இறுதி நாட்களில் ஆண்டவரின் கோயில் அமைந்துள்ள மலை மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நாட்டப் படும், குன்றுகளுக்கெல்லாம் மேலாக உயர்த்தப்படும், பலநாட்டு மக்கள் அதை நோக்கி ஓடிவருவர்.
பலநாட்டு மக்களுக்கிடையில் அவரே தீர்ப்பிடுவார், தொலைநாடுகளிலும் வலிமை மிக்க மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்; அவர்களோ, தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; நாட்டுக்கு எதிராய் நாடு வாள் எடுக்காது, அவர்களுக்கு இனிப் போர்ப்பயிற்சியும் அளிக்கப்படாது;
அவர்களுள் ஒவ்வொருவனும் தன் தன் திராட்சைக் கொடியின் கீழும், அத்தி மரத்தினடியிலும் அமர்ந்திருப்பான்; அவர்களை அச்சுறுத்துகிறவன் எவனுமில்லை, ஏனெனில் சேனைகளின் ஆண்டவரே இதைத் திருவாய் மலர்ந்தார்.
நொண்டிகளை எஞ்சியிருக்கும் மக்களாய் ஆக்குவோம், விரட்டப்பட்டவர்களை வலிமையான இனமாக்குவோம்; அன்று முதல் என்றென்றைக்கும் ஆண்டவரே சீயோன் மலையிலிருந்து அவர்கள் மேல் அரசு செலுத்துவார்.
இப்பொழுது நீ ஓலமிட்டுக் கதறுவானேன்? உன்னிடத்தில் அரசன் இல்லாமற் போயினானோ? பிரசவிக்கும் பெண்ணைப் போல நீ இவ்வாறு வேதனைப்பட உன் ஆலோசனைக்காரன் அழிந்து விட்டானோ?
சீயோன் மகளே, பிரசவ வேதனையிலிருப்பவளைப் போல நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு; ஏனெனில் இப்பொழுது நீ நகரத்தை விட்டு வெளியேறி நாட்டுப்புறத்தில் வாழ்வாய்; பபிலோனுக்குப் போவாய்; ஆங்கே நீ விடுதலை பெறுவாய், உன் பகைவர் கையிலிருந்து உன்னை ஆண்டவர் மீட்பார்.
ஆனால் ஆண்டவரின் எண்ணங்கள் அவர்களுக்குத் தெரியாதவை, அவருடைய திட்டத்தை அவர்கள் கண்டு உணர்கிறதில்லை. புணையடிக்கும் களத்தில் அரிக்கட்டுகளைச் சேர்ப்பது போல் அவரும் அவர்களைச் சேர்த்து வைத்திருக்கிறார்.
சீயோன் மகளே, நீ எழுந்து புணையடி; ஏனெனில் நாம் உனக்கு இருப்புக் கொம்பும் வெண்கலக் குளம்புகளும் தருவோம்; மக்களினங்கள் பலவற்றை நீ நொறுக்குவாய், அவர்களிடம் கொள்ளை அடித்ததையும், அவர்களின் கருவூலங்களையும் அனைத்துலக இறைவனாகிய ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்.