குருத்துவத்தைப் பற்றிய அக்கிரமத்தையோ நீயும் உன் புதல்வர்களும் சுமந்து கொள்வீர்கள். உன் தந்தையாகிய லேவியின் செங்கோலை ஏந்தி, அவனுடைய கோத்திரத்தாராகிய உன் சகோதரரைச் சேர்த்துக் கொள். அவர்கள் உனக்கு உதவி செய்யவும், உன் ஏவலைச் செய்யவும் தயாராயிருக்கும்படி பார்த்துக் கொள். ஆனால், நீயும் உன் புதல்வரும் சாட்சியக் கூடாரத்துக்குள்ளே ஊழியம் செய்வீர்கள்.
லேவியர்கள் உன் சொற்படி கேட்டு, ஆலயத்தைச் சேர்ந்த எல்லா வேலைகளுக்கும் காத்துக்கொண்டேயிருப்பார்கள். ஆனால், அவர்களும் நீங்களும் ஒருங்கு சாகாதபடிக்கு அவர்கள் புனித இடத்தின் பாத்திரங்களையும் தொடாமல் பீடத்தையும் அணுகாமல் எச்சரிக்கையாய் இருக்கக்கடவார்கள்.
அவர்கள் உன்னுடன் இருந்து, சாட்சியக் கூடாரத்தைக் காக்கவும் கூடாரத்துக்கடுத்த பணிவிடையெல்லாம் செய்யவும் கடவார்கள். அந்நியன் ஒருவனும் உங்களோடு வந்து சேரலாகாது.
ஆசாரக் கூடாரத்திலே பணிவிடை செய்ய உங்கள் சகோதரராகிய லேவியரை நாம் இஸ்ராயேல் மக்களின் நடுவிலிருந்து பிரித்து ஆண்டவருக்கு நேர்ச்சை செய்து உங்களுக்குத் தத்தம் செய்தோம்.
நீயும் உன் புதல்வர்களும் உங்கள் குருத்துவத்தைக் கவனமாய்க் காப்பாற்றுங்கள். பலிபீடத்துக்கடுத்த ஊழியத்தையும் திரைக்கு உட்புறத்தில் செய்யவேண்டிய பணிவிடைகளையும் நீங்களே செய்து முடிக்க வேண்டும். யாரேனும் ஓர் அந்நியன் அவற்றின் கிட்ட வந்தால் கொலை செய்யப்படுவான் என்றார்.
மீண்டும் ஆண்டவர் ஆரோனை நோக்கி: இதோ நம்முடையவையான முதற் பலன்களை உன் காவலிலே ஒப்புவித்து விட்டோம். இஸ்ராயேல் மக்களால் படைக்கப்படும் எல்லாவற்றையும் உங்கள் குருத்துவ ஊழியத்திற்குப் பரிசிலாக உனக்கும் உன் புதல்வர்களுக்கும் தந்தோம். அது நித்திய சட்டமாம்.
ஆகையால், ஆண்டவருக்குக் காணிக்கை செய்து படைக்கப்பட்டவைகளில் உன்னுடையனவாய் இருப்பவை எவையென்றால்: அவர்கள் படைக்கும் எல்லாக் காணிக்கையும், பானபோசனப் பலிகளும், பாவநிவாரணப் பலிகளும், குற்ற நிவாரணப் பலிகளும் ஆகிய இவைகள் மிகவும் புனிதமானபடியால் உனக்கும் உன் புதல்வர்களுக்கும் சொந்தப் பாகமாகும்.
இஸ்ராயேல் மக்கள் நேர்ந்தும் மனமொத்து ஒப்புக்கொடுக்கிறவைகளான முதற்பலன்களை உனக்கும் உன் புதல்வர் புதவியர்க்கும் நித்திய உரிமையாக அளித்திருக்கிறோம். உன் வீட்டாரில் பரிசுத்தன் எவனோ அவன் அவற்றை உண்பான்.
மண்ணில் தோன்றி முதலில் பழுத்த பலன்களில் அவர்கள் ஆண்டவருக்குக் கொண்டு வந்து ஒப்புக்கொடுப்பனவெல்லாம் உன்னுடையவனவாகும். உன் வீட்டில் சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவற்றை உண்ணலாம்.
மனிதர்களிலும் சரி, மிருகங்களிலும் சரி - கருப்பையைத் திறந்து பிறக்கும் தலையீற்றில் ஆண்டவருக்குச் செலுத்தப்படுவன எல்லாம் உனக்கு உரியன. ஆயினும், மனிதனின் முதற்பேற்றுக்குப் பதில் பணம் வாங்குவாய், சுத்தமில்லாத உயிர்ப்பிராணியின் தலையீற்றையும் மீட்கப்படச் செய்வாய்.
இப்படி மீட்கப்பட வேண்டியவை ஒரு மாதத்திற்கு மேற்பட்டவையானால், புனித இடத்தின் சீக்கல் கணக்குப்படி, ஐந்து சீக்கலால் மீட்கப்படும். ஒரு சீக்கலில் இருபது ஒபோல் உண்டு.
இஸ்ராயேல் மக்களால் புனித இடத்திற்கென்று ஆண்டவருக்குச் செலுத்தப்படும் புதுப் பலன்கள்யாவும் உனக்கும் உன் புதல்வர் புதல்வியர்க்கும் நித்திய முறைமையாகத் தந்திருக்கின்றோம். ஆண்டவருடைய முன்னிலையில் இது உனக்கும் உன் புதல்வர்களுக்கும் என்றைக்கும் செல்லும் உப்பு உடன்படிக்கையாம் என்றார்.
மீண்டும் ஆண்டவர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய நாட்டில் நீங்கள் ஒன்றையும் உரிமையாக்கிக் கொள்ளவேண்டாம். அவர்கள் நடுவே உங்களுக்குப் பங்கு கிடையாது. இஸ்ராயேல் மக்கள் நடுவில் நாமே உன் பங்கும் உன் சொத்துமாய் இருக்கிறோம்.
ஆலயத்தில் நமக்குப் பணிவிடை செய்து மக்களின் பாவங்களைச் சுமந்து கொள்ளும் லேவியின் புதல்வர்களுக்கு மட்டுமே அவை சொந்தம். இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய சட்டமாய் இருக்கும். அவர்களுக்கு வேறு சொத்து இராது.
தங்கள் வாழ்க்கைக்கும் தேவைகளுக்கும் நாம் கொடுத்திருக்கிற பத்திலொரு பங்கை அவர்கள் வாங்கி, தங்களுக்குப் போதுமென்று மகிழ்ச்சியாய் இருக்கக்கடவார்கள் என்பார்.
நீ லேவியருக்குக் கட்டளையாகச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ராயேல் மக்கள் கையில் வாங்கிக் கொள்ளும்படி உங்களுக்கு நாம் உரிமையாகக் கொடுத்த பத்திலொரு பங்கை நீங்கள் வாங்கும்போது அதில் பத்திலொரு பங்கை ஆண்டவருக்குச் செலுத்தக்கடவீர்கள்.
இப்படியே நீங்கள் யார் யாரிடமிருந்து (பத்திலொரு பங்கை) வாங்கியிருப்பினும், அதில் கொஞ்சம்ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்த பின்பு, குருவாகிய ஆரோனுக்குக் கொடுக்க வேண்டும்.
மீண்டும் நீ அவர்களுக்குச் சொல்வாய். உங்கள் பத்திலொரு பங்கில் சிறந்தவைகளையும் முதல் தரமானவைகளையும் நீங்கள் செலுத்துகையில் அது களத்தின் தகனப் பலியைப் போலும் கொடிமுந்திரிப்பழ ஆலையின் புதுப்பலனைப் போலும் உங்களுக்கு எண்ணப்படும்.
அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்கள் வீடுகளில் எவ்விடத்திலேனும் உண்ணலாம். ஏனென்றால், நீங்கள் சாட்சியக் கூடாரத்தில் செய்யும் பணிவிடைக்குச் சம்பளம் அதுவே.
மேலும், இஸ்ராயேல் மக்கள் படைத்தவைகளை நீங்கள் தீட்டுப்படுத்தாதபடிக்கும், உயிர்ச் சேதம் உங்களுக்கு வராதபடிக்கும், நீங்கள் சிறந்தவைகளையும் அதிகம் கொழுத்தவைகளையும் உங்களுக்காகப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டாம். இப்படிப்பட்ட பாவத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கக்கடவீர்கள் என்பாய் (என்றார்).