அப்தியாஸ் கண்ட காட்சியாவது: இறைவனாகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறார்: ஏற்கனவே தூதன் ஒருவன் மக்களினங்களிடம் சென்று, "எழுந்து கிளம்புங்கள்! அதற்கு எதிராகப் போருக்குப் புறப்படுவோம்!" என்றதை நாம் கேட்டிருக்கிறோம்.
கற்பாறைகளின் பிளவுகளில் வாழ்ந்து கொண்டு, உன் அரியணையை உயரத்தில் ஏற்படுத்தி, "என்னைத் தரை மட்டும் தாழ்த்தக்கூடியவன் யார்?" என உன் உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே, உன் இதயத்தின் இறுமாப்பு உன்னை ஏமாற்றி விட்டது.
நாட்டின் எல்லை வரை உன்னைப் பகைவர்கள் விரட்டினார்கள், உன்னுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் யாவரும் உன்னை ஏய்த்தனர்; உன்னோடு நட்புறவாடியவர்கள் உனக்குக் கண்ணி வைத்தனர்," அவனுக்கு மூளையில்லை" என்று சொன்னார்கள்.
நீ உதவிசெய்ய முன்வராமல் விலகி நின்ற அந்நாளில்- அந்நியர்கள் அவன் செல்வத்தை வாரிச் சென்ற அந்நாளில்- வெளி நாட்டார் அவன் வாயில்கள் வழியாய் நுழைந்து யெருசலேமுக்காகத் தங்களுக்குள் சீட்டுப் போட்ட போது, நீயும் அவர்களுள் ஒருவனாக இருந்தாயே!
உன் சகோதரனுடைய நாளைக் கண்டு, அவன் துன்ப நாளைக் கண்டு நீ மகிழ்ச்சியடையாதே; யூதாவின் மக்களைப் பார்த்து, அவர்களின் அழிவுநாளில் அக்களியாதே. அவர்களின் வேதனை நாளில் அவர்களைப் பழித்துக் காட்டாதே.
அவர்களுள் தப்பியோடுகிறவர்களை வெட்டி வீழ்த்தும்படி நாற்சந்திகளில் காத்து நிற்காதே; அவர்களின் வேதனை நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக் கொடுக்காதே.
ஏனெனில் ஆண்டவரின் நாள் எல்லா மக்களினங்கள் மேலும் வரப் போகிறது. பிறருக்கு நீ செய்தது போலவே உனக்கும் செய்யப்படும், உன் செயல்கள் உன் தலை மேலேயே சுமத்தப்படும்.
நமது பரிசுத்த மலை மேல் நம் கோபத்தின் பாத்திரத்தை நீங்கள் குடித்தது போலவே, புறவினத்தார் அனைவரும் தாராளமாய் அதைக் குடிப்பார்கள்; ஆம், மேலும் மேலும் குடிப்பார்கள், கடைசித் துளிவரையில் குடிப்பார்கள், இருந்தும் இல்லாதவர்களைப் போல் ஆவார்கள்.
ஆனால் சீயோன் மலையில் தப்பிப் பிழைத்தவர்கள் இருப்பார்கள், அதுவும் பரிசுத்த இடமாய் இருக்கும்; தங்களை ஆட்கொண்டவர்களை இப்பொழுது யாக்கோபு வீட்டார் ஆட்கொள்வர்.
இஸ்ராயேல் மக்களுள் இந்தப் படையிலிருந்து நாடு கடத்தப்பட்டோர் பெனீசியாவிலிருந்து சரெப்தா வரையில் உரிமையாக்கிக் கொள்வர்; யெருசலேமிலிருந்து செப்பாராதுக்கு நாடு கடத்தப்பட்டோர் தென்னாட்டு நகரங்களை உரிமையாக்கிக் கொள்வர்.