Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Luke Chapters

Luke 9 Verses

1 பன்னிருவரையும் அழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் நோய்களைக் குணமாக்கவும், வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்கு அளித்தார்.
2 இறையரசைப்பற்றிச் செய்தியை அறிவிக்கவும் நோயாளிகளைக் குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்.
3 அப்போது அவர்களைப் பார்த்து, "வழிப்பயணத்திற்குக் கோலோ பையோ, உணவோ பணமோ, ஒன்றும் எடுத்துச் சொல்லாதீர்கள். இரண்டு உள்ளாடைகளை யாரும் வைத்திருக்க வேண்டாம்.
4 எந்த வீட்டுக்குப் போனாலும், அங்கே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள்.
5 யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிடின் அவர்களுடைய ஊருக்கு வெளியே போய் அவர்களுக்கு எதிர்சாட்சியாக உங்கள் கால்களிலிருக்கும் தூசியைத் தட்டிவிடுங்கள்" என்றார்.
6 அவர்கள் புறப்பட்டு ஊர் ஊராகச் சென்று, எங்கும் நற்செய்தியைப் பரப்பி நோயாளிகளைக் குணமாக்கினர்.
7 நிகழ்ந்ததெல்லாம் கேள்வியுற்ற சிற்றரசன் ஏரோது மனம் கலங்கினான். ஏனெனில், சிலர், "அருளப்பர் இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார்" என்றனர்.
8 வேறு சிலர், "எலியாஸ் மறுபடியும் தோன்றியிருக்கிறார்" என்றனர். மற்றும் சிலர், "முற்காலத்து இறைவாக்கினர்களுள் ஒருவர் உயிர்த்தெழுந்திருக்கிறார்" என்றனர்.
9 ஏரோதோ, "அருளப்பரா? அவர் தலையை நான்தான் வெட்டினேனே. இவர் யாரோ? இவரைப்பற்றி இப்படியெல்லாம் கேள்விப்படுகிறேனே" என்று சொல்லி, அவரைக் காண வாய்ப்புத் தேடினான்.
10 அப்போஸ்தலர் திரும்பி வந்து தாங்கள் செய்ததெல்லாம் அவருக்குத் தெரிவித்தனர். அவர் அவர்களை அழைத்துக் கொண்டு தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் ஊருக்குச் சென்றார்.
11 அதை அறிந்த மக்கள் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் அவர்களை வரவேற்றுக் கடவுளின் அரசைப்பற்றி அவர்களுக்குப் போதித்து, குணமாக வேண்டியவர்களைக் குணமாக்கினார்.
12 பொழுது சாயத்தெடங்கவே, பன்னிருவர் அவரிடத்தில் வந்து, "சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் போய், விடுதியும் உணவும் பார்த்துக்கொள்ளும்படி மக்களை அனுப்பிவிடும். நாமுள்ள இடமோ பாழ்வெளி" என்றனர்.
13 அதற்கு அவர், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார். அவர்களோ, "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தான் உண்டு. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால் தான் முடியும்" என்றனர்.
14 ஏனெனில், ஆண்களே, ஏறக்குறைய ஐயாயிரம் பேர் இருந்தனர். அவர் சீடர்களை நோக்கி, "இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தி அமரச் செய்யுங்கள்" என்றார்.
15 அவர்கள், அவர் சொன்னபடியே, அனைவரையும் பந்தி அமரச் செய்தார்கள்.
16 அதன்பின், ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைபுகழ் கூறி, பிட்டு, சீடருக்கு அளித்து மக்கட்கூட்டத்திற்குப் பரிமாறச் சொன்னார்.
17 அனைவரும் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
18 ஒருநாள் இயேசு தனியே செபித்துக்கொண்டிருக்கும்பொழுது, அவருடைய சீடரும் அவருடன் இருந்தனர். அவர் அவர்களை நோக்கி, "மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?" எனக்கேட்டார்.
19 அவர்கள், "சிலர் ஸ்நாபக அருளப்பர் என்றும், சிலர் எலியாஸ் என்றும், சிலர் முற்காலத்து இறைவாக்கினர்களுள் ஒருவர் உயிர்த்தார் என்றும் சொல்லுகின்றனர்" என்றார்கள்.
20 "நீங்களோ என்னை யார் என்று அவர்களைக் கேட்டார். இராயப்பர் மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா" என்றார்.
21 இதை ஒருவருக்கும் சொல்லக்கூடாது என்று கண்டிப்பான கட்டளை இட்டார்.
22 மேலும், "மனுமகன் பாடுகள் பல படவும். மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு, கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று சொன்னார்.
23 அவர்கள் எல்லாரையும் பார்த்து, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.
24 ஏனெனில், தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக் கொள்வான்.
25 ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன்னையே பாழாக்கினால் பயன் என்ன? தனக்கே கேடு வருவித்தால் பயன் என்ன?
26 என்னைப் பற்றியும் என் வார்த்தைகளைப் பற்றியும் வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைப் பற்றி மனுமகன் தமக்கும் தந்தைக்கும் பரிசுத்த வானதூதருக்கும் உரிய மாட்சிமையில் வரும்பொழுது வெட்கப்படுவார்.
27 "நான் உங்களுக்கு உண்மையாகச் சொல்லுவதாவது: கடவுளின் அரசைக் காணும்வரை இங்கிருப்பவர்களுள் சிலர் சாவுக்குள்ளாக மாட்டார்கள்" என்றார்.
28 இதெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டு நாள் ஆனபின்பு, இராயப்பரையும் யாகப்பரையும் அருளப்பரையும் அழைத்துக் கொண்டு செபம் செய்ய மலை மீது ஏறினார்.
29 அவர் செபித்துக்கொண்டிருக்கும்பொழுது அவரது முகத்தோற்றம் மாறியது. அவரது ஆடையும் வெண்மையாய் ஒளிவீசியது.
30 இதோ! அவருடன் இருவர் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மோயீசனும் எலியாசும்.
31 அவர்கள் விண்ணொளியிடையே தோன்றி, யெருசலேமில் நிறைவேறப் போகின்ற அவருடைய இறுதிப் பயணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
32 இராயப்பரும் அவரோடு இருந்தவர்களும் தூக்க மயக்கமாயிருந்தனர். விழித்தெழுந்து, அவருடைய மாட்சிமையையும், அவரோடு நின்ற இருவரையும் கண்டனர்.
33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரியும்பொழுது இராயப்பர் இயேசுவிடம், "குருவே, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கொன்றும், மோயீசனுக்கொன்றும், எலியாசுக்கொன்றுமாகக் கூடாரம் மூன்று அமைப்போம்" என்று- தாம் சொல்லுவது இன்னதென்று அறியாமல்- கூறினார்.
34 அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்பொழுது, மேகம் ஒன்று வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அவர்கள் அம்மேகத்தினுள் நுழையும்போது, சீடர்கள் அச்சம் கொண்டனர்.
35 அப்பொழுது, "இவரே என் மகன், நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற குரலொலி மேகத்திலிருந்து கேட்டது.
36 அக்குரலொலி கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். அவர்களோ தாம் கண்டவற்றை அந்நாட்களில் ஒருவரிடமும் சொல்லாமல் மௌனங்காத்தனர்.
37 மறுநாள் அவர்கள் மலையிலிருந்து இறங்கி வரும்பொழுது பெருங்கூட்டம் ஒன்று அவர்களை எதிர்கொண்டது.
38 கூட்டத்திலிருந்த ஒருவன், "போதகரே, என் மகனைக் கடைக்கண் நோக்குமாறு உம்மை மன்றாடுகிறேன். 'அவன் எனக்கு ஒரே மகன்.
39 இதோ! ஆவி அவனை ஆட்கொள்ளுகிறது, திடீரென்று கத்துகிறான். அவன் நுரைதள்ளுகிறான். அவனை அலைக்கிழிக்கின்றது. அவனை நொறுக்கி விடுகிறது. எளிதில் அவனை விட்டுப்போவதில்லை.
40 அதை ஓட்டும்படி உம் சீடரை மன்றாடினேன். அவர்களால் முடியவில்லை" என்று கத்தினான்.
41 அதற்கு இயேசு, "விசுவாசமில்லாத சீர்கெட்ட தலைமுறையே, எதுவரை உங்களுடன் இருந்து உங்களைப் பொறுத்துக் கொண்டிருப்பேன்? உன் மகனை இங்குக் கெண்டுவா" என்றார்.
42 அச்சிறுவன் வந்து கொண்டிருக்கையிலேயே பேய் அவனைக் கீழே தள்ளி அலைக்கழித்தது. இயேசு அசுத்த ஆவியைக் கடிந்து, சிறுவனைக் குணமாக்கி, அவனுடைய தந்தையிடம் ஒப்படைத்தார்.
43 அனைவரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்துப்போயினர். 'அவர் செய்ததெல்லாம் பார்த்து எல்லாரும் வியந்து கொண்டிருக்க,
44 இயேசு சீடரிடம், "நான் சொல்லுவதை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: மனுமகன் மனிதரிடம் கையளிக்கப்படப் போகிறார்" என்றார்.
45 அவர்களோ அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு அது மறைபொருளாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதைப்பற்றி அவரைக் கேட்க அஞ்சினர்.
46 தங்களுள் பெரியவன் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.
47 இயேசு, அவர்கள் உள்ளக்கருத்தை அறிந்து, ஒரு குழந்தையின் கையைப் பிடித்துத் தம் அருகே நிறுத்தி,
48 அவர்களை நோக்கி, "என் பெயரால் இக்குழந்தையை ஏற்றுக்கொள்பவன் எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்பவன் எவனும் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான். உங்கள் அனைவருள் சிறியவன் எவனோ, அவனே பெரியவன்" என்றார்.
49 குருவே, ஒருவன் உம் பெயரால் பேயோட்டுவதைக் கண்டு அவனைத் தடுக்கப்பார்த்தோம். ஏனெனில், அவன் நம்மைச் சாராதவன்" என்று அருளப்பர் கூறினார்.
50 இயேசு அவரை நோக்கி, "அவனைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், உங்களுக்கு எதிராக இல்லாதவன் உங்கள் சார்பாக இருக்கிறான்" என்றார்.
51 இயேசு விண்ணேற்படையும் நாட்கள் நெருங்கிவரவே, யெருசலேமுக்குச் செல்ல முனைந்து நின்றவராய்,
52 தமக்கு முன்பாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் சென்று முன்னேற்பாடு செய்யும்படி சமாரியருடைய ஊர் ஒன்றுக்கு வந்தார்கள்.
53 அவர் யெருசலேமுக்குச் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
54 அவருடைய சீடர் யாகப்பரும் அருளப்பரும் இதைக் கண்டு, "ஆண்டவரே, இவர்களை அழிக்க வானத்திலிருந்து நெருப்பு விழும்படி நாங்கள் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறீரோ?" என்றனர்.
55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி அவர்களைக் கடிந்துகொண்டார்.
56 பின்பு, வேறு ஓர் ஊருக்குச் சென்றனர்.
57 அவர்கள் வழியேபோகையில் ஒருவன் அவரிடம், "நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்வேன்" என்றான்.
58 இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்றார்.
59 அவர் வேறொருவனை நோக்கி, "என்னைப் பின்செல்" என, அவன், "ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர விடைகொடும்" என்றான்.
60 இயேசு அவனைப் பார்த்து, "இறந்தோர் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும். நீ போய் கடவுளுடைய அரசை அறிவி" என்றார்.
61 இன்னொருவன், "ஆண்டவரே, உம்மைப் பின்செல்வேன்; ஆனால் முதலில் வீட்டில் சொல்லிவிட்டுவர விடைதாரும்" என்றான்.
62 இயேசுவோ அவனை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவன் எவனும் கடவுளின் அரசிற்குத் தகுதியற்றவன்" என்றார்.
×

Alert

×