Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Luke Chapters

Luke 8 Verses

1 பின்னர் கடவுளின் அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இயேசு ஊர் ஊராய்ச் செல்லலானார். பன்னிருவரும் அவருடன் சென்றனர்.
2 பொல்லாத ஆவிகளினின்றும் பிணிகளினின்றும் குணமான பெண்கள் சிலரும் அவர்களோடு இருந்தனர். இப்பெண்கள் யாரெனில், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மதலேன் என்னும் மரியாள்,
3 ஏரோதின் காரியத்தலைவன் கூசாவின் மனைவி அருளம்மாள், சூசன்னா, மற்றும் பெண்கள் பலர் இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
4 பெருந் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் அவரிடம் வந்தபோது அவர் உவமையாகக் கூறியது:
5 "விதைப்பவன் விதையை விதைக்கச் சென்றான். விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரமாய் விழுந்தன; அவை மிதிபட்டு வானத்துப் பறவைகளால் தின்னப்பட்டன.
6 சில பாறைமீது விழுந்தன; முளைத்தும் ஈரமின்மையால் காய்ந்துபோயின
7 சில முட்செடிகளின் நடுவே விழுந்தன; 'கூடவளர்ந்த முட்செடிகளோ அவற்றை நெரித்துவிட்டன.
8 சில நன்னிலத்தில விழுந்தன; அவை முளைத்து நூறு மடங்கு பலன் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்."
9 பின்னர், அவருடைய சீடர், "இவ்வுவமையின் பொருள் யாது?" என்று வினவினர்.
10 அவர் அவர்களுக்குச் கூறியது: "கடவுளுடைய அரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவாறும், கேட்டும் உணராதவாறும் அவை உவமைகளாகக் கூறப்பட்டன.
11 "இந்த உவமையின் பொருளாவது: விதை கடவுளின் வார்த்தை.
12 வழியோரமாய் விழுந்த விதை, அவ்வார்த்தையைக் கேட்பவர்களைக் குறிக்கிறது. அவர்கள் அதைக் கேட்கிறார்கள். ஆனால், அலகை வந்து அவர்கள் விசுவாசித்து மீட்புப்பெறாதபடி அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.
13 பாறைமீது விழுந்த விதை, அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கிறது. மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலம் விசுவசித்து, சோதனை வேளையில் பின்வாங்குகிறார்கள்.
14 முட்செடிகள் நடுவில் விழுந்த விதை, வார்த்தையைக் கேட்கும் வேறு சிலரைக் குறிக்கிறது. அவர்களும் கேட்கிறார்கள். ஆனால், நாளாவட்டத்தில் கவலைகள், செல்வம், வாழ்வின் இன்பங்களால் அது நெரிக்கப்பட்டு முதிர்ச்சியடைவதில்லை.
15 நல்ல நிலத்தில் விழுந்த விதையோ வார்த்தையைக் கேட்டுச் சீரிய செம்மனத்தில் பதித்து நிலையாயிருந்து பலன் அளிப்பவர் ஆவர்.
16 எவனும் விளக்கை ஏற்றிப் பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. உள்ளே வருபவர் ஒளியைக் காணும்படி அதை விளக்குத் தண்டின் மீது வைப்பான்.
17 வெளிப்படாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. அறியப்படாமலும் வெளியாகாமலும் மறைந்திருப்பது ஒன்றுமில்லை.
18 ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் தேவவார்த்தையைக் கேட்கிறீர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். உள்ளவனுக்குக் கொடுக்கப்படும். இல்லாதவனிடமிருந்து, உள்ளதாகக் கருதுவதும் எடுக்கப்படும்."
19 அவருடைய தாயும் சகோதரரும் அவரிடம் வந்தனர். ஆனால் கூட்ட மிகுதியினால் அவரை அணுகமுடியவில்லை.
20 உம் தாயும் சகோதரரும் உம்மைக் காண விரும்பி வெளியே நிற்கின்றனர்" என்று அவருக்கு அறிவித்தனர்.
21 அதற்கு அவர், "கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்" எனக் கூறினார்.
22 ஒருநாள் தம்முடைய சீடரோடு படகேறி, "ஏரியின் அக்கரைக்குச் செல்வோம்" என அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகைச் செலுத்தினார்கள்.
23 அவர்கள் படகு ஓட்டுகையில் அவர் உறங்கினார். அப்போது புயற்காற்று கடலில் வீசியது. படகு நீரால் நிறைந்துபோகவே, அவர்கள் ஆபத்திற்குள்ளானார்கள்.
24 அவரிடம் வந்து, "குருவே, குருவே, மடிந்துபோகிறோம்" என்று அவரை எழுப்பினர். அவர் எழுந்து காற்றையும் கொந்தளிப்பையும் கடியவே, அவை அடங்கின. அமைதி உண்டாயிற்று.
25 பின்னர், அவர் அவர்களிடம், "உங்கள் விசுவாசம் எங்கே?" என்றார். அவர்களோ அச்சமுற்று, "காற்றுக்கும் கடலுக்கும் இவர் ஆணையிட அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யாராயிருக்கலாம்!" என்று ஒருவருக்கொருவர் வியப்புடன் பேசிக்கொண்டனர்.
26 பின்பு கலிலேயாவிற்கு எதிரே இருக்கும் கெரசேனர் நாட்டை நோக்கிப் படகை ஓட்டினர்.
27 கரையேறியதும் அந்த ஊரைச் சார்ந்த ஒருவன் அவருக்கு எதிரே வந்தான். அவன் பேய்பிடித்தவன். நெடுநாளாய் ஆடையணியாது, வீட்டிலும் தங்காது, கல்லறைகளில் தங்கியிருந்தான்.
28 இயேசுவைக் கண்டதும், கூக்குரலிட்டு அவர்முன் விழுந்து, " இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, என் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர் ? உம்மை மன்றாடுகிறேன்: என்னை வதைக்கவேண்டாம்" என உரக்கக் கத்தினான்.
29 ஏனெனில், அம்மனிதனை விட்டகலும்படி இயேசு அசுத்த ஆவிக்குக் கட்டளையிட்டிருந்தார். எத்தனையோ முறை அது அவனைப் பிடித்து ஆட்டியிருக்கிறது. அவன் சங்கலியும் விலங்கும் மாட்டிக் காவல்காக்கப்பட்டிருந்தும் அவ்வேளைகளில் கட்டுகளை உடைப்பான்; பேயும் அவனைப் பாலைவனத்திற்கு இழுத்துச் செல்லும்.
30 " உன் பெயர் என்ன?" என்று இயேசு அவனைக் கேட்டார். "படை" என்றான்.- ஏனெனில், பல பேய்கள் அவனுக்குள் புகுந்திருந்தன.-
31 பாதாளத்திற்குச் செல்லத் தங்களுக்குக் கட்டளை இடாதபடி அவரை வேண்டின.
32 அங்கே பல பன்றிகள் கூட்டமாக மலையில் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றிற்குள் போக விடையளிக்குமாறு பேய்கள் அவரை வேண்டவே, அவர் விடைகொடுத்தார்.
33 பேய்கள் அம்மனிதனை விட்டுப் பன்றிகளுக்குள் புகுந்தன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து மூழ்கிப்போயிற்று.
34 மேய்ந்தவர்களோ நடந்ததைக் கண்டு ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் அறிவித்தார்கள்.
35 அதைக் காண மக்கள் புறப்பட்டு இயேசுவிடம் வந்தனர். பேய்கள் நீங்கியவன் தன்னுணர்வுடன் ஆடை அணிந்து இயேசுவின் காலடியில் இருக்கக் கண்டு, அஞ்சினர்.
36 நடந்ததைக் கண்டவர்கள், பேய்பிடித்தவன் எப்படி விடுவிக்கப் பெற்றான் என்று அவர்களுக்கு அறிவித்தனர்.
37 கெரசேனர் நாட்டு மக்கள் எல்லாரும் திரண்டு வந்து, தங்களை விட்டகலும்படி அவரைக் கேட்டனர். ஏனெனில், அச்சம் அவர்களை ஆட்கொண்டது. அவர் படகிலேறித் திரும்பிப்போனார்.
38 பேய்கள் நீங்கியவன் "நானும் உம்மோடு வரவிடும்" என்று மன்றாடினான்.
39 இயேசுவோ, "நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" என்று கூறி அவனை அனுப்பிவிட்டார். அவன் நகரெங்கும் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் அறிவிக்கலானான்.
40 இயேசு திரும்பி வரும்போது, மக்கள் திரள் அவரை வரவேற்றது. ஏனெனில், எல்லாரும் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
41 இதோ! செபக்கூடத்தலைவனான யாயீர் என்னும் ஒருவன் வந்து இயேசுவின் காலில் விழுந்து தன் வீட்டுக்கு வரும்படி வேண்டினான்.
42 ஏறக்குறைய பன்னிரண்டு வயதுள்ள அவனுடைய ஒரே மகள் சாகக்கிடந்தாள். அவர் போகையில் மக்கள் திரள் அவரை நெருக்கியது.
43 பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி அக்கூட்டத்தில் இருந்தாள். ஒருவராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை.
44 அவள் அவருக்குப் பின்னே சென்று அவருடைய போர்வையின் விளிம்பைத் தொட்டவுடனே பெரும்பாடு நின்றது.
45 என்னைத் தொட்டது யார்?" என்று இயேசு கேட்டார். "யாரும் தொடவில்லை" என்று அனைவரும் சொல்ல, இராயப்பரும் அவருடன் இருந்தோரும், "குருவே, மக்கள் திரள் உம்மைச் சூழ்ந்து நெருக்குகிறதே" என்றனர்.
46 "யாரோ என்னைத் தொட்டார்கள், வல்லமை என்னிடமிருந்து வெளியேறியதை நான் உணர்ந்தேன்" என்று இயேசு கூறினார்.
47 தான் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து, அவள் நடுங்கிக்கொண்டு அவரிடம் வந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும், உடனே குணமானதையும் எல்லாருக்கும் முன்பாகத் தெரிவித்தாள்.
48 அவரோ அவளை நோக்கி, "மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று. சமாதானமாய்ப் போ" என்றார்.
49 அவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, செபக்கூடத் தலைவன் வீட்டிலிருந்து ஒருவன் வந்து, "உம் மகள் இறந்துவிட்டாள். போதகரை இனித் தொந்தரை செய்யாதீர்" என்றான்.
50 இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தகப்பனிடம், "அஞ்சாதே, விசுவசி, அதுபோதும்; அவள் பிழைப்பாள்" என்றார்.
51 அவர் வீட்டிற்கு வந்ததும் இராயப்பர், யாகப்பர், அருளப்பர், சிறுமியின் தாய் தந்தையர் இவர்களைத் தவிர வேறெவரையும் தம்மோடு உள்ளே வரவிடவில்லை.
52 அனைவரும் அவளுக்காக மாரடித்து அழுதுகொண்டிருந்தனர். அவரோ, "அழ வேண்டாம். அவள் சாகவில்லை, தூங்குகிறாள்" என்றார்.
53 ஆனால் அவர்கள், அவள் இறந்துவிட்டாள் என அறிந்திருந்ததால் அவரை ஏளனம் செய்தார்கள்.
54 அவரோ, அவள் கையைப் பிடித்து, "குழந்தாய், எழுந்திரு " என்று கூப்பிட்டார்.
55 உயிர் திரும்பி வரவே, அவள் உடனே எழுந்தாள். அவளுக்கு உணவு கொடுக்கச் சொன்னார்.
56 அவளுடைய பெற்றோர் திகைத்துப் போயினர். நிகழ்ந்ததை எவருக்கும் சொல்ல வேண்டாம் என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
×

Alert

×