Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Joshua Chapters

Joshua 24 Verses

1 பின்பு யோசுவா இஸ்ராயேல் கோத்திரங்களை எல்லாம் சிக்கேமில் ஒன்றுகூட்டி, பொரியோர்களையும் மக்கட்தலைவர்களையும் நீதிபதிகளையும் போதகர்களையும் தம்பால் வரவழைத்தார்.
2 அவர்கள் ஆண்டவர் திருமுன் வந்து நின்றனர். அப்பொழுது அவர் எல்லா மக்களையும் நோக்கி "இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் திருவாய் மலர்ந்து அருள்வதாவது: 'முன்னாளில் உங்கள் முன்னோராகிய ஆபிரகாமுக்கும் நாக்கோருக்கும் தந்தையான தாரே நதிக்கப்புறத்தில் குடியிருந்த போது அவர்கள் அந்நிய தேவர்களை வழிபட்டு வந்தனர்.
3 அப்படியிருக்கையில் நாம் மெசொப்பொத்தேமியாவின் எல்லைகளிலிருந்து உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை அழைத்து வந்தோம்; அவனைக் கானான் நாட்டில் கொண்டு சேர்த்து அவன் சந்ததியைப் பெருகச் செய்தோம்.
4 அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தோம். ஈசாக்குக்கு யாக்கோப்பையும் எசாவுவையும் அளித்தோம். இவர்களுள் எசாவுக்குச் செயீர் என்ற மலைநாட்டைச் சொந்தமாகக் கொடுத்தோம். யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்.
5 பிறகு மோயீசனையும் ஆரோனையும் அனுப்பிப் பற்பல அடையாளங்களாலும் அதிசயங்களாலும் எகிப்தியரை வதைத்தோம்.
6 மறுபடியும் உங்களையும் உங்கள் முன்னோரையும் எகிப்திலிருந்து வெளியேற்றினோம். நீங்கள் கடற்கரைக்கு வந்த போது எகிப்தியர் தேர்களோடும் குதிரை வீரரோடும் உங்கள் முன்னோரைச் செங்கடல் வரை பின்தொடர்ந்தனர்.
7 அப்பொழுது இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட, அவர் கடலை எகிப்தியர் மேல் புரளச் செய்து தண்ணீரில் அவர்களை மூழ்கடித்தார். நாம் எகிப்தில் செய்தவற்றையெல்லாம் நீங்கள் கண்ணால் கண்டீர்கள்.
8 பின்பு வெகு நாள் பாலைவனத்தில் வாழ்ந்தீர்கள். அதன் பின் உங்களை யோர்தானுக்கு அப்புறத்தில் குடியிருந்த அமோறையரின் நாட்டிற்குக் கொண்டு வந்தோம். அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிடும் போதோ, நாம் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்தோம். அவர்கள் நாட்டையும் நீங்கள் கைப்பற்றினீர்கள்: அவர்களையும் கொன்று குவித்தீர்கள்.
9 மோவாப் நாட்டு அரசனான செப்போரின் மகன் பாலாக் எழுந்து இஸ்ராயேலை எதிர்த்துப் போரிட்டு, உங்கள்மேல் சாபம் போட பெயோரின் மகன் பாலாமை அழைத்து அனுப்பி வைத்தான்.
10 ஆனால் நாம் அவனுக்குச் செவி கொடாது அவன் மூலமாய் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களை அவன் கைகளினின்று விடுவித்தோம்.
11 பின்பு நீங்கள் யோர்தானைக் கடந்து எரிக்கோவுக்கு வந்து சேர்ந்தீர்கள். எரிக்கோ நகரின் வீரர்களும் அமோறையர்களும் பெரேசையர்களும் கானானையர்களும் ஏத்தையர்களும் கெர்கேசையர்களும் ஏவையர்களும் ஜெபுசேயர்களும் உங்களுடன் போரிடத் தொடங்கினர். நாம் அவர்களை உங்கள் கையில் அகப்படச் செய்தோம்.
12 மேலும். நாம் உங்களுக்கு முன்பாகச் செல்லும்படி குளவிகளுக்கும் கட்டளையிட்டு. உங்கள் வாளாலும் அம்புகளாலுமன்றி. அவற்றைக் கொண்டே அவர்களையும் அமோறைய அரசர் இருவரையும் அவர் தம் இடத்தினின்று நாம் துரத்தி விட்டோம்.
13 அப்படியே நீங்கள் குடியிருப்பதற்கு நீங்கள் பண்படுத்தாத நாட்டையும் நீங்கள் கட்டாத நகர்களையும். நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும் உங்களுக்குத் தந்தோம்.
14 ஆகையால் நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி உண்மையுடனும் முழு இதயத்துடனும் அவருக்குப் பணிபுரிந்து. உங்கள் முன்னோர் மெசோப்பொத்தேமியாவிலும் எகிப்திலும் தொழுது வந்த தேவர்களை அகற்றி விடுங்கள்.
15 ஆண்டவரைத் தொழுவது தீமையானது எனத் தென்பட்டால் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். மெசோப்பொத்தேமியாவில் உங்கள் முன்னோர் தொழுது வந்த தேவர்களை வழிபடுவதா அல்லது நீங்கள் வாழுகின்ற அமொறையர் நாட்டுத் தேவர்களை வழிபடுவதா என்பதில் எது உங்களுக்கு விருப்பமோ அதை இன்றே தீர்மானித்து விடுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவரையே தொழுது வருவோம்" என்றார்.
16 அப்போது மக்கள் மறுமொழியாக. "நாங்கள் ஆண்டவரை விட்டு விலகி அந்நிய தேவர்களைத் தொழுவது எங்களுக்குத் தூரமாய் இருப்பதாக.
17 நம்மையும் நம் முன்னோரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து கொணர்ந்தவரும், நம்முடைய கண்களுக்கு முன்பாக அத்தனை அதிசயங்களைச் செய்தவரும், நாம் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நம்மைப் பாதுகாத்தவரும். நாம் கடந்து போன எல்லா மக்களிடமிருந்தும் நம்மைக் காப்பாற்றினவரும் நம் ஆண்டவராகிய கடவுளேயன்றி வேறல்லர்.
18 இந்நாட்டில் குடியிருந்த அமோறையர் முதலான புறவினத்தார் அனைவரையும் நமக்கு முன்பாகத் துரத்திவிட்டவர் அவரன்றோ! அவரே நம் கடவுளாய் இருப்பதால் அவரையே வழிபடுவோம்" என்றனர்.
19 இதற்கு யோசுவா மக்களை நோக்கி. "ஆனால் நம் கடவுள் தூயவரும் வல்லவரும் தனியுரிமை பாராட்டுகிறவரும், உங்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் அறிந்திருக்கிறவருமாய் இருப்பதால் அவருக்கு நீங்கள் ஊழியம் செய்ய முடியாது.
20 முன்பு அவர் எத்தனையோ நன்மைகளை உங்களுக்குச் செய்திருந்தாலும் நீங்கள் அவரை கைவிட்டு அந்நிய தேவர்களைத் தொழுவீர்களேயாகில், அவர் மனம் மாறி உங்களைத் துன்புறுத்தி அடிமைப் படுத்துவார்" என்றார்.
21 மக்கள் யோசுவாவை நோக்கி, நீர் சொல்லுவது போல் ஒருபோதும் நிகழாதிருப்பதாக, ஏனெனில், நாங்கள் ஆண்டவரையே தொழுது வருவோம்" என்றனர். யோசுவா மக்களைப் பார்த்து,
22 அவரைத் தொழும்படி நீங்கள் அவரை உங்கள் ஆண்டவராகத் தேர்ந்துகொண்டதற்கு நீஙகள் சாட்சி" என்றார். அதற்கு மக்கள், "ஆம், நாங்கள் சாட்சி" என்று சொன்னார்கள்.
23 அப்பொழுது யோசுவா, "அப்படியானால், உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களைக் கொண்டு வாருங்கள். இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் பால் உங்கள் இதயத்தைத் திருப்புங்கள்" என்றார்.
24 மக்கள் இதைக் கேட்டு, "நம் ஆண்டவராகிய கடவுளையே வழிபடுவோம்; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்" என்று கூறினர்.
25 அதன்படி யோசுவா அன்றே சிக்கேமில் மக்களுடன் உடன்படிக்கை செய்து அவர்களுக்கு ஆண்டவருடைய சட்டங்களையும் நீதிநெறிகளையும் எடுத்துக் கூறினர்.
26 மேலும் இவ்வார்த்தைகளை எல்லாம் கடவுளின் சட்ட நூலில் எழுதி வைத்தார் .பிறகு ஒரு பெரிய கல்லை எடுப்பித்துப் புனித இடத்திற்கு அருகிலிருந்த தெரெபிந்த் என்ற ஒரு மரத்தின் கீழே அதை நாட்டினார்.
27 பின்னர் எல்லா மக்களையும் பார்த்து, "இதோ இக்கல் ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியிருக்கிற எல்லா வார்த்தைகளையும் கேட்டிருக்கின்றது. நீங்கள் எப்போதாவது அவற்றை மறுத்து உங்கள் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராகப் பொய் சொல்லத் துணிவீர்களேயானால், இக்கல் உங்கள் நடுவில் உண்மைக்குச் சான்றாக விளங்கும்" என்றார்.
28 பிறகு யோசுவா மக்களுக்கு விடைகொடுத்து அவர்களைத் தத்தம் வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.
29 இறுதியில் நூனின் மகனும் ஆண்டவரின் அடியானுமான யோசுவா தம் நூற்றிப்பத்தாவது வயதில் உயிர் நீத்தார்.
30 இஸ்ராயேலர் தாம்னாத்சாரேயில் அவருக்குச் சொந்தமான ஒரு நிலத்தில் அவரை அடக்கம் செய்தார்கள். அது எபிராயீமின் மலைநாட்டில் காவாசு மலைக்கு வடக்கே உள்ளது.
31 யோசுவாவின் வாழ்நாள் முழுவதும். அவருக்குப்பின் நெடுநாள் வாழ்ந்து வந்தவர்களும் ஆண்டவர் இஸ்ராயேலுக்குச் செய்து வந்த அனைத்தையும் அறிந்திருந்தவர்களுமான மூப்பர்களின் வாழ்நாள் முழுவதும் இஸ்ராயேலர் ஆண்டவரை வழிபட்டு வந்தனர்.
32 இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டு வந்திருந்த சூசையின் எலும்புகளைச் சிக்கேமிலே. யாக்கோபு சிக்கேமின் தந்தையாகிய கோமோருடைய புதல்வரின் கையில் நூறு ஆட்டுக் குட்டிகளைக் கொடுத்து வாங்கியிருந்த நிலத்தின் ஒரு பகுதியிலேயே புதைத்தனர். அந்நிலம் சூசையின் புதல்வருக்குச் சொந்தமாயிற்று.
33 ஆரோனின் மகன் எலெயசாரும் இறந்தார். அவரைக் கபாவாத்தில் அடக்கம் செய்தார்கள். அந்தக் கபாவாத் எலெயசாரின் மகன் பினேயெசுக்கு எபிராயீமின் மலையிலே கொடுக்கப்பட்டதாகும்.
×

Alert

×