Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Luke Chapters

Luke 16 Verses

1 மேலும் அவர் தம் சீடர்களுக்குச் சொன்னதாவது: "பணக்காரன் ஒருவனிடம் கண்காணிப்பாளன் ஒருவன் இருந்தான். தன் தலைவனின் உடைமைகளை விரயம் செய்ததாக அவன்மீது குற்றம் சாட்டப்பட்டது
2 தலைவன் அவனை அழைத்து, 'என்ன இது? நான் உன்னைப்பற்றி இப்படியெல்லாம் கேள்விப்படுகிறேன். உன் கண்காணிப்புக் கணக்கை ஒப்புவி. நீ இனி என் கண்காணிப்பாளனாய் இருக்க முடியாது' என்றான்.
3 அப்போது கண்காணிப்பாளன், 'இனி என்ன செய்வது? கண்காணிப்பினின்று என்னைத் தலைவன் நீக்கிவிடப்போகிறானே. மண்வெட்டவோ எனக்கு வலிமையில்லை; பிச்சையெடுக்கவோ வெட்கமாய் இருக்கிறது.
4 கண்காணிப்பினின்று நான் தள்ளப்படும்போது, பிறர் என்னைத் தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளும்படி என்னசெய்யவேண்டுமென்பது எனக்குத் தெரியும்' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
5 " பின்பு, அவன் தன் தலைவனிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக அழைத்தான். ஒருவனைப் பார்த்து, 'என் தலைவனிடம் நீ எவ்வளவு கடன்பட்டிருக்கிறாய்?' என்று கேட்க,
6 அவன், 'நூறு குடம் எண்ணெய்' என்றான். அதற்கு அவன், 'இதோ! உன் கடன்பத்திரம், உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுது' என்றான்.
7 பின்னர், மற்றொருவனிடம், 'நீ எவ்வளவு கடன்பட்டிருக்கிறாய்?' என, அவன், 'நூறு கலம் கோதுமை' என்றான். அதற்கு அவன், 'இதோ! உன் கடன்பத்திரம், எண்பது என எழுது' என்றான்.
8 "அந்த அநீத கண்காணிப்பாளன் விவேகத்தோடு நடந்துகொண்டதற்காகத் தலைவன் அவனை மெச்சிக்கொண்டான். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்.
9 "ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.
10 மிகச் சிறிய காரியத்தில் நம்பத்தக்கவன், பெரியதிலும் நம்பத்தக்கவனே. மிகச் சிறியதில் நீதியற்றவன், பெரியதிலும் நீதியற்றவனே.
11 அநீத செல்வத்தின்மட்டில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய் இருந்தால், உங்களை நம்பி உண்மைப்பொருளை ஒப்படைப்பவர் யார் ?
12 உங்களுக்குப் புறம்பான பொருட்கள் மட்டில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய் இருந்தால், உங்களுடையதை உங்களுக்கு அளிப்பவர் யார்?
13 எந்த வேலைக்காரனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனிடம் அன்பாயிருப்பான். அல்லது, ஒருவனை சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது.
14 பொருளாசை மிக்க பரிசேயர் இதெல்லாம் கேட்டு அவரை ஏளனம் செய்தனர்.
15 அவர்களுக்கு அவர் கூறியதாவது: "மனிதர்முன் நீதிமான்களாகக் காட்டிக்கொள்ளுகிறவர்கள் நீங்கள்தாம். கடவுளோ உங்கள் உள்ளங்களை அறிவார். மனிதர்களுக்கு மேன்மையானது கடவுளுக்கு அருவருப்பானது.
16 "திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் அருளப்பர் காலம்வரைதான். அதுமுதல் கடவுளின் அரசைப்பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. அதில் ஒவ்வொருவனும் பலவந்தமாய் நுழைகிறான்.
17 "திருச்சட்டத்தின் ஒரே ஒரு புள்ளி விட்டுப்போவதினும் விண்ணும் மண்ணும் மறைவது எளிதாகும்.
18 "தன் மனைவியை விலக்கிவிட்டு, வேறு ஒருத்தியை மணப்பவன் விபசாரம் செய்கிறான் தன் கணவனால் விலக்கப்பட்டவனை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.
19 "பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் விலையுயர்ந்த ஆடையும், மெல்லிய உடையும் அணிந்து நாள்தோறும் ஆடம்பரமாய் விருந்தாடுவான்.
20 அவனுடைய வாசலருகே இலாசர் என்னும் ஏழை ஒருவன் கிடந்தான்; அவன் உடலெல்லாம் ஒரே புண்ணாயிருந்தது
21 அவன் அப்பணக்காரனின் பந்தியில் சிந்தினவற்றைக்கொண்டு பசியாற்ற விரும்பினான். நாய்கள் கூட வந்து அவனுடைய புண்களை நக்கும்.
22 இந்த ஏழை இறந்தான்; வானதூதர் அவனைத் தூக்கிச்சென்று ஆபிரகாமின் அருகிலேயே அமர்த்தினர். பணக்காரனும் இறந்தான்; புதைக்கப்பட்டான்.
23 " அவன் பாதாளத்திலே வேதனைப்படுகையில் ஏறெடுத்துப் பார்த்தான். தொலைவில் ஆபிரகாமையும், அவர் அருகிலேயே அமர்ந்திருந்த இலாசரையும் கண்டான்.
24 ' தந்தை ஆபிரகாமே, என்மீது இரங்கி, இலாசர் தன்விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து, என் நாவைக் குளிரச்செய்யும்படி அவனை அனுப்பும். நான் இந்நெருப்பில் வேதனைப்படுகிறேன்' என்று கத்தினான்.
25 ஆபிரகாம் அவனை நோக்கி, 'மகனே, வாழ்நாளில் உனக்கு இன்பசுகமே கிடைத்தது, இலசாருக்குத் துன்ப துயரமே கிடைத்தது. இதை நினைத்துப்பார். ஆனால், இப்பொழுது அவன் இங்கே ஆறுதலடைகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பாதாளம் ஒன்று அமைந்துள்ளது. எனவே, இங்கிருந்து உங்களிடம் கடந்துவர ஒருவன் விரும்பினாலும் முடியாது; அங்கிருந்து எங்களிடம் தாண்டிவருவதும் கிடையாது ' என்றார்.
27 அதற்கு அவன், 'தந்தையே, அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டுகிறேன்.
28 எனக்குச் சகோதரர் ஐவர் இருக்கின்றனர். அவர்களும் இந்த வேதனைக் களத்திற்கு வராதபடி அவன் எச்சரிக்கட்டும்' என்றான்.
29 ஆபிரகாமோ, 'அவர்களுக்கு மோயீசனும் இறைவாக்கினர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார்.
30 அவனோ, 'அப்படியன்று, தந்தை ஆபிரகாமே, இறந்தோரிடமிருந்து யாராவது அவர்களிடம் சென்றால், மனந்திரும்புவர்' என்றான்.
31 அதற்கு அவர், 'மோயீசனுக்கும் இறைவாக்கினர்களுக்கும் செவிசாய்க்காவிடில் இறந்தோரிடமிருந்து ஒருவன் உயிர்த்தெழுந்தாலும் நம்பமாட்டார்கள் ' என்றார்."
×

Alert

×