மேகவெட்டை உள்ளவனுக்குக் கீழ் இருந்தது எல்லாம் மாலைவரை தீட்டாயிருக்கும். அதில் எதையும் சுமந்தவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
அப்படிப்பட்ட நோயுள்ளவன் தன் கைகளைத் தண்ணீரில் கழுவுவதற்கு முன் மற்றொருவனைத் தொட்டிருப்பானாயின், அவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
அவ்வித நோயுடையவன் நலமடைந்தானாயின், தான் சுத்தமானபின் ஏழு நாட்களை எண்ணிவருவான். பின் ஊற்று நீரில் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் குளித்த பின் சுத்தமுள்ளவனாவான்.
எட்டாம் நாளிலோ அவன் இரண்டு காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக்குஞ்சுகளை எடுத்துக் கொண்டு, ஆண்டவர் திருமுன் சாட்சியக் கூடார வாயிலில் வந்து, அவற்றைக் குருவிடம் கொடுப்பான்.
குரு பாவப் பரிகாரத்திற்கு ஒன்றையும் தகனப்பலிக்கு ஒன்றையும் ஒப்புக்கொடுத்த பின் அந்த மேகவெட்டையுள்ளவன் அதினின்று சுத்தமடையும்படி ஆண்டவர் திருமுன் வேண்டக்கடவார்.
ஒரு பெண் விலக்கமாய் இருக்கவேண்டிய காலமல்லாமல் அவளுடைய இரத்தம் பலநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது காலத்திற்கு மிஞ்சி இரத்தம் வற்றிப் போகாமல் இருந்தால், அது கண்டிருக்கும் நாளெல்லாம் அந்தப் பெண் மாதவிடாய் விலக்கம் போல் விலகியிருக்கக்கடவாள்.
ஆகையால், இஸ்ராயேல் மக்கள் அசுத்தத்திற்கு அஞ்சி, தங்கள் நடுவேயிருக்கும் நமது உறைவிடத்தை அசுத்தப்படுத்தியபின் தங்கள் அசுத்தங்களிலே சாகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டுமென்று அவர்களுக்கு அறிவுரை கூறக்கடவீர்கள்.
மாதவிடாயின் பொருட்டு விலக்காய் இருக்கிறவளுக்கும், அல்லது மித மிஞ்சின இரத்த ஊறல் உள்ளவளுக்கும், இப்படிப்பட்டவளோடு படுத்த ஆடவனுக்கும் ஏற்பட்ட சட்டம் இதுவே என்றார்