English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Nehemiah Chapters

Nehemiah 8 Verses

1 ஏழாவது மாதத்தில் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் ஒன்று கூடினர். ஆண்டவர் இஸ்ராயேலுக்குக் கொடுத்திருந்த மோயீசனின் திருச்சட்டநூலைக் கொண்டுவருமாறு திருச்சட்ட வல்லுநர் எஸ்ராவை வேண்டினார்.
2 அவ்வாறு ஏழாம் மாதம் முதல் நாள் குரு எஸ்ரா திருச்சட்ட நூலைப் புரிந்து கொள்ளும் திறமை படைத்த ஆண், பெண் அடங்கிய சபை முன்னிலையில் கொண்டு வந்தார்.
3 தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் காலை முதல் நண்பகல் வரை அவர்கள் முன் அதை அவர் வாசித்தார். எல்லா மக்களும் திருச்சட்ட நூலுக்குக் கவனமாய்ச் செவிமடுத்தனர்.
4 திருச்சட்ட வல்லுநர் எஸ்ராவோ பேசுவதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு மேடையின் மேல் நின்று கொண்டிருந்தார். அவருக்கு வலப்பக்கத்தில் மத்தத்தியாஸ், செமேயியா, அனியா, ஊரியா, எல்சியா, மாசியா ஆகியோரும், இடப்பக்கத்தில் பதாயியா, மிசாயேல், மெல்கியா, காசூம், கஸ்பதனா, சக்கரியா, மொசொல்லாம் ஆகியோரும் நின்று கொண்டிருந்தனர்.
5 அப்பொழுது எஸ்ரா எல்லா மக்களையும் பார்க்கும் அளவுக்கு உயரமான இடத்தில் நின்று கொண்டு அவர்கள் முன்னிலையில் நூலைத் திறந்தார். உடனே மக்கள் எல்லாரும் எழுந்து நின்றனர்.
6 அப்பொழுது எஸ்ரா ஆண்டவராகிய மகத்தான கடவுளைத் துதித்து வாழ்த்தவே, மக்கள் எல்லாரும் தங்கள் கைகளை உயர்த்தி, "ஆமென், ஆமென்" என்று சொல்லிப் பணிந்து, முகங்குப்புற விழுந்து கடவுளைத் தொழுதார்கள்.
7 மேலும் வேலியரான யோசுவா, பானி, செரேபியா, யாமீன், ஆக்கூப், சேப்தாயி, ஓதியா, மாசியா, கெலித்தா, அசாரியாஸ், யோசுபாத், கானான், பலாயியா ஆகியோர் திருச்சட்டநூலை மக்களுக்கு விளக்கிக் கூறினார்கள். அப்பொழுது மக்கள் தங்கள் இடத்திலேயே நின்று கொண்டிருந்தனர்.
8 அவர்கள் மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும் பொருளோடும் கடவுளின் திருச்சட்ட நூலை வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.
9 ஆளுநர் நெகேமியாவும், குருவும் மறைநூல் அறிஞருமான எஸ்ராவும், லேவியர்களும் மக்கள் அனைவர்க்கும் திருச்சட்டத்தின் பொருளை விளக்கிக் கூறினர். "கடவுளான ஆண்டவரின் புனித நாள் இதுவே! எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்" என்றனர். ஏனெனில் எல்லா மக்களும் திருச்சட்ட நூலை வாசிக்கக் கேட்டுக் கண்ணீர்விட்டு அழுது கொண்டேயிருந்தனர்.
10 மீண்டும் எஸ்ரா அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு இனிய திராட்சை இரசத்தைக் குடித்து, உண்ண இல்லாதவர்களுக்கு உணவு அனுப்பி வையுங்கள். ஏனெனில், ஆண்டவரின் புனித நாள் இதுவே! எனவே வருந்த வேண்டாம். ஆண்டவரில் மகிழ்வதிலேயே உங்களுடைய ஆற்றல் அடங்கியிருக்கிறது" என்றார்.
11 லேவியர்களோ எல்லா மக்களையும் பார்த்து, "அமைதியாயிருங்கள்; ஏனெனில் இது புனித நாள். எனவே கவலைப்படாதீர்கள்" என்று சொல்லி அவர்கள் அமைதியாய் இருக்கச் செய்தனர்.
12 எஸ்ரா கூறியதைப் புரிந்துகொண்ட எல்லா மக்களும் உண்டு குடிக்கவும், உணவு அனுப்பி வைத்து மகிழ்ச்சி கொண்டாடவும் புறப்பட்டுப் போனார்கள்.
13 மறுநாள் எல்லாக் குலத் தலைவர்களும் குருக்களும், லேவியரும் திருச்சட்ட வல்லுநரான எஸ்ராவிடம் கூடி வந்தனர்; திருச்சட்ட நூலைத் தங்களுக்கு விளக்கியருளுமாறு வேண்டினர்.
14 அப்பொழுது, "ஏழாம் மாதத் திருவிழாவின் போது இஸ்ராயேல் மக்கள் கூடாரங்களில் தங்கியிருக்க வேண்டும்" என்று ஆண்டவர் மோயீசன் வழியாய் அருளியிருந்த திருச்சட்ட நூலில் எழுதியிருக்க அவர்கள் கண்டனர்.
15 அதைக் கேட்டவுடனே மக்கள், "திருச்சட்ட நூலில் எழுதப்பட்டுள்ளவாறே கூடாரங்கள் அமைப்பதற்காக, நீங்கள் மலைகளுக்குப் போய் அங்கிருந்து ஒலிவ மரம், காட்டு ஒலிவ மரம், மிருதுச் செடி, ஈந்து, மற்றும் தழைத்துள்ள மரங்களின் கிளைகளையும் கொண்டு வாருங்கள்" என்று தங்களுடைய நகரங்கள் எல்லாவற்றிலும் யெருசலேமிலும் பறைச்சாற்றினர்.
16 எனவே மக்கள் வெளியே சென்று தழைகளைக் கொண்டு வந்து தத்தம் வீட்டு மெத்தையின் மேலும் தத்தம் முற்றங்களிலும் ஆலய வளாகத்திலும் தண்ணீர் வாயில் வளாகத்திலும், எப்பிராயிம் வாயில் வளாகத்திலும் தங்களுக்குக் கூடாரங்களை அமைக்கத் தொடங்கினர்.
17 அவ்வாறே அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தோர் அனைவரும் கூடாரங்களை அமைத்து அங்குத் தங்கியிருந்தனர். நூனின் மகன் யோசுவாவின் காலம் தொட்டு அன்று வரை இஸ்ராயேல் மக்கள் இவ்விதம் செய்ததில்லை. எனவே மக்கள் அன்று பெரு மகிழ்ச்சி கொண்டாடினர்.
18 எஸ்ராவோ முதல் நாள் தொடங்கிக் கடைசி நாள் வரை ஒவ்வொரு நாளும் திருச்சட்ட நூலை வாசித்து வந்தார். மக்கள் ஏழு நாளளவும் திருவிழாக் கொண்டாடினர். எட்டாம் நாளோ கட்டளைப்படி மாபெரும் சபையாய் ஒன்று கூடினர்.
×

Alert

×