English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Luke Chapters

Luke 2 Verses

1 அந்நாளில் உலக முழுமையும் மக்கள் தொகையைக் கணக்கிடும்படி செசார் அகுஸ்துவிடமிருந்து கட்டளை பிறந்தது.
2 முதலாவதான இக்கணக்கு சீரியா நாட்டைக் கிரேனியு ஆண்ட காலத்தில் எடுக்கப்பட்டது.
3 அதன்படி அனைவரும் பெயரைப் பதிவுசெய்யத் தத்தம் ஊருக்குச் சென்றனர்.
4 சூசையும் கருப்பவதியாயிருந்த மனைவி மரியாளோடு பெயரைப் பதிவுசெய்யக் கலிலேயா நாட்டு நாசரேத்தூரை விட்டு,
5 யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். ஏனெனில், அவர் தாவீதின் குலத்தவரும் குடும்பத்தவருமாக இருந்தார்.
6 அவர்கள் அங்கிருந்தபொழுது, அவளுக்குப் பேறுகாலம் வந்தது.
7 அவள் தலைப்பேறான மகனை ஈன்றெடுத்து, துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தினாள். ஏனெனில், சத்திரத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
8 அதே பகுதியில் இடையர் வெட்டவெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.
9 ஆண்டவருடைய தூதர் அவர்களுக்குத் தோன்ற, விண்ணொளி அவர்களைச் சூழ்ந்து சுடர்ந்தது. மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
10 வானதூதர் அவர்களை நோக்கி, " அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11 இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.
12 குழந்தை ஒன்றைத் துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அறிகுறியாகும்" என்றார்.
13 உடனே வானோர் படைத்திரள் அத்தூதரோடு சேர்ந்து,
14 " உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. உலகிலே அவர் தயவுபெற்றவர்க்கு அமைதி ஆகுக! " என்று கடவுளைப் புகழ்ந்தது.
15 தூதர்கள் அவர்களை விட்டு வானகம் சென்றபின், இடையர் ஒருவரையொருவர் நோக்கி, " வாருங்கள், பெத்லெகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்த இந்நிகழ்ச்சியைக் காண்போம் " என்று சொல்லிக் கொண்டு,ஃ
16 விரைந்து சென்று, மரியாளையும் சூசையையும், முன்னிட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டனர்.
17 கண்ட பின்னர், அப்பாலனைப் பற்றித் தமக்குக் கூறப்பட்டதைப் பிறருக்கு அறிவித்தனர்.1
18 கேட்ட யாவரும் தங்களுக்கு இடையர் கூறியதுபற்றி வியப்படைந்தனர்.
19 மரியாளோ இந்நிகழ்ச்சிகளை எல்லாம் உள்ளத்தில் இருந்திச் சிந்தித்து வந்தாள்.
20 இடையர் தாம் கண்டது கேட்டதெல்லாம் நினைத்துக் கடவுளை மகிமைப் படுத்திப் புகழ்ந்துகொண்டே திரும்பினார். அவர்களுக்குச் சொன்னபடியே எல்லாம் நிகழ்ந்திருந்தது.
21 எட்டாம் நாள் வந்தபோது, குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டியிருந்தது. தாய் கருத்தரிக்கும் முன்பே தூதர் குறிப்பிட்டிருந்த ' இயேசு ' என்னும் பெயரை அதற்கு இட்டார்கள்.
22 மோயீசன் சட்டப்படி அவர்களுக்குச் சுத்திகார நாள் வந்தபோது குழந்தையை யெருசலேமுக்குக் கொண்டுபோயினர்.
23 'தலைப்பேறான எந்த ஆணும் ஆண்டவருடைய உரிமையாகக் கருதப்படும்' என்று ஆண்டவருடைய சட்டத்தில் எழுதியிருந்தபடி அதனை ஆண்டவர் திருமுன் நிறுத்தவும்,
24 அச்சட்டத்திலே கூறியுள்ளபடி ஒரு சோடி காட்டுப் புறாக்கள் அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைப் பலியாகக் கொடுக்கவும் வேண்டியிருந்தது.
25 அப்போது யெருசலேமிலே சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நீதிமான், கடவுள் பக்தர். இஸ்ராயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர் பார்த்திருந்தவர். பரிசுத்த ஆவி அவர்மீது இருந்தார்.
26 ஆண்டவருடைய மெசியாவைக் காண்பதற்குமுன் தாம் சாவதில்லை என்று பரிசுத்த ஆவியால் அறிவிக்கப்பெற்றிருந்தார்.
27 அவர் தேவ ஆவியின் ஏவுதலால் கோயிலுக்கு வந்தார். திருச்சட்ட முறைமைப்படி குழந்தைக்குச் செய்யவேண்டியதை நிறைவேற்றுவதற்குப் பாலன் இயேசுவைப் பெற்றோர் கொண்டு வந்தபோது,
28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு,
29 "ஆண்டவரே, இப்போது உம் அடியானை அமைதியாகப் போகவிடும். ஏனெனில், உமது வாக்கு நிறைவேறிற்று.
30 மக்கள் அனைவரும் காண நீர் ஆயத்தம் செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
31 இதுவே புறவினத்தாருக்கு இருள் அகற்றும் ஒளி.
32 இதுவே உம் மக்கள் இஸ்ராயேலை ஒளிர்விக்கும் மாட்சிமை" என்று கடவுளைப் போற்றினார்.
33 குழந்தையைக் குறித்துக் கூறியவற்றைக் கேட்டு அதன் தாயும் தந்தையும் வியந்து கொண்டிருந்தனர்.
34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாளைப் பார்த்து, "இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்; எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான்.
35 உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்-- இதனால் பலருடைய உள்ளங்களினின்று எண்ணங்கள் வெளிப்படும்" என்றார்.
36 அன்றியும், ஆசேர் குலத்தைச் சார்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்றொருத்தி இருந்தாள். அவள் இறைவாக்குரைப்பவள்.
37 வயதில் மிக முதிர்ந்தவள்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவனோடு வாழ்ந்தபின், கைம்பெண் ஆனாள். ஏறக்குறைய எண்பத்து நான்கு வயதானவள். கோயிலை விட்டு நீங்காமல் நோன்பாலும் செபத்தாலும் அல்லும் பகலும் பணிபுரிந்து வந்தாள்.
38 அவளும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து, யெருசலேமின் விடுதலையை எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் குழந்தையைப்பற்றி எடுத்துரைத்தாள்.
39 ஆண்டவருடைய சட்டப்படி எல்லாம் நிறைவேற்றியபின், அவர்கள் கலிலேயாவில் உள்ள தம் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப் போனார்கள்.
40 பாலனோ வளர்ந்து வலிமை பெற்றார்; ஞானம் நிறைந்தவராகவும் இருந்தார்; கடவுள் அருளும் அவர்மீது இருந்தது.
41 ஆண்டுதோறும் அவருடைய பெற்றோர் பாஸ்காத் திருவிழாவுக்காக யெருசலேமுக்குப் போவார்கள்.
42 அவருக்குப் பன்னிரண்டு வயது நடக்கும்போது திருவிழாவின் முறைப்படி யெருசலேமுக்குச் சென்றனர்.
43 திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.
44 யாத்திரிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் ஒருநாள் வழிநடந்த பின்னர் உற்றார் உறவினரிடையே அவரைத் தேடினார்கள்.
45 அவரைக் காணாததால் தேடிக்கொண்டு யெருசலேமுக்குத் திரும்பினார்கள்.
46 மூன்று நாளுக்குப்பின் அவரைக் கோயிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை வினவுவதுமாய் இருந்தார்.
47 கேட்டவர் அனைவரும் அவருடைய மறுமொழிகளில் விளங்கிய அறிவுத்திறனைக் கண்டு திகைத்துப்போயினர்.
48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு மலைத்துப்போயினர். அவருடைய தாய் அவரைப் பார்த்து, " மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்துவிட்டாய் ? இதோ! உன் தந்தையும் நானும் உன்னை ஏக்கத்தோடு தேடிக்கொண்டிருந்தோமே! " என்றாள்.
49 அதற்கு அவர், " ஏன் என்னைத் தேடினீர்கள் ? என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா ?" என்றார்.
50 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை.
51 பின்பு அவர் அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாள்.
52 இயேசு வளர வளர ஞானத்திலும் முதிர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் மேன்மேலும் உகந்தவரானார்.
×

Alert

×