English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Joshua Chapters

Joshua 22 Verses

1 அப்பொழுது யோசுவா ரூபானியர்களையும் காதியர்களையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் அழைத்து, அவர்களை நோக்கி,
2 ஆண்டவருடைய அடியாரான மோயீசன் உங்களுக்குக் கட்டளையிட்டவற்றையெல்லாம் நீங்கள் செய்து வந்துள்ளீர்கள். எனக்கும் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து வந்துள்ளீர்கள்.
3 நீங்கள் இதுவரை வெகுநாளாய் உங்கள் சகோதரரைக் கைவிடாமல் எல்லாவற்றிலும் உங்கள் ஆண்டவராகிய கடவுளுடைய கட்டளைகளின்படி நடந்து வந்துள்ளீர்கள்.
4 இப்பொழுதோ உங்கள் ஆண்டவராகிய கடவுள் முன்பு சொல்லியிருந்தபடி உங்கள் சகோதரருக்கு அமைதியையும் சமாதானத்தையும் ஈந்துள்ளார். ஆகையால், ஆண்டவருடைய அடியாரான மோயீசன் யோர்தானுக்கு அப்புறத்திலே உங்களுக்குச் சொந்தமாகக் கொடுத்துள்ள நாட்டிலிருக்கும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள்.
5 ஆயினும், ஆண்டவராகிய கடவுளின் அடியாரான மோயீசன் உங்களுக்குக் கொடுத்துள்ள கட்டளைகளையும் சட்டங்களையும் உறுதியாய்க் கைக்கொண்டு நுணுக்கமாய் நிறைவேற்றுவதில் கவனமாயிருங்கள். அதாவது. நீங்கள் ஆண்டவர் பால் அன்புகூர்ந்து, அனைத்திலும் அவர் வழி நின்று. அவர் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரைச் சார்ந்து நின்று, உங்கள் முழு இதயத்தோடும், முழு மனத்தோடும் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்" என்றார்.
6 மேலும், யோசுவா அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார். அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போயினர்.
7 மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கு மோயீசன் பாசானில் காணியாட்சி கொடுத்திருந்தார்; மற்றப் பாதிக் கோத்திரத்தாருக்கு யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மேற்றிசை முகமாய், அவர்கள் சகோதரரின் நடுவில் காணியாட்சி கொடுத்திருந்தார். ஆசி கூறி அவர்களைக் கூடாரங்களுக்கு அனுப்பியபொழுது, யோசுவா அவர்களை நோக்கி,
8 நீங்கள் மிகுந்த செல்வத்தோடும் சொத்தோடும், வெள்ளி, பொன், செம்பு, இரும்பு, இன்னும் பற்பல ஆடைகளோடும் ஊருக்குத் திரும்பிப் போகிறீர்களே. எதிரிகளிடமிருந்து நீங்கள் கொள்ளையிட்ட பொருட்களை உங்கள் சகோதரரோடு நீங்கள் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" என்றார்.
9 அப்பொழுது ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் நாட்டில் சீலோவிலிருந்த இஸ்ராயேல் மக்களை விட்டு ஆண்டவருடைய கட்டளைப்படி மோயீசன் மூலம் பெற்றிருந்த தம் சொந்த நாடான காலாத்துக்குப் போகப் புறப்பட்டனர்.
10 கானான் நாட்டிலிருக்கிற யோர்தானின் அணைக்கட்டுகளுக்கு வந்த போது அவர்கள் யோர்தானின் கரையிலே ஒரு மாபெரும் பீடத்தைக் கட்டி எழுப்பினார்கள்.
11 ரூபன் புதல்வர்களும் காத் புதல்வர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் நாட்டிலிருக்கிற யோர்தானின் அணைக்கட்டுகளிலே இஸ்ராயேல் மக்களுக்கு எதிராக ஒரு பீடத்தைக் கட்டியிருந்ததைப் பற்றி உறுதியாக அறிந்தவுடன் இஸ்ராயேல் மக்கள்,
12 அவர்களை எதிர்த்துப் போர்புரியும்படி சீலோவில் ஒன்று கூடினர்.
13 ஆயினும் முதன் முதலில் தலைமைக் குருவான எலெயசாரின் மகன் பினேயெசையும்.
14 அவரோடு கோத்திரத்திற்கு ஒருவராகப் பத்துக் கோத்திரத் தலைவர்களையும் காலாத் நாட்டிலிருந்து அவர்களிடம் தூது அனுப்பினர்.
15 இவர்கள் கலாத் நாட்டிற்கு வந்து ரூபன் புதல்வர். காத் புதல்வர். மனாசேயின் பாதிக்கோத்திரத்தாராகிய அனைவரையும் நோக்கி,
16 ஆண்டவரின் மக்கள் உங்களுக்குச் சொல்லச் சொன்னதாவது: 'நீங்கள் சட்டத்தை இப்படி மீறி நடந்தது ஏன்? இறைவனுக்கு எதிராகப் பீடம் எழுப்பி இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளைப் புறக்கணித்து அவரது வழிபாட்டினின்று தவறியது ஏன்?
17 நீங்கள் பெல்பேகோரில் புரிந்த தீச்செயல் போதாதா? மக்களில் பலர் மாண்ட பின்னும் அத்துரோகத்தின் மாசு இன்று வரை நம்மாட்டுளது. அது என்ன அற்பக் காரியமா?
18 நீங்கள் இன்று ஆண்டவரைப் புறக்கணித்துவிட்டதினால், அவர் நாளை இஸ்ராயேலின் சபையனைத்தின் மேலும் கடும் கோபம் கொள்வாரே!
19 உங்கள் காணியாட்சியான நாடு தீட்டுப்பட்ட நாடு என்று நீங்கள் எண்ணம் கொண்டிருந்தால், ஆண்டவருடைய பேழையுள்ள எங்கள் நாட்டிற்குத் திரும்பி வந்து எங்கள் நடுவே புதுக் காணியாட்சியைப் பெற்றுக் கொள்ளலாமே. நீங்கள் ஆண்டவரையும் எங்கள் தோழமையையும் விட்டு அகன்று போகாமல் நம் ஆண்டவராகிய கடவுளின் பலிபீடத்தையல்லாது நீங்கள் வேறொரு பீடத்தைக் கட்டவேண்டாம் என்று மட்டும் நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
20 ஜாரேயின் மகன் ஆக்கான் ஆண்டவருடைய கட்டளையை மீறினதினாலே இஸ்ராயேல் மக்கள் அனைவர்மேலும் ஆண்டவரின் கோபம் வரவில்லையா? அவன் ஒருவன் மட்டுமே தீச்செயல் புரிந்திருக்க, அவன் மட்டுமே மடிந்து போயிருந்தால் நலமாயிருந்திருக்குமே'" என்று சொன்னார்கள். அதைக் கேட்டு,
21 ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் இஸ்ராயேலின் தலைவர்களாகிய தூதுவர்களை நோக்கி,
22 மிக்க ஆற்றல் படைத்த ஆண்டவரான கடவுளுக்குத் தெரியும். தேவாதி தேவனாகிய அவர் அதை அறிந்திருக்கிறது போல் இஸ்ராயேலரும் அறிந்து கொள்ளட்டும். நாங்கள் கலகப் புத்தியினால் அப்பீடத்தைக் கட்டியிருந்தோமாகில் ஆண்டவர் எங்களைப் பாதுகாக்காமல் இவ்வேளையிலேயே தண்டிக்கக் கடவாராக.
23 நாங்கள் அந்தப் பீடத்தின்மேல் தகனப் பலிகளையாவது போசனப் பலிகளையாவது சமாதானப் பலிகளையாவது செலுத்துவதற்கு அதைக் கட்டியிருக்கிறோமேயானால் ஆண்டவர் எங்களைக் கணக்குக் கேட்கவும் தீர்ப்பிடவும் கடவாராக.
24 அப்படிப்பட்ட கருத்து எங்களுக்குத் துளியும் இல்லை. ஆனால், பிறகு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி, 'உங்களுக்கும் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளுக்கும் என்ன உறவு?
25 ரூபனின் புதல்வரே, காத் சந்ததியாரே, உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே, ஆண்டவர் யோர்தான் நதியை எல்லையாக வைத்திருக்கிறார். ஆதலால் ஆண்டவரிடத்தில் உங்களுக்குப் பங்கு இல்லை' என்று சொல்லி, எங்கள் பிள்ளைகள் ஆண்டவருக்கு அஞ்சி நடவாதபடி உங்கள் பிள்ளைகள் செய்தாலும் செய்வார்கள் என்று அஞ்சி, அதை நாங்கள் மனத்தில் கொண்டு,
26 எங்களுக்குள்ளே கலந்துபேசி, தகனப்பலி முதலிய பலிகளைக் செலுத்துவதற்கு அன்று;
27 ஆனால் ஆண்டவரிடத்தில் உங்களுக்குப் பங்கு இல்லை என்று உங்கள் சந்ததியார் பிறகு எங்கள் சந்ததியாருக்குச் சொல்லாதபடி நாங்கள் ஆண்டவரின் மேல் அன்புள்ளவர்களாய் இருக்கிறோம் என்றும் அவருக்குத் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தும் உரிமை எங்களுக்கு உண்டு என்றும், எங்களுக்கும் உங்களுக்கும் சாட்சியாய் இருக்க வேண்டும் என்றே நாங்கள் அப்பீடத்தைக் கட்டினோம்.
28 எப்போதாவது அவர்கள் அவ்விதமாகப் பேச நேரிட்டால், எங்கள் பிள்ளைகள் அவர்களை நோக்கி, 'இப்பீடம் தகனப் பலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்துவதற்கு அன்று; உங்களுக்கும் எங்களுக்கும் சாட்சியாய் இருப்பதற்காகவே, எங்கள் முன்னோரால் கட்டப்பட்டது' என்பார்கள்.
29 ஆண்டவருடைய பேழைக்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத் தவிர நாங்கள் தகனப் பலிகளையாவது போசனப்பலி முதலியவற்றையாவது ஒப்புக் கொடுக்க வேறொரு பீடத்தைக் கட்டுகிறதாயிருந்தால், அது ஆண்டவரைப் புறக்கணிப்பதும் அவர் அடிகளைப் பின்பற்றாமல் இருப்பதும் ஆகும். இப்படிப்பட்ட அக்கிரமம் எங்களைவிட்டு அகன்றிருப்பதாக; கடவுள் எங்களைக் காப்பாராக" என்று மறுமொழி சொன்னார்கள்.
30 ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் முன்சொன்ன வார்த்தைகளைக் கேட்டபோது. குருவாயிருந்த பினேயெசும் அவரோடு தூது சென்றிருந்த கோத்திரத் தலைவர்களும் கோபம் தணிந்து மிகுந்த திருப்தியடைந்தனர்.
31 அப்பொழுது எலெயசாரின் மகனாகிய குரு பினேயெசு அவர்களை நோக்கி. "நீங்கள் இப்படிப்பட்ட கலகம் உண்டு பண்ணாது இஸ்ராயேல் மக்களை ஆண்டவரின் கோபத்திற்குத் தப்புவித்தபடியால் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறோம்" என்றார்.
32 பிறகு பினேயெசு ரூபன் புதல்வரையும் காத் புதல்வரையும் விட்டுத் தம்மோடு வந்திருந்த கோத்திரத் தலைவரோடு காலாத் நாட்டிலிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டிற்குத் திரும்பி வந்தார். பின்னர் இஸ்ராயேல் மக்களிடம் நடந்தவற்றைச் சொன்னார்.
33 அச்செய்தியைக் கேட்டவர் யாவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இஸ்ராயேல் மக்கள் கடவுளை வாழ்த்தி. 'தங்கள் சகோதரரோடு போருக்குப் போவோம், அவர்கள் நாட்டை அழித்துப் போடுவோம்' என்ற பேச்சை விட்டு விட்டனர்.
34 மேலும், "ஆண்டவரே உண்மைக் கடவுள் என்பதற்கு அப்பீடம் எங்களுக்குச் சாட்சியாய் இருக்கும்" என்று சொல்லி ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் தாங்கள் கட்டியிருந்த பீடத்திற்கு 'எங்கள் சாட்சி' என்று பெயர் இட்டனர்.
×

Alert

×