அரண் சூழ் நகரமே, நீ உன் அரண்களைப் பார்த்துக் கொள், எங்களுக்கு எதிராய்க் கொத்தளங்கள் போடப்பட்டுள்ளன; இஸ்ராயேல் மேல் ஆட்சி செலுத்துபவன், அவர்கள் கோலால் கன்னத்தில் அடிபடுகிறான்.
ஆதலால், பேறுகால வேதனையிலிருப்பவள் பிள்ளை பெறும் வரை, அவர்களை அவர் கைவிட்டு விடுவார்; அப்பொழுது அவருடைய சகோதரர்களுள் எஞ்சியிருப்போர் இஸ்ராயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.
அவர் தோன்றி, ஆண்டவருடைய வல்லமையோடும், தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் தமது மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள், ஏனெனில் இப்பொழுது உலகத்தின் இறுதி எல்லைகள் வரை அவர் பெரியவராய் விளங்கப் போகிறார்.
அவரே நமக்குச் சமாதானம் தருபவர். அசீரியன் நம் நாட்டின் மேல் படையெடுத்து வரும் போதும், நம் அரண்மனைகளுக்குள் புகும் போதும் அவனுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரும், மக்கட் தலைவர் எண்மரும் நாம் எழுப்பிவிடுவோம்.
அவர்கள் அசீரியா நாட்டை வாள் கொண்டும், நிம்ரோத் நாட்டை வாள் முனையாலும் ஆளுவார்கள். அசீரியன் நம் நாட்டுக்குள் எல்லைகளைக் கடந்து வரும் போது அவர்கள் தான் நம்மை அவனிடமிருந்து காப்பார்கள்.
இன்னும், யாக்கோபில் எஞ்சினோர், காட்டு மிருகங்கள் நடுவில் இருக்கும் சிங்கம் போலும், ஆட்டு மந்தைகளுக்குள் நுழைந்து, யாராலும் அவற்றைக் காப்பாற்ற முடியாதபடி அவற்றை மிதித்தும், துண்டு துண்டாய்க் கிழித்தும் போடுகிற சிங்கக் குட்டி போலும் புறவினத்தார் நடுவிலும், பற்பல மக்களினங்கள் நடுவிலும் இருப்பார்கள்.