தன் சகோதரர் முன்னிலையிலும் சமாரிய மக்கள் முன்னிலையிலும், "இந்த அற்ப யூதர்கள் செய்வதைப் பார்த்தீர்களா? மக்கள் அவர்களைச் சும்மா விடுவார்களா? பலியிடலாம் என்று அவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள்! ஒரு நாளில் வேலையை முடித்துவிட அவர்களால் முடியுமா? எரிந்து போன சாம்பல் குவியலிலிருந்து கற்களை உண்டாக்க அவர்களால் இயலுமா?" என்று இழிவாய்ப் பேசினான்.
அருகில் நின்றுகொண்டிருந்த அம்மோனியனான தொபியாசு வாய் திறந்து, "அவர்கள் விருப்பம் போல் கட்டட்டும்! அவர்கள் கட்டும் இக்கல் மதில் மேல் ஒரு நரி ஏறிச் சென்றால் கூட இடிந்து விடும்" என்றான்.
எம் கடவுளே, நாங்கள் ஏளம் செய்யப்படுவதைப் பாரும்! இந்தச் சிறுமை அவர்கள் மேல் வரச்செய்யும். அவர்களை அந்நியர் கையில் அடிமைகளாக்கிச் சிறுமைப்படுத்தியருளும்.
அவர்களது அக்கிரமத்தைத் மறைக்காதேயும். அவர்களது பாவத்தை மறக்காதேயும். ஏனெனில் அவர்கள் உம் நகரைக் கட்டுகிறவர்களை ஏளனம் செய்தார்கள்" என்று நான் வேண்டிக் கொண்டேன்.
சனபல்லாத், தொபியாசு, அரேபியர், அம்மோனியர், ஆஜோத்தியர் ஆகியோர் பாழடைந்து கிடந்த மதில் திரும்பவும் கட்டப்படுவதையும், வெடிப்புகள் அடைபட்டு வருவதையும் கேள்விப்பட்டு மிகவும் கோபம் கொண்டனர்.
எம் எதிரிகளோ, "நாம் யூதர்கள்மேல் போர் தொடுத்து, அவர்களை அழித்து அவர்கள் வேலைக்கு ஒரு முடிவு கட்டும்வரை அவர்கள் இதை அறியாமலும் கேள்விப்படாமலும் இருக்கவேண்டும்" என்று தங்களுக்குள் பேசி முடிவு செய்திருந்தனர்.
ஆயினும், அவர்கள் அருகே வாழ்ந்து வரும் யூதர் எங்களிடம் வந்து அதைப் பற்றிப் பத்து முறை எங்களை எச்சரித்தனர். "எல்லா இடங்களிலுமிருந்தும் அவர்கள் நமக்கு எதிராகப் படையெடுத்து வருகிறார்கள்" என்று சொல்லினர்.
பெரியோர், மக்கள் தலைவர்கள், மற்றும் எல்லா மக்களும் அச்சமுற்றிருக்கக் கண்ட நான் எழுந்து அவர்களைப் பார்த்து, "அவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். மாறாக, பெரியவரும் அஞ்சுதற்குரியவருமான ஆண்டவரை மனத்தில் கொண்டு, உங்கள் சகோதருக்காகவும், புதல்வர் புதல்வியருக்காகவும், மனைவியருக்காகவும் வீடுகளுக்காகவும் போராடுங்கள்" என்று சொன்னேன்.
தங்கள் சதி எங்களுக்குத் தெரிந்து விட்டது என்று எம் எதிரிகள் அறிய வந்தனர். இவ்வாறு கடவுள் அவர்களுடைய திட்டங்களைச் சிதறடித்தார். அப்பொழுது நாங்கள் எல்லோரும் தத்தம் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.
எனவே அன்று முதல், யூதா குலத்தைச் சேர்ந்த இளைஞர்களில் பாதிப்பேர் வேலை செய்தனர்; பாதிப்போர் ஈட்டி, கேடயம், வில், மார்புக் கவசம் முதலியவற்றை அணிந்து கொண்டு போருக்குத் தயாராயினர். மக்கள் தலைவர்கள் அவர்கள் அனைவர்க்கும் பின்னால் நின்றார்கள்.
பிறகு நான் பெரியோர், மக்கள் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரையும் நோக்கி, "வேலை பெரிது; முக்கியமானது. நாமோ மதில் நெடுகத் தனித் தனியே சிதறி நின்று வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
அப்பொழுது நான் மீண்டும் மக்களைப்பார்த்து, "இரவில் நமக்குக் காவலுக்கும், பகலில் வேலைக்கும் உதவியாய் இருக்கும் பொருட்டு, அனைவரும் தத்தம் வேலைக்காரரோடு யெருசலேமுக்குள் இரவைக் கழிக்க வேண்டும்" என்றேன்.
நானும் என் சகோதரரும் எம் ஊழியரும் என்னைப் பின்தொடரும் காவலரும் நாங்கள் அனைவருமே எங்கள் உடுப்புகளைக் களையவேயில்லை; மாறாக, ஆயுதம் தாங்கியோராய் நின்று கொண்டிருந்தோம்.