உன்னைச் சிதறடிக்கிறவன் உனக்கெதிராய் வருகிறான்; கோட்டை மதில்களில் வீரர்களை நிறுத்து, வழிகளில் காவல் வீரர்களை இருக்கச் செய்; உன் இடைகளை விரிந்து கட்டிக்கொள், உன் படை வலிமையை மிகுதிப்படுத்து.
(இஸ்ராயேலின் மாட்சிமை போலவே யாக்கோபின் மாட்சிமையை ஆண்டவர் மறுபடி நிலை நாட்டுகிறார்; கொள்ளைக்காரர்கள் அவற்றைக் கொள்ளையடித்தனர், அவற்றின் கிளைகளை அவர்கள் முறித்துப் போட்டனர்.)
அவனுடைய வலிய வீரர்களின் கேடயங்கள் சிவப்பானவை, அவனுடைய போர்வீரர்கள் செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்; போர் அணியில் இயங்கும் தேர்ப்படையிலிருந்து தீப்பொறி பறக்கிறது, குதிரை வீரர்கள் போருக்குத் துடிக்கின்றனர்.
சிங்கங்களின் குகை எங்கே இருக்கிறது? சிங்கக்குட்டிகளின் உறைவிடம் எங்கே? சிங்கம் வெளியேறும் போது, பெண் சிங்கமும் குட்டிகளும் யாருடைய தொந்திரவுமின்றி அங்கே இருந்தன.
தன் குட்டிகளுக்கும், பெண் சிங்கங்களுக்கும் தேவையான அளவு இரையை பீறிக்கிழித்து, இரையினால் தன் உறைவிடங்களையும், கிழித்த சதையால் தன் குகைகளையும் சிங்கம் நிரப்பிற்று.
சேனைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேள்: இதோ, உனக்கெதிராக நாம் எழும்புவோம், உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவோம், உன் இளஞ் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும், உனக்கு நாட்டில் இரை இல்லாதபடி செய்வோம், உன் தூதர்களின் குரல் இனிக் கேட்கப்பட மாட்டாது.