ஹேத்: அவர்கள் முகம் இப்பொழுது கரியை விடக் கறுத்து விட்டது; தெருக்களில் அடையாளம் தெரியவில்லை; அவர்கள் தசை எலும்போடு ஒட்டிக்கொண்டது; காய்ந்த மரம்போல் உலர்ந்து போனது.
தேத்: பசியால் மடிந்தவர்களைக் காட்டிலும் வாளால் மாண்டவர்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் முன்னவர் பூமியின் வறட்சியால் கொஞ்சம் கொஞ்சமாய் மாய்ந்து மடிந்தார்கள்.
காஃப்: ஆண்டவர் தம் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார், தமது கோபத்தின் தீயைக் கொட்டி விட்டார்; சீயோனில் நெருப்பையும் மூட்டிவிட்டார், அதன் அடிப்படைகளையும் அது விழுங்கி விட்டது.
சாமேக்: "விலகுங்கள், தீட்டு, விலகுங்கள், எட்டிப்போங்கள், தொடாதீர்கள்" என்று அவர்களிடம் கூவினார்கள்; அவர்களும் நாடோடிகளாய் அலைந்து திரிந்தனர்; "இனி நம்முடன் குடியிரார் " என வேற்றினத்தார் கூறினர்.
பே: ஆண்டவர் அவர்களைத் தம் திருமுன்னிருந்து அகற்றினார், மீண்டும் அவர்களைக் கண்ணோக்க மாட்டார்; தங்கள் அர்ச்சகர்களை மக்கள் மதிக்கவில்லை, மூப்பர்கள்மேல் அவர்கள் இரங்கவில்லை.
சாதே: பகைவர் நம் நடமாட்டங்களை விழிப்புடன் நோக்கினர், வீதிகளில் நாம் நடக்காதபடி தடுத்தனர்; முடிவு நமக்குக் கிட்டிவிட்டது, நம் நாட்கள் எண்ணப்பட்டு விட்டன; ஏனெனில், நமது முடிவு வந்துவிட்டது.
ரேஷ்: ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டு நமக்கு வாழ்வின் மூச்சாய் இருந்தவர் அவர்களுடைய படுகுழியில் பிடிபட்டார்; "புறவினத்தார் நடுவில் உம் நிழலில் வாழ்வோம்" என்று அவரைக் குறித்தே நாம் சொல்லி வந்தோம்.