English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Luke Chapters

Luke 11 Verses

1 அவர் ஒருநாள் ஓரிடத்தில் செபம் செய்துகொண்டிருந்தார். அது முடிந்தபின், சீடருள் ஒருவர் அவரைப் பார்த்து, "ஆண்டவரே, அருளப்பர் தம் சீடருக்குச் செபிக்கக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்" என்றார்.
2 அதற்கு அவர், "நீங்கள் செபிக்கும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: 'தந்தாய், உமது பெயர் பரிசுத்தம் எனப் போற்றப்படுக, உமது அரசு வருக;
3 எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும்,
4 எங்கள் பாவங்களை மன்னித்தருளும், ஏனெனில், எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர் அனைவரையும் நாங்களும் மன்னிக்கிறோம். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் " ' என்றார்.
5 மேலும் "உங்களுள் ஒருவன் தன் நண்பனிடமே நள்ளிரவில் சென்று, ' நண்பா, எனக்கு மூன்று அப்பம் கடன்கொடு.
6 ஏனெனில், பயணம்செய்யும் என் நண்பன் ஒருவன் என்னிடம் வந்திருக்கிறான். அவனுக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை ' என்று சொல்லுகிறான் என வைத்துக் கொள்வோம்.
7 அவனும் உள்ளிருந்து மறுமொழியாக, ' என்னைத் தொந்தரவுசெய்யாதே. கதவு பூட்டியாயிற்று. என் குழந்தைகளும் என்னோடு படுக்கையில் உள்ளனர். எழுந்து உனக்குக் கொடுக்கமுடியாது ' என்று சொல்லுகிறான்.
8 நண்பனோ கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால், அவன் தன் நண்பன் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவனுடைய தொல்லையின் பொருட்டாவது எழுந்து, அவனுக்கு எத்தனை தேவையோ அத்தனையும் கொடுப்பான் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
9 "மேலும் உங்களுக்குச் சொல்லுகிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
10 ஏனெனில், கேட்கிற எவனும் பெறுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
11 உங்களில் ஒருவன் தன் தந்தையிடம் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லையா கொடுபபான்? மீன் கேட்டால், மீனுக்குப் பதிலாகப் பாம்பையா கொடுப்பான் ?
12 முட்டை கேட்டால், தேளையா கொடுப்பான் ?
13 ஆகவே, தீயோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிவீர்களானால், வானகத்திலுள்ள உங்கள் தந்தை, தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய்ப் பரிசுத்த ஆவியை அளிப்பார்! " என்றார்.
14 ஒருநாள் அவர் பேய் ஓட்டிக்கொண்டிருந்தார். அது ஊமைப்பேய். பேயை ஓட்டி விடவே, ஊமையன் பேசினான். மக்கள் வியப்படைந்தனர்.
15 அவர்களுள் சிலர், " பேய்கள் தலைவனான பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய் ஓட்டுகிறான்" என்றனர்.
16 வேறு சிலர் அவரைச் சோதிக்க, வானிலிருந்து அருங்குறி ஒன்று காட்டும்படி கேட்டனர்.
17 அவர்களுடைய எண்ணங்களை அறிந்த இயேசுவோ, "தனக்கு எதிராகப் பிரியும் எந்த அரசும் பாழாய்ப் போம்; வீடுகளும் ஒன்றன் மேல் ஒன்றாய் விழுந்தழியும்.
18 பெயல்செபூலைக்கொண்டு நான் பேய் ஓட்டுகிறேன் என்று சொல்லுகிறீர்களே; தனக்கு எதிராகத் தானே பிரியும் சாத்தானின் அரசு எப்படி நிலைக்கும்?
19 நான் பேய்களை ஓட்டுவது பெயல்செபூலைக்கொண்டு என்றால், உங்கள் மக்கள் யாரைக்கொண்டு ஓட்டுகிறார்கள். எனவே, அவர்களே உங்களுக்குத் தீர்ப்பிடுவார்கள்.
20 நான் பேய்களை ஓட்டுவது கடவுளின் விரலால் என்றால், கடவுளின் அரசு உங்களிடம் வந்துள்ளது.
21 வலியவன் போர்க்கோலம் பூண்டு தன் அரண்மனையைப் பாதுகாத்தால், அவன் உடைமைகள் பத்திரமாக இருக்கும்.
22 அவனிலும் வலியவன் ஒருவன் எதிர்த்துவந்து அவனை வென்றால், அவன் நம்பியிருந்த போர்க்கருவிகளையெல்லாம் பறித்துக்கொண்டு கொள்ளைப் பொருளையும் பங்கிடுவான்.
23 "என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.
24 "அசுத்த ஆவி ஒருவனை விட்டு வெளியேறியபின் வறண்ட இடங்களிலெல்லாம் சுற்றி அலைந்து, இளைப்பாற இடம் தேடிக் கண்டடையாமல், 'நான் விட்டுவந்த என் வீட்டிற்கே திரும்புவேன்' என்று சொல்லுகிறது.
25 திரும்பி வந்து, அவ்வீடு கூட்டி அழகுபடுத்தியிருப்பதைக் காண்கிறது.
26 மீண்டும் சென்று தன்னிலும் பொல்லாத வேறு ஏழு பேய்களை அழைத்துவர, அவை அதனுள் நுழைந்து குடியிருக்கின்றன. அம்மனிதனின் பின்னைய நிலை முன்னைய நிலையினும் மோசமாயிற்று" என்றார்.
27 அவர் இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது, கூட்டத்திலிருந்த பெண் ஒருத்தி, "உம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட கொங்கைகளும் பேறுபெற்றவையே" என்று குரலெடுத்துக் கூறினாள்.
28 அவரோ, "ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" என்றார்.
29 கூட்டம் பெருகப் பெருக, அவர் கூறலானார்: "இத்தலைமுறை பொல்லாத தலைமுறை. அருங்குறி ஒன்று கேட்கிறது. யோனாஸ் இறை வாக்கினரின் அருங்குறியேயன்றி வேறெந்த அருங்குறியும் அதற்கு அளிக்கப்படாது.
30 எவ்வாறு யோனாஸ் நினிவே மக்களுக்கு அருங்குறியாய் இருந்தாரோ, அவ்வாறே மனுமகனும் இத்தலைமுறைக்கு அருங்குறியாய் இருப்பார்.
31 தீர்வையின்போது தென்னாட்டு அரசி இத்தலைமுறையின் மக்களுக்கு எதிராக எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வாள். ஏனெனில், சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க உலகின் கடையெல்லையிலிருந்து வந்தாள். சாலோமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது.
32 தீர்வையின்போது, நினிவே மக்கள் இத்தலைமுறைக்கு எதிராக எழுந்து இதனைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில், அவர்கள் யோனாஸ் உரைத்த தூதைக் கேட்டு மனந்திரும்பினார்கள். யோனாசிலும் மேலானது இதோ! இங்குள்ளது.
33 ' எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை. மாறாக, உள்ளே வருவோரெல்லாரும் வெளிச்சத்தைக் காணும்படி விளக்குத் தண்டின்மீது வைக்கிறான்.
34 உன் கண்தான் உடலுக்கு விளக்கு. உன் கண் தெளிவாக இருந்தால், உடல் முழுவதும் ஒளியோடு விளங்கும். உன் கண் கெட்டிருந்தால், உடல் இருண்டிருக்கும்.
35 எனவே. உன்னிலுள்ள ஒளி இருளாயிருக்கிறதா என்றுபார்.
36 இருள் சிறிதுமின்றி உன் உடல் முழுவதும் ஒளியாயிருந்தால், விளக்கு தன் கதிரால் உனக்கு ஒளிச்செய்வதுபோல், உன் உடல் முழுவதும் ஒளியோடு விளங்கும்."
37 அவர் பேசிக்கொண்டிருக்கையில் பரிசேயன் ஒருவன் தன்னோடு உண்பதற்கு அவரை அழைத்தான். இயேசுவும் வந்து அமர்ந்தார்.
38 உண்பதற்கு முன்னால் கைகால் கழுவாததைக் கண்டு பரிசேயன் வியப்படைந்தான்.
39 ஆண்டவர் அவனை நோக்கி, "நீங்களோ, பரிசேயரே, கிண்ணத்தையும் உணவுப் பாத்திரத்தையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். உங்கள் உள்ளத்திலோ கொள்ளையும் தீமையும் நிறைந்துள்ளன.
40 அறிவிலிகளே, வெளிபுறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அன்றோ?
41 பாத்திரத்தில் உள்ளதைப் பிச்சைகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு எல்லாம் தூயதாய் இருக்கும்.
42 ஆனால் பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் புதினா, சதாப்பு, காய்கறி முதலியனவற்றுள் பத்திலொரு பாகம் செலுத்துகிறீர்கள். ஆனால், நீதியையும் கடவுளன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தாம் கடைப்பிடித்திருக்க வேண்டும்; அவற்றையும் விடலாகாது.
43 பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், பொது இடங்களில் வணக்கத்தையும் விரும்புகிறீர்கள்.
44 உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், அடையாளம் தெரியாத சவக்குழிகள் போல் இருக்கிறீர்கள். அவற்றை அறியாமல் மனிதர் அவற்றின்மேல் நடந்துபோகிறார்கள் " என்றார்.
45 சட்ட வல்லுநருள் ஒருவன் அவரிடம், "போதகரே, இப்படிப் பேசி எங்களையும் அவமானப்படுத்துகிறீர் " என்றான்.
46 அவர் கூறியதாவது: "சட்டவல்லுநரே, உங்களுக்கும் ஐயோ கேடு! ஏனெனில், தாங்கமுடியாத சுமையை மக்கள்மேல் சுமத்துகிறீர்கள். நீங்களோ அச்சுமையை ஒரு விரலாலும் தொடுவதில்லை.
47 "இறைவாக்கினர்களுக்குக் கல்லறை கட்டுகிற உங்களுக்கு ஐயோ கேடு! உங்கள் முன்னோரே அவர்களைக் கொன்றவர்கள்.
48 உங்கள் முன்னோரின் செயல்களுக்கு நீங்களும் உடன்படுகிறீர்கள் என்பதற்கு, இவ்வாறு சாட்சி அளிக்கிறீர்கள். ஏனெனில், உங்கள் முன்னோர் அவர்களைக் கொலைசெய்தனர்; நீங்களோ அவர்களுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள்.
49 "அதனால் தான் கடவுளின் ஞானம் இங்ஙனம் கூறியது: 'இறைவாக்கினர்களையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடம் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொல்லுவார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள்.'
50 ஆபேலுடைய இரத்தம்முதல், பீடத்திற்கும் புனித இல்லத்திற்கும் இடையே மடிந்த சக்கரியாசின் இரத்தம்வரை, உலகம் தோன்றியது முதல் சிந்தப்பட்ட இறைவாக்கினர்கள் அனைவரின் இரத்தத்திற்காக இத்தலைமுறையிடம் கணக்கு கேட்கப்படும்.
51 ஆம், உங்களுக்குச் சொல்லுகிறேன்: இத்தலைமுறையிடம் கணக்கு கேட்கப்படும்.
52 "சட்டவல்லுநரே. உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், அறிவின் திறவுகோலைக் கைப்பற்றிக்கொண்டு நீங்களும் நுழையவில்லை; நுழைவோரையும் தடுத்தீர்கள்."
53 அவர் அங்கிருந்து புறப்பட்டபோது, பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவர்மீது சீறி எழுந்து,
54 அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்கும்படி சூழ்ச்சியாகக் கேள்விகள் பல கேட்கலாயினர்.
×

Alert

×