English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Judges Chapters

Judges 9 Verses

1 அப்போது ஜெரோபாவாலின் மகன் அபிமெலேக் சிக்கேமிலிருந்த தன் தாயின் உறவினரிடம் சென்று அவர்களையும், தன் தாய் தந்தையரின் குடும்பத்தாரையும் நோக்கி,
2 நீங்கள் சிக்கேம் நகரத்தார் அனைவரையும் அழைத்து, 'ஜெரோபாவாலின் புதல்வர் எழுபது பேரும் ஆள்வது நலமா, அல்லது ஒருவன் மட்டும் ஆள்வது நலமா?' என்று அவர்களைக் கேளுங்கள். நான் உங்களின் எலும்பும் தசையுமானவன் என்பதை நினைத்துக் கொள்வீர்" என்றான்.
3 அப்படியே அவன் தாயின் உறவினர் சிக்கேமிலிருந்த எல்லா மனிதருக்கும் அது பற்றி எடுத்துரைக்க, அவர்கள் எல்லாரும், "அவன் நம் சகோதரன்" என்று கூறி அபிமெலேக்கைப் பின்பற்ற அவர்கள் இதயம் நாடி நின்றது.
4 எனவே, அவர்கள் பாவால் பெரித்கோயிலிருந்து எழுபது வெள்ளிக் காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தனர். அதைக் கொண்டு அபிமெலேக் ஏழைகளையும் நாடோடிகளையும் வேலைக்கு அமர்த்தினான். அவர்களும் அவனைப் பின்பற்றினர்.
5 எபிராவிலுள்ள தன் தந்தை வீட்டுக்கு அவன் போய்த் தன் சகோதரரான, ஜெரோபாவாலின் மக்கள் எழுபது பேரையும் ஒரே பாறையின் மேல் கொன்றான். அனைவரிலும் இளையவனான, ஜெரோபாவாலின் மகன் யோவாத்தாம் மட்டும் தப்பி ஒளிந்து கொண்டான்.
6 சிக்கேமிலிருந்த எல்லா மனிதரும் மெக்லோ நகரின் எல்லாக் குடும்பங்களும் சிக்கேமிலிருந்த கருவாலி மரத்தடியில் ஒன்று கூடி அபிமெலேக்கைத் தம் அரசனாக்கினர்.
7 யோவாத்தாமுக்கு இச்செய்தி எட்டவே அவன் கரிசிம் மலையுச்சிக்குப் போய் தனது குரலை உயர்த்திக் கூக்குரலிட்டு, "சிக்கேம் மனிதரே, கடவுள் உங்களுக்குச் செவிமடுக்கிறது போல, நீங்களும் எனக்குச் செவிகொடுங்கள்.
8 மரங்கள் தமக்குள் ஓர் அரசனைத் தேர்ந்தெடுக்க விரும்பி, ஒலிவ மரத்திடம், ' எமக்கு அரசனாயிரு' என்றன.
9 அதற்கு ஒலிவ மரம், 'தேவர்களும் மனிதரும் பயன்படுத்தும் செழுமையை உதறிவிட்டு, மரங்களுக்கு அரசனாவதா?' என்றது.
10 அப்போது மரங்கள் சீமை அத்திமரத்திடம், 'நீ வந்து எங்கள் அரசனாக இரு' என்க, அத்திமரம்,
11 'நான் என் இனிமையையும் நற்கனிகளையும் உதறிவிட்டு, மரங்களுக்குத் தலைவனாகவா?' என்றது.
12 பின்னர் மரங்கள் திராட்சையிடம், 'நீ வந்து எம்மை அரசாள்' என்றன.
13 அதற்குத் திராட்சை, 'தேவர்களையும் மனிதரையும் மகிழ்விக்கும் என் இரசத்தை விட்டு விட்டு, மரங்களை அரசாள நினைப்பேனோ?' என்றது.
14 அப்போது மரங்கள் எல்லாம் முட்செடியிடம், 'நீ வந்து எம்மை அரசாள்' என்றன.
15 அதற்கு முட்செடி, 'உண்மையாகவே நீங்கள் என்னை அரசனாக்கினால், எல்லாரும் என் நிழலில் வந்து இளைப்பாறுங்கள். இளைப்பாற மனமில்லையானால், முட்செடியினின்று தீ கிளம்பி லீபானின் கேதுரு மரங்களைச் சுட்டெரிக்கட்டும்' என்றது.
16 எனவே, உங்களுக்காகப் போரிட்டு உங்களை மதியானியர் கையிலிருந்து மீட்க
17 ஆபத்திலும் தன்னுயிரைப் பொருட்படுத்தாத ஜெரோபாவாலுக்கும் அவர் வீட்டாருக்கும் செய்நன்றியறியும் வகையில் குற்றமற்ற நேர்மையுள்ளத்தோடு அபிமெலேக்கை உங்கள் அரசனாக்கியிருந்தால் சரி;
18 நீங்களோ இன்று என் தந்தை வீட்டிற்கு எதிராய் எழும்பி அவர் எழுபது புதல்வரையும் ஒரே கல்லின்மேல் கொன்ற அவருடைய வேலைக்காரியின் மகனும் உங்கள் சகோதரனுமான அபிமெலேக்கைச் சிக்கேம் குடிகளுக்கு அரசனாக்கியிருக்கிறீர்களே!
19 எனவே, ஜெரோபாவாலுக்கும் அவர் வீட்டாருக்கும் குற்றமற்ற வகையில் நேர்மையோடு நீங்கள் நடந்திருந்தால், அபிமெலேக்கைப் பற்றி மகிழுங்கள்; அவனும் உங்களைப் பற்றி மகிழட்டும்.
20 நேர்மையற்று அதை நீங்கள் செய்திருந்தால், அவனிடமிருந்து தீ கிளம்பிச் சிக்கேம் குடிகளையும் மெல்லோ நகரையும் சுட்டெரிக்கட்டும். சிக்கேம் ஊராரிடமும் மெல்லோ நகரத்தாரிடமுமிருந்து தீ கிளம்பி அபிமேலேக்கைச் சுட்டெரிக்கட்டும்" என்றான்.
21 இவற்றைச் சொன்னபிறகு தன் சகோதரன் அபிமெலேக்குக்கு அஞ்சிப் பேராவுக்கு ஓடிப்போய் அங்கு வாழ்ந்தான்.
22 எனவே அபிமெலேக் இஸ்ராயேலை மூன்று ஆண்டுகள் ஆண்டான்.
23 பிறகு ஆண்டவர் அபிமெலேக்குக்கும் சிக்கேம் ஊராருக்கும் இடையே கொடும் பகையை மூட்டினார்.
24 அவனை அவர்கள் பகைத்தனர். அவர்கள் ஜெரோபாவாலின் எழுபது புதல்வரைக் கொன்று சிந்தின இரத்தப் பழியைத் தம் சகோதரன் அபிமெலக்கின் மேலும், அவனுக்கு உதவிய மற்றச் சிக்கேம் தலைவர்கள் மேலும் சாட்டினர்.
25 அவனுக்கு எதிராக மலை உச்சியில் கண்ணி வைத்து, அவன் வருமுன்னே அவ்வழியே சென்ற வரை எல்லாம் கொள்ளையடித்தனர். இது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.
26 அதற்குள் ஒபேத் மகன் காவால் தன் சகோதரரோடு சிக்கேமுக்கு வந்தான். அவனது வருகையால் உரம் பெற்ற சிக்கேம் ஊரார்,
27 வெளிக்கிளம்பித் திராட்சைத் தோட்டங்களைப் பாழாக்கிப் பழங்களை மிதித்து ஆடிப்பாடித் தம் கடவுளின் கோயிலினுள் புகுந்து, உண்டு குடித்து அபிமெலேக்கைச் சபித்தனர்.
28 அப்போது ஒபேத் மகன் காவால், "அபிமெலேக் யார்? சிக்கேம் எங்கே? நாங்கள் ஏன் அவனுக்கு ஊழியம் செய்யவேண்டும்? அவன் ஜெரோபாவாலின் மகன் தானே? அவன் தன் ஊழியன் சேபூலைச் சிக்கேமின் தந்தை ஏமோரின் மனிதருக்குத் தலைவனாக்கவில்லையோ? நாங்கள் ஏன் அவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும்?
29 ஆ! இம்மக்கள் மட்டும் என் கைக்குள் இருந்தால் நான் அபிமெலேக்கைக் கொன்று போடுவேன்!" என்றான். அப்போது யாரோ அபிமெலேக்கிடம், "உன் படைகளைத் திரட்டி நீ புறப்பட்டு வா" என்றான்.
30 ஏனெனில் நகரின் தலைவன் சேபூல் ஒபேதின் மகன் காவாலின் சொற்களைக் கேட்டு மிகவும் கோபமுற்றான்.
31 எனவே அபிமெலேக்குக்கு மறைவில் ஆள் அனுப்பி, "ஒபேதின் மகன் காவால் தன் சகோதரரோடு சிக்கேமுக்கு வந்து உனக்கு எதிராய் நகரைப் பிடிக்கப் பார்க்கிறான்.
32 எனவே, நீ இரவில் எழுந்து உன்னோடுள்ள மக்களோடு வயலிலே பதுங்கியிரு;
33 காலையில் சூரியன் தோன்றும் வேளையில் நகரின் மேல் பாய்ந்திடு; அவன் தன் ஆட்களோடு உனக்கு எதிராகப் புறப்படும் போது அவனுக்கு உன்னால் கூடியதைச் செய்" என்று சொன்னான்.
34 அவ்வாறே அபிமெலேக் தன் எல்லாச் சேனைகளோடும் இரவில் எழுந்து சிக்கேமைச் சுற்றி நான்கு இடங்களில் பதுங்கியிருந்தான்.
35 ஒபேதின் மகன் காவால் புறப்பட்டு நகரின் வாயிலில் நின்றான். அப்போது அபிமெலேக்கும் அவன் சேனைகளும் பதுங்கியிருந்த இடங்களிலிருந்து எழுந்தனர்.
36 காவால் அம்மக்களைப் பார்த்த போது சேபூலை நோக்கி, "இதோ மலைகளினின்று திரளான மக்கள் இறங்கி வருகின்றனர்" என்றான். அதற்கு அவன், "நீ மலைகளின் நிழலைக் கண்டு அவற்றை மனிதர் என்று எண்ணி ஏமாந்திருக்கிறாய்; இது உன் கண் மயக்கமே" என்றான்.
37 மறுபடியும் காவால், "நாட்டின் மேட்டிலிருந்து மக்கள் புறப்பட்டு இறங்கி வருகின்றனர். இதோ ஒரு படை கருவாலி மரத்தை நோக்கி வருகிறது" என்றான்.
38 அதற்குச் சேபூல், "நாங்கள் அபிமெலேக்குக்கு ஊழியம் செய்ய வேண்டிய தேவை என்ன என்று அன்று கூறிய உன் வாய் எங்கே? நீ வெறுத்த மக்கள் அல்லரோ அவர்கள்? இப்போது நீ வெளியேறி அவர்களோடு போர்தொடு" என்றான்.
39 சிக்கேம் மக்களின் கண் முன் காவால் போய் அபிமெலேக்கை எதிர்த்துப் போரிட்டான்.
40 அபிமெலேக் அவனைத் துரத்தி நகருக்குள் விரட்டினான். அவன் ஆட்களில் பலர் நகரின் வாயில் வரை விழுந்து மடிந்து கிடந்தனர்.
41 அபிமெலேக் ரூமாவில் தங்கினான். செபூலோ, நாவாலையும் அவனைச் சார்ந்தோரையும் நகரிலிருந்து துரத்தினான். அவர்கள் அங்குத் தங்குவதை அவன் விரும்பவில்லை.
42 மறுநாள் மக்கள் வெளியே வயலுக்கு வரக் கிளம்பினர். இச்செய்தி அபிமெலேக்குக்குத் தெரிவிக்கப்பட்டது.
43 அவன் தன் படையை நடத்திச் சென்று, அதை மூன்றாகப் பிரித்து வயல்களில் பதுங்கியிருந்தான். மக்கள் நகருக்கு வெளியே வந்த போது அபிமெலேக் எழுந்து அவர்கள் மேல் பாய்ந்தான்.
44 தன் படையைக் கொண்டு நகரைத் தாக்கி முற்றுகையிட்டான். வேறிரு படைகளும் அங்குமிங்கும் ஓடின. எதிரிகளைத் துரத்திச் சென்றன.
45 அபிமெலேக்கோ அன்று முழுவதும் நகரோடு போரிட்டு அதைப் பிடித்து மக்களைக் கொன்று போட்ட பின், அழிவுற்ற நகரில் உப்பை விதைத்தான்.
46 சிக்கேம் கோட்டையில் வாழ்ந்தோர் இதை கேள்வியுற்ற போது பெரித் எனும் தம் தெய்வத்தின் கோவினுள் நுழைந்து உடன்படிக்கை செய்து கொண்டனர். அதனால் அவ்விடத்திற்கு அப்பெயர் வந்தது. அது நன்கு காவல் செய்யப்பட்டிருந்தது.
47 சிக்கேம் கோபுரத்தில் மனிதர் எல்லாரும் கூடியிருக்கிறார்கள் என்று அபிமெலேக் கேள்வியுற்று, தன் சேனைகளுடன் செல்மோன் மலையின் மேல் ஏறினான்.
48 தன் கையில் ஒரு கோடாரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கிளையை வெட்டித் தன் தோளின் மேல் வைத்துக்கொண்டு, தன் தோழரை நோக்கி, "நான் செய்வதைப் போன்றே நீங்களும் உடனே செய்யுங்கள்" என்றான்.
49 அப்படியே அவர்கள் ஒவ்வொரு வரும் மரக்கிளைகளை வெட்டித் தம் தலைவனைப் பின் சென்று, கோட்டையைச் சுற்றிலும் மரங்களை அடுக்கித் தீயிட்டனர். தீயாலும் புகையாலும் கோட்டையில் இருந்த ஆணும் பெண்ணுமாக ஆயிரம் பேர் மாண்டனர்.
50 பிறகு அபிமெலேக் அங்கிருத்து புறப்பட்டுத் தெபேசுக்குப் போய்த் தன் சேனைகளோடு நகரை வளைத்து முற்றுகையிட்டான்.
51 நகரின் நடுவே உயர்ந்த கோபுரம் இருந்தது. ஆண்களும் பெண்களும் மக்கட் தலைவர்களும் அதற்குள் ஓடிப்போய்க் கதவுகளை இறுக்கி அடைத்து விட்டு, கோபுரத்தின் மேல் ஏறி அதன் உச்சிக்குச் சென்றனர்.
52 அபிமெலேக் கோபுரத்தின் அருகில் வந்து கொடும் போர் புரிந்தான். கதவை நெருங்கி அதைச் சுட்டெரிக்க முயன்றான்.
53 அந்நேரத்தில் ஒரு பெண் ஓர் எந்திரக் கல்லின் துண்டை அபிமெலேக்கின் மேல் போட்டு அவன் மண்டையை உடைத்தாள்.
54 அவன் உடனே தன் பரிசையனைக் கூப்பிட்டு, "ஒரு பெண்ணால் கொலையுண்டேன் என்று மக்கள் கூறாதபடிக்கு, நீ உன்வாளை உருவி என்னை வெட்டிவிடு" என்றான். அவனும் தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றும் வகையில் அவனைக் கொன்றான்.
55 அபிமெலேக் இறந்தபின் அவனுடன் இருந்த எல்லா இஸ்ராயேலரும் தத்தம் இடங்களுக்குத் திரும்பினர்.
56 அபிமெலேக் தன் எழுபது சகோதரரைக் கொன்று தன் தந்தைக்குச் செய்த பழிக்குக் கடவுள் அவனைப் பழிவாங்கினார்.
57 சிக்கேம் ஊரார் செய்த எல்லாத் தீமைகளையும் கடவுள் அவர்கள் தலை மேலேயே சுமத்தினார். ஜெரோபாவாலின் மகனான யோவாத்தாம் இட்ட சாபம் அவர்கள் மேல் விழுந்தது.
×

Alert

×