைப்படுத்தும்.
3
என் குற்றங்குறைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்: நான் செய்த பாவம் எந்நேரமும் என் கண் முன்னே நிற்கின்றது.
4
உமக்கெதிராக மட்டுமே பாவம் செய்தேன்; உம் திரு முன்னிலையிலேயே செய்தேன்: உமது தீர்ப்பில் உம் நீதி விளங்குகின்றது, உமது நியாய வாக்கினில் உம் நேர்மை துலங்குகின்றது.
5
இதோ, குற்றமுள்ள நிலையில் நான் பிறந்தேன்: பாவ நிலையிலேயே என் அன்னை என்னைக் கருத்தரித்தாள்.
6
இதோ! இதயத்தின் நேர்மையைக் கண்டு நீர் பெரிதும் மகிழ்கின்றீர்: இதயத்தின் உள்ளிருந்தே எனக்கு மெய்ஞானம் புகட்டுகின்றீர்.
7
ஈஸ்ஸோப் புல்லால் என் மேல் தெளிந்தருளும், நான் தூய்மையாவேன்: நீர் என்னைக் கழுவியருளும், வெண் பனியிலும் வெண்மையாவேன்.
8
அகமகிழ்வும் அக்களிப்பும் என் செவியில் விழச்செய்யும்: நொறுங்குண்ட எலும்புகளும் அக்களிப்படையும்.
9
என் பாவங்களினின்றும் உம் திருமுகத்தைத் திருப்பிக்கொள்ளும்: என் குற்றங்களையெல்லாம் போக்கி விடும்.
10
தூயதோர் உள்ளத்தை, இறைவா, நீர் என்னகத்தே உருவாக்கும்: உறுதி தரும் ஆவியை என்னுள் மலரச் செய்யும்.
11
உம் திருமுன்னிருந்து என்னைத் தள்ளி விடாதேயும், உமது பரிசுத்த ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும்.
12
உமது மீட்பால் வரும் மகிழ்ச்சியை எனக்களித்தருளும்; உமது பெருந்தன்மையான மனப்பான்மையில் என்னை உறுதிப்படுத்தும்.
13
தீயவர்களுக்கு உம் வழிகளை நான் புகட்டுவேன்: பாவிகள் உம்மிடம் திரும்பி வருவர்.
14
இறைவா, என் மீட்பரான இறைவா, இரத்தப் பழிக்குரிய தண்டனையினின்று விடுவித்தருளும்: உமது நீதியைக் கண்டு என் நாவு ஆர்ப்பரிக்கும்.
15
ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்து விடும்: என் வாய் உமது புகழ்ச்சியை எடுத்துரைக்கும்.
16
ஏனெனில்,பலிகளில் நீர் இன்பம் கொள்வதில்லை: தகனப் பலி கொடுத்தாலும் அதை நீர் ஏற்பதில்லை.
17
இறைவா, நான் உமக்குச் செலுத்த வேண்டிய பலி நொறுங்கிய உள்ளமே: தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் புறக்கணிப்பதில்லை.
18
உம் நன்மைத் தனத்திற்கேற்ப, ஆண்டவரே, சீயோனுக்குக் கருணை காட்டும்: யெருசலேமின் மதில்களை மீளவும் எழுப்புவீராக.
19
அப்போது முறையான பலிகளையும் காணிக்கைகளையும் தகனப் பலிகளையும் ஏற்றுக்கொள்வீர்: அப்போது உமது பீடத்தில் இளங் காளைகளைப் பலியாய் ஒப்புக்கொடுப்பர்.