English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Mark Chapters

Mark 10 Verses

1 அவர் அங்கிருந்து புறப்பட்டு யூதேயா நாட்டுக்கும், யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள்கூட்டம் அவரிடம் வந்து கூட, வழக்கம்போல் அவர் அவர்களுக்கு மறுபடியும் போதித்தார்.
2 பரிசேயர் அவரை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டனர்.
3 அதற்கு அவர், "மோயிசன் உங்களுக்கு என்ன கட்டளையிட்டார்?" என்று கேட்க,
4 அவர்கள், "முறிவுச் சீட்டு எழுதி அவளை விலக்கிவிடலாம் என்று மோயிசன் அனுமதி அளித்தார்" என்றனர்.
5 அதற்கு இயேசு, "உங்களுடைய முரட்டுத் தனத்தின் பொருட்டே இக்கட்டளையை எழுதி வைத்தார்.
6 படைப்பின் தொடக்கத்திலிருந்தே, கடவுள் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.
7 ஆதலால் கணவன் தன் தாய் தந்தையரைவிட்டுத் தன் மனைவியோடு கூடியிருப்பான்.
8 இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள். இனி அவர்கள் இருவரல்லர், ஒரே உடல்.
9 ஆகவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.
10 வீட்டிற்கு வந்து அவருடைய சீடர் மீண்டும் அதைப்பற்றி அவரைக் கேட்டனர்.
11 அதற்கு அவர் அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொருத்தியை மணப்பவன் எவனும் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறான்.
12 மனைவி தன் கணவனை விலக்கி வேறொருவனை மணந்துகொண்டால் அவளும் விபசராம் செய்கிறாள்" என்றார்.
13 குழந்தைகளை அவர் தொட வேண்டும் என்று அவரிடம் கொண்டுவந்தனர். சீடர் அதட்டினர்.
14 இயேசு அதைக் கண்டு சினந்து, அவர்களை நோக்கி "குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள், தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே.
15 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது" என்றார்.
16 பின்பு அவர் அவர்களை அரவணைத்து, கைகளை அவர்கள்மேல் வைத்து ஆசீர்வதித்தார்.
17 அவர் புறப்பட்டுப் போகும்போது, ஒருவன் ஓடிவந்து அவர்முன் முழந்தாளிட்டு, "நல்ல போதகரே, நான் முடிவில்லா வாழ்வு பெற என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான்.
18 இயேசுவோ அவனை நோக்கி, "என்னை நல்லவர் என்பானேன்? கடவுள் ஒருவர் அன்றி நல்லவர் எவருமில்லை.
19 கட்டளைகள் உனக்குத் தெரியுமே. கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய் சான்று சொல்லாதே, அநியாயம் செய்யாதே, தாய் தந்தையரைப் போற்று" என்றார்.
20 அதற்கு அவன், "போதகரே, சிறுவமுதல் இவை எல்லாம் கடைப்பிடித்து வருகிறேன்" என்றான்.
21 இயேசு, அவனை உற்றுநோக்கி, அவன்மீது அன்புகூர்ந்தார். "உனக்கு ஒன்று குறைவாயிருக்கிறது. போய் உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்பு வந்து என்னைப் பின்செல்" என்றார்.
22 அவன் இவ்வார்த்தையைக் கேட்டு, முகம் வாடி, வருத்தத்துடன் சென்றான். ஏனெனில், அவனுக்கு ஏராளமான சொத்து இருந்தது.
23 இயேசு சுற்றிலும் பார்த்துத் தம் சீடரிடம் "கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது! " என்றார்.
24 சீடர் அவருடைய வார்த்தைகளைக் கேட்டுத் திடுக்கிட்டனர். இயேசுவோ மீண்டும் அவர்களை நோக்கி, "பிள்ளைகளே, பணத்தை நம்பி இருப்பவர்கள் கடவுளின் அரசில் நுழைவது எவ்வளவோ அரிது!
25 பணக்காரன் கடவுளின் அரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
26 அவர்கள் இன்னும் அதிகமாக மலைத்துப்போய், 'பின்யார்தாம் மீட்புப் பெறமுடியும்?" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.
27 இயேசு அவர்களை உற்றுநோக்கி, "மனிதரால் இது முடியாது. ஆனால் கடவுளுக்கு அப்படியன்று. கடவுளால் எல்லாம் முடியும்" என்று சொன்னார்.
28 அப்பொழுது இராயப்பர் அவரிடம், "இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்சென்றோமே" என்று சொன்னார்.
29 அதற்கு இயேசு, "தன் வீட்டையோ, சகோதரர் சகோதரிகளையோ, தாய் தந்தையரையோ, மக்களையோ, நிலபுலங்களையோ என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் துறந்துவிடும் எவனும்,
30 இம்மையில் இன்னல்களோடு கூட, வீடு, சகோதரர், சகோதரி, தாய், பிள்ளை, நிலபுலங்களை நூறு மடங்காகவும், மறுமையில் முடிவில்லா வாழ்வையும் பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
31 முதலானோர் பலர் கடைசியாவர், கடைசியானோர் பலர் முதலாவர்" என்றார்.
32 அவர்கள் பயணமாகி யெருசலேமை நோக்கிப் போகையில், இயேசு அவர்களுக்குமுன் நடந்துகொண்டிருந்தார். அவர்களோ திகைப்புற்றிருந்தனர். பின்னே வந்தவர்களும் அச்சம் கொண்டிருந்தனர். மீண்டும் பன்னிருவரையும் அழைத்துத் தமக்கு நேரப்போவதை அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்:
33 இதோ! யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகன் தலைமைக்குருக்களிடமும் மறைநூல் அறிஞரிடமும் கையளிக்கப் படுவார். அவர்கள் அவருக்குக் கொலைத் தீர்ப்பிட்டு, அவரைப் புறவினத்தாரிடம் கையளிப்பர்.
34 அவர்கள் அவரை எள்ளிநகையாடி, துப்பி, சாட்டையால் அடித்துக் கொல்லுவார்கள். அவரோ மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவார்" என்றார்.
35 செபெதேயுவின் மக்கள் யாகப்பரும் அருளப்பரும் அவரிடம் வந்து, "போதகரே, நாங்கள் கேட்கப்போவதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும்" என்றனர்.
36 இயேசுவோ அவர்களை நோக்கி, "நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?" என்றார்.
37 "நீர் உம் மாட்சிமையில் வீற்றிருக்கும்போது, எங்களுள் ஒருவர் உமது வலப்பக்கமும், மற்றவர் உமது இடப் பக்கமுமாக அமர அருளும்" என்றார்கள்.
38 அதற்கு இயேசு, "நீங்கள் கேட்பது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்க முடியுமா? நான் பெறும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெற முடியுமா?" என்றார்.
39 "முடியும்" என்றனர். அதற்கு இயேசு, "நான் குடிக்கும் கிண்ணத்தில் குடிப்பீர்கள்; நான் பெறும் ஞானஸ்நானத்தையும் பெறுவீர்கள்.
40 ஆனால் எனது வலப்பக்கமோ இடப்பக்கமோ அமர அருள்வது என்னுடையதன்று; யாருக்கு ஏற்பாடு ஆகியிருக்கிறதோ அவர்களுக்கே அது கிடைக்கும்" என்றார்.
41 அதைக் கேட்ட பதின்மரும், யாகப்பர் மேலும் அருளப்பர் மேலும் சினம்கொள்ளத் தொடங்கினர்.
42 இயேசு, அவர்களைத் தம்மிடம் அழைத்து, அவர்களுக்குக் கூறியது: 'புறவினத்தாரிடையே தலைவர்கள் எனப்படுவோர் அவர்களை அடக்கி ஆளுகின்றனர். அவர்களுள் பெரியோர் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகின்றனர்.
43 இது உங்களுக்குத் தெரியும். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுக்குள் எவன் பெரியவனாய் இருக்க விரும்புகிறானோ, அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.
44 எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் எல்லாருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்.
45 ஏனெனில், மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."
46 அவர்கள் எரிக்கோவுக்கு வந்தார்கள். எரிக்கோவிலிருந்து அவரும் அவர் சீடரும் ஒரு பெருங்கூட்டமும் புறப்படும்பொழுது திமேயுவின் மகன் பர்த்திமேயு என்ற கண்தெரியாத பிச்சைக்காரன் வழியோரத்தில் உட்கார்ந்திருந்தான்.
47 நாசரேத்தூர் இயேசுதாம் அவர் என்று கேள்வியுற்று, "தாவீதின் மகனே, இயேசுவே, என் மீது இரக்கம் வையும்" என்று கூவத் தொடங்கினான்.
48 பேசாதிருக்கும்படி பலர் அவனை அதட்டினார்கள். அவனோ, "தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்" என்று இன்னும் அதிகமாய்க் கூவினான்.
49 இயேசு நின்று, "அவனை அழைத்து வாருங்கள்" என்றார். அவர்கள் குருடனை அழைத்து, "தைரியமாயிரு, எழுந்திரு, உன்னை அழைக்கிறார்" என்றார்கள்.
50 அவன் தன் போர்வையை எறிந்துவிட்டு, துள்ளிக்குதித்து அவரிடம் வந்தான்.
51 இயேசு, "உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று அவனைக் கேட்க, குருடன், "ராபூனி, நான் பார்வை பெற வேண்டும்" என்றான்.
52 இயேசு அவனை நோக்கி, "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, நீ போகலாம்" என்றார். அவன் உடனே பார்வை பெற்று, இயேசுவுக்குப் பின்னே வழி நடந்தான்.
×

Alert

×