நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: ஒரு மனிதன் ஒரு சிறப்பு நேர்ச்சை செய்து தன் உயிரைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருந்தால், அவன் பின்வரும் ( மதிப்பின்படி ) விலை செலுத்தக்கடவான்.
மதிப்புக்கேற்றபடி செலுத்த இயலாத வறியவனாயின், அவன் குருவுக்கு முன் வந்து நிற்கக்கடவான். குரு மதிப்பிட்டு, அவன் எவ்வளவு கொடுக்கத் திறனுள்ளவனென்று தீர்ப்புச் சொல்வாரோ அவ்வளவு அவன் கொடுக்கக்கடவான்.
அதை இனி மாற்றவே கூடாது. அதாவது நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதையும், கெட்டதிற்குப் பதிலாக நல்லதையும் கொடுக்கக் கூடாது. ஒருவன் ஒன்றுக்குப் பதிலாக வேறொன்றை மாற்றிக் கொடுக்கும்பொழுது மாற்றப்பட்டதும் எதற்குப் பதிலாக மாற்றப்பட்டதோ அதுவும், ஆக இரண்டுமே ஆண்டவருக்குச் சொந்தம்.
ஒரு மனிதன் நேர்ச்சை செய்து தன் வீட்டை ஆண்டவருக்கு நேர்ந்திருந்தானாயின், குரு அது நலமானதா என்று பார்த்து எவ்வளவுக்கு மதிப்புச் சொல்வாரோ அவ்வளவுக்கு விற்கப்படும்.
ஒருவன் தனக்குச் சொந்தமான வயலை ஆண்டவருக்கு நேர்ந்திருந்தால் அதன் விதைப்புக்கு ஏற்றபடி விலை இருக்க வேண்டும். ஒரு நிலம் விதைக்க முப்பது கலம் வாற்கோதுமை செல்லுமென்றால், அந்த நிலம் ஜம்பது சீக்கல் வெள்ளி பெறும்.
ஜுபிலி ஆண்டுக்குப் பின் அது நேர்ச்சையானதென்றால், அடுத்த ஜுபிலி ஆண்டுவரை எத்தனை ஆண்டு செல்லுமென்று பார்த்தே குரு மதிப்புச் சொல்ல வேண்டும். அவற்றிற்கு ஏற்ப விலையைக் குறைக்கக் கடவார்.
தன் வயலை நேர்ந்து கொண்டவனே அதை மீட்டுக் கொள்ள மனம் கொண்டிருந்தால், மதிக்கப்பட்ட விலைக்கு மேல் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுத்தால் வயல் அவனுடையதாகும்.
குரு ஜுபிலி ஆண்டு வரையுள்ள ஆண்டுகளைக் கணித்து, அந்தக் கணக்கிற்கு ஏற்றபடி அதன் விலையைக் குறிக்கக் கடவார். அப்போது அதை நேர்ந்தவன் (விலையை) ஆண்டவருக்குச் செலுத்துவான்.
அசுத்தப் பிராணியின் தலையீற்றை அருச்சித்து ஒதுக்கினவன் அதன் மதிப்புக்கு மேலே ஐந்தில் ஒரு பங்கைக் கூடச் சேர்த்துக் கொடுத்து அதை மீட்டுக் கொள்வான். இப்படி மீட்டுக்கொள்ள அவன் இசையாதிருந்தால், அதன் மதிப்புக்கு ஏற்றபடி வேறொருவனிடம் விற்கப்படும்.
ஆண்டவருக்கென்று அருச்சிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட எதுவும் -- மனிதனும் சரி, மிருகமும் சரி, வயலும் சரி -- அது விற்கப்படவும், மீட்கப்படவும் கூடாது. அவ்விதமாக ஆண்டவருக்கு நேர்ச்சை செய்யப்பட்ட பொருட்களெல்லாம் மிகவும் பரிசுத்தமானவை. எனவே, அவை ஆண்டவருக்குச் சொந்தம்.
ஆயினும், ஒருவன் தன்னுடைய பத்திலொரு பாகமானவற்றை மீட்டுக்கொள்ள மனமுள்ளவனாயின், அவற்றின் விலையையும் விலையின் ஐந்தில் ஒரு பாகத்தையும் சேர்த்துக் கொடுக்கக் கடவான்.
அவற்றினிடையே நல்லது, கெட்டது பற்றி அவன் ஆராயவும் வேண்டாம்; மாற்றவும் வேண்டாம். மாற்றினால், அதுவும் பதிலுக்குக் கொடுக்கப்பட்டதும் ஆகிய இரண்டுமே ஆண்டவருக்குப் பரிசுத்தம். அது மீட்கப்படலாகாது என்றருளினார்.