திரும்பிப் போய்த் தன் தாய் தந்தையரிடம், "தம்னாத்தாவில் பிலிஸ்தியர் புதல்வியருள் ஒருத்தியைக் கண்டேன். நீங்கள் தயவு செய்து அவளை எனக்கு மணமுடித்துத் தரவேண்டும்" என்றான்.
அதற்கு அவன் தாயும், தந்தையும், "உன் சகோதரர் புதல்வியரிலும் நம் உறவினத்திலும் பெண் இல்லையா? விருத்தசேதனம் செய்யப்படாத பிலிஸ்தியருள் ஒருத்தியை நீ ஏன் மனைவியாகத் தேர்ந்துகொள்ள வேண்டும்?" என்றனர். அதற்குச் சாம்சன் தந்தையை நோக்கி, "அவளையே எனக்கு முடிக்க வேண்டும். ஏனெனில் அவளை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்றான்.
அவன் பெற்றோர், இது ஆண்டவர் செயல் என்றும், அவன் பிலிஸ்தியரை அழிக்க நேரம் தேடுகிறார் என்றும் அறியாதிருந்தனர். ஏனெனில் அக்காலத்தில் பிலிஸ்தியர் இஸ்ராயேலை ஆண்டு கொண்டிருந்தார்கள்.
எனவே சாம்சன் தன் தாய் தந்தையரோடு தம்னாத்துக்குச் சென்றான். ஊரின் அருகே இருந்த திராட்சைத் தோட்டங்களை அவர்கள் நெருங்கின போது கொடிய சிங்கக்குட்டி ஒன்று முழங்கிக் கொண்டு அவனுக்கு எதிரில் வந்தது.
ஆண்டவரின் ஆவி சாம்சன் மேல் இறஙகினதால் அவன் கையில் ஒன்றுமில்லாதிருந்தும் ஆட்டுக் குட்டியைக் கிழித்துப் போடுவது போல் அச்சிங்கத்தைக் கிழித்துத் துண்டித்தான். ஆயினும், தான் செய்ததைத் தன் தாய் தந்தையருக்கு அவன் அறிவிக்கவில்லை.
சிலநாள் சென்று அவளை மணம் செய்து கொள்ளத் திரும்பவும் வரும்போது, முன்பு தான் கொன்ற சிங்கத்தின் உடலைக் காண வழியை விட்டுப் போய்ப் பார்த்தான். அதன் வாயில் தேனீக்கள் கூட்டமும் தேனும் இருந்தன.
அவன் அதைத் தன் கைகளில் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே வழி நடந்து தன் தாய் தந்தையரிடம் வந்து அவர்களுக்குத் தேனைக் கொடுத்தான். அவர்களும் அதை அருந்தினர். ஆனால் அது சிங்கத்தின் உடலினின்று எடுக்கப்பட்டது என்று அவர்களுக்கு அவன் அறிவிக்கவில்லை.
சாம்சன் அவர்களை நோக்கி, "நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்லுகிறேன். விருந்து நடக்கும் ஏழு நாளுக்குள் நீங்கள் அதை விடுவித்தால் நான் உங்களுக்கு முப்பது மென் துகில்களையும் முப்பது மேலாடைகளையும் கொடுப்பேன்.
உங்களால் அதை விடுவிக்க முடியவில்லை என்றால் முப்பது மென் துகில்களையும் முப்பது மேலாடைகளையும் நீங்கள் எனக்குத் தர வேண்டும்" என்றான். அதற்கு அவர்கள் "நாங்கள் கேட்கும்படி விடுகதையைச் சொல்" என்றார்கள்.
அப்போது சாம்சன் அவர்களைப் பார்த்து, "உண்போனிடமிருந்து உணவும், வலியோனிடமிருந்து இனிமையும் வெளிப்பட்டன" என்றான். முன்று நாட்களாக அதை அவர்கள் விடுவிக்க முடியவில்லை.
ஏழாம் நாள் வந்தபோது அவர்கள் சாம்சன் மனைவியை பார்த்து, "நீ உன் கணவனிடம் நயமாய்ப் பேசி அவ்விடுகதையின் பொருளை உனக்குக் கூற இணங்கச் செய்; அப்படிச் செய்யாவிட்டால், உன்னையும் உன் தந்தை வீட்டையும் தீக்கு இரையாக்குவோம். எங்களைக் கொள்ளையடிக்கவா உனது திருமணத்திற்கு அழைத்தாய்?" என்றனர்.
அவளோ சாம்சனிடம் கண்ணீர் விட்டு, " நீர் எனக்கு அன்பு செய்யாது என்னைப் பகைக்கிறீர்; எனவே தான் என் ஊராரின் புதல்வருக்கு நீர் கூறின விடுகதையை எனக்கு விளக்கிக் காட்டவில்லை" என்று முறையிட்டாள். அதற்கு அவன், "என் தாய் தந்தையருக்குக் கூட நான் அதைச் சொல்லவில்லையே; உனக்கு எப்படிச் சொல்ல கூடும்?" என்றான்.
விருந்து நடந்த ஏழு நாளும் அவள் அவன் முன்பாக அழுது கெண்டேயிருந்தாள். ஏழாம் நாளும் அவள் அவனைப் பாடாய்ப் படுத்தவே, சாம்சன் அவளுக்கு அதை விளக்கினான். உடனே அவள் அதைத் தன் ஊராருக்கு அறிவித்தாள்.
இவர்கள் ஏழாம் நாள் சூரியன் மறையுமுன் அவனை நோக்கி: "தேனை விட இனிமையானது எது? சிங்கத்தை விட வலிமையானது எது?" என்றனர். அதற்கு அவன், "நீங்கள் என் கிடாரியுடன் உழுதிராவிட்டால் என் விடுகதையை நீங்கள் கண்டு பிடித்திருக்க மாட்டீர்கள்" என்றான்.
ஆண்டவரின் ஆவி சாம்சன் மேல் இறங்கவே, அவன் அஸ்கலோனுக்குப் போய் முப்பது பேரைக் கொன்று அவர்களின் ஆடைகளை எடுத்து வந்து, கதையை விடுவித்தவர்களுக்குக் கொடுத்தான். பின்னர் மிகுந்த கோபம் அடைந்து தன் தந்தை வீட்டிற்குப் போனான்.