ஆண்டவர் நியமித்திருக்கிற பலியின் சடங்குமுறை என்னவென்றால்: இஸ்ராயேல் மக்கள் பழுதற்றதும் மாசில்லாததும் நுகத்தடி சுமக்காததுமாகிய நல்ல வளர்ச்சியடைந்த செந்நிறமுள்ள ஒரு கிடாரியை உங்களிடம் கொண்டுவர வேண்டுமென்று சொல்லுங்கள்.
சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு போய்ப் பாளையத்திற்குப் புறம்பே மிகச் சுத்தமான ஓர் இடத்திலே கொட்டி வைப்பான். அது இஸ்ராயேல் மக்களாகிய சபையாரின் காவலிலே இருக்கும். அவர்கள் அதைத் தண்ணீரிலே கலந்து தெளிக்கும் தீர்த்தமாக உபயோகித்துக் கொள்வார்கள். (உள்ளபடி) பாவ நிவாரணமாக அந்தக் கிடாரி சுட்டெரிக்கப்பட்டது.
கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் ஆடைகளைத் தோய்த்து மாலைவரையிலும் தீட்டுப்பட்டிருப்பான். இந்தச் சட்டம் புனித சட்டமென்று இஸ்ராயேல் மக்களும் அவர்களிடம் தங்குகிற அந்நியர்களும் நித்திய கட்டளையாக அனுசரிக்கக் கடவார்கள்.
அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அந்தத் தீர்த்தத்தினாலே தெளிக்கப்பட்டால் அவனுடைய தீட்டு கழிக்கப்படும். அவன் மூன்றாம் நாளிலே தெளிக்கப்படாமலிருந்தால், ஏழாம் நாளிலே தெளிக்கப்பட்டாலும் அவன் தீட்டுக் கழியாது.
கூடாரத்தில் ஒரு மனிதன் இறந்தால் அதற்கடுத்த சட்டமாவது: அவனுடைய கூடாரத்திலே புகுகிற யாவரும், அங்கே இருக்கிற எல்லாத் தட்டுமுட்டுகளும்ஏழு நாள் வரையிலும் தீட்டுப்பட்டிருக்கும்.
பிறகு தீட்டுப்படாமலிருக்கும் ஒரு மனிதன் அந்தத் தீர்த்தத்தில் ஈசோப்பைத் தோய்த்துக் கூடாரத்தின் மேலும், பனி முட்டுகளின் மேலும் தொட்டதினால் தீட்டுக்கொண்ட எல்லா மனிதர் மேலும் தெளிப்பான்.
இவ்விதமே, தீட்டுப்படாதவன் மூன்றாம் ஏழாம் நாட்களில் தீட்டுப்பட்டவனைத் தெளித்துச் சுத்திகரிப்பான். இப்படி ஏழாம் நாளில் சுத்திகரத்தை அடைந்தவனோ தண்ணீரிலே குளித்துத் தன் ஆடைகளைத் தோய்த்து, மாலை வரையிலும் தீட்டுப்பட்டிருப்பான்.
தீட்டுப்பட்டிருக்கிறவன் இப்படிப்பட்ட சடங்குப்படி சுத்திகரிக்கப்படாவிடில், அவன் ஆண்டவருடைய திரு உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினானென்றும், சுத்திகரிக்கிற தீர்த்தத்தால் தெளிக்கப்படவில்லையென்றும் சபையில் இராதபடிக்குக் கொலை செய்யப்படுவான்.
இக் கட்டளை நித்திய சட்டமாக இருக்கும். மேற்படி தீர்த்தத்தைத் தெளித்தவனும் தன் ஆடைகளைத் தோய்க்கக்கடவான். சுத்திகரித்த தீர்த்தத்தைத் தொடுபவனும் மாலைவரையிலும் தீட்டுப்பட்டவனாக இருப்பான்.