இப்பொழுதோ உங்கள் ஆண்டவராகிய கடவுள் முன்பு சொல்லியிருந்தபடி உங்கள் சகோதரருக்கு அமைதியையும் சமாதானத்தையும் ஈந்துள்ளார். ஆகையால், ஆண்டவருடைய அடியாரான மோயீசன் யோர்தானுக்கு அப்புறத்திலே உங்களுக்குச் சொந்தமாகக் கொடுத்துள்ள நாட்டிலிருக்கும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள்.
ஆயினும், ஆண்டவராகிய கடவுளின் அடியாரான மோயீசன் உங்களுக்குக் கொடுத்துள்ள கட்டளைகளையும் சட்டங்களையும் உறுதியாய்க் கைக்கொண்டு நுணுக்கமாய் நிறைவேற்றுவதில் கவனமாயிருங்கள். அதாவது. நீங்கள் ஆண்டவர் பால் அன்புகூர்ந்து, அனைத்திலும் அவர் வழி நின்று. அவர் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரைச் சார்ந்து நின்று, உங்கள் முழு இதயத்தோடும், முழு மனத்தோடும் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்" என்றார்.
நீங்கள் மிகுந்த செல்வத்தோடும் சொத்தோடும், வெள்ளி, பொன், செம்பு, இரும்பு, இன்னும் பற்பல ஆடைகளோடும் ஊருக்குத் திரும்பிப் போகிறீர்களே. எதிரிகளிடமிருந்து நீங்கள் கொள்ளையிட்ட பொருட்களை உங்கள் சகோதரரோடு நீங்கள் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" என்றார்.
அப்பொழுது ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் நாட்டில் சீலோவிலிருந்த இஸ்ராயேல் மக்களை விட்டு ஆண்டவருடைய கட்டளைப்படி மோயீசன் மூலம் பெற்றிருந்த தம் சொந்த நாடான காலாத்துக்குப் போகப் புறப்பட்டனர்.
ரூபன் புதல்வர்களும் காத் புதல்வர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் நாட்டிலிருக்கிற யோர்தானின் அணைக்கட்டுகளிலே இஸ்ராயேல் மக்களுக்கு எதிராக ஒரு பீடத்தைக் கட்டியிருந்ததைப் பற்றி உறுதியாக அறிந்தவுடன் இஸ்ராயேல் மக்கள்,
ஆண்டவரின் மக்கள் உங்களுக்குச் சொல்லச் சொன்னதாவது: 'நீங்கள் சட்டத்தை இப்படி மீறி நடந்தது ஏன்? இறைவனுக்கு எதிராகப் பீடம் எழுப்பி இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளைப் புறக்கணித்து அவரது வழிபாட்டினின்று தவறியது ஏன்?
உங்கள் காணியாட்சியான நாடு தீட்டுப்பட்ட நாடு என்று நீங்கள் எண்ணம் கொண்டிருந்தால், ஆண்டவருடைய பேழையுள்ள எங்கள் நாட்டிற்குத் திரும்பி வந்து எங்கள் நடுவே புதுக் காணியாட்சியைப் பெற்றுக் கொள்ளலாமே. நீங்கள் ஆண்டவரையும் எங்கள் தோழமையையும் விட்டு அகன்று போகாமல் நம் ஆண்டவராகிய கடவுளின் பலிபீடத்தையல்லாது நீங்கள் வேறொரு பீடத்தைக் கட்டவேண்டாம் என்று மட்டும் நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
ஜாரேயின் மகன் ஆக்கான் ஆண்டவருடைய கட்டளையை மீறினதினாலே இஸ்ராயேல் மக்கள் அனைவர்மேலும் ஆண்டவரின் கோபம் வரவில்லையா? அவன் ஒருவன் மட்டுமே தீச்செயல் புரிந்திருக்க, அவன் மட்டுமே மடிந்து போயிருந்தால் நலமாயிருந்திருக்குமே'" என்று சொன்னார்கள். அதைக் கேட்டு,
மிக்க ஆற்றல் படைத்த ஆண்டவரான கடவுளுக்குத் தெரியும். தேவாதி தேவனாகிய அவர் அதை அறிந்திருக்கிறது போல் இஸ்ராயேலரும் அறிந்து கொள்ளட்டும். நாங்கள் கலகப் புத்தியினால் அப்பீடத்தைக் கட்டியிருந்தோமாகில் ஆண்டவர் எங்களைப் பாதுகாக்காமல் இவ்வேளையிலேயே தண்டிக்கக் கடவாராக.
அப்படிப்பட்ட கருத்து எங்களுக்குத் துளியும் இல்லை. ஆனால், பிறகு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி, 'உங்களுக்கும் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளுக்கும் என்ன உறவு?
ரூபனின் புதல்வரே, காத் சந்ததியாரே, உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே, ஆண்டவர் யோர்தான் நதியை எல்லையாக வைத்திருக்கிறார். ஆதலால் ஆண்டவரிடத்தில் உங்களுக்குப் பங்கு இல்லை' என்று சொல்லி, எங்கள் பிள்ளைகள் ஆண்டவருக்கு அஞ்சி நடவாதபடி உங்கள் பிள்ளைகள் செய்தாலும் செய்வார்கள் என்று அஞ்சி, அதை நாங்கள் மனத்தில் கொண்டு,
ஆனால் ஆண்டவரிடத்தில் உங்களுக்குப் பங்கு இல்லை என்று உங்கள் சந்ததியார் பிறகு எங்கள் சந்ததியாருக்குச் சொல்லாதபடி நாங்கள் ஆண்டவரின் மேல் அன்புள்ளவர்களாய் இருக்கிறோம் என்றும் அவருக்குத் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தும் உரிமை எங்களுக்கு உண்டு என்றும், எங்களுக்கும் உங்களுக்கும் சாட்சியாய் இருக்க வேண்டும் என்றே நாங்கள் அப்பீடத்தைக் கட்டினோம்.
எப்போதாவது அவர்கள் அவ்விதமாகப் பேச நேரிட்டால், எங்கள் பிள்ளைகள் அவர்களை நோக்கி, 'இப்பீடம் தகனப் பலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்துவதற்கு அன்று; உங்களுக்கும் எங்களுக்கும் சாட்சியாய் இருப்பதற்காகவே, எங்கள் முன்னோரால் கட்டப்பட்டது' என்பார்கள்.
ஆண்டவருடைய பேழைக்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத் தவிர நாங்கள் தகனப் பலிகளையாவது போசனப்பலி முதலியவற்றையாவது ஒப்புக் கொடுக்க வேறொரு பீடத்தைக் கட்டுகிறதாயிருந்தால், அது ஆண்டவரைப் புறக்கணிப்பதும் அவர் அடிகளைப் பின்பற்றாமல் இருப்பதும் ஆகும். இப்படிப்பட்ட அக்கிரமம் எங்களைவிட்டு அகன்றிருப்பதாக; கடவுள் எங்களைக் காப்பாராக" என்று மறுமொழி சொன்னார்கள்.
அப்பொழுது எலெயசாரின் மகனாகிய குரு பினேயெசு அவர்களை நோக்கி. "நீங்கள் இப்படிப்பட்ட கலகம் உண்டு பண்ணாது இஸ்ராயேல் மக்களை ஆண்டவரின் கோபத்திற்குத் தப்புவித்தபடியால் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறோம்" என்றார்.
பிறகு பினேயெசு ரூபன் புதல்வரையும் காத் புதல்வரையும் விட்டுத் தம்மோடு வந்திருந்த கோத்திரத் தலைவரோடு காலாத் நாட்டிலிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டிற்குத் திரும்பி வந்தார். பின்னர் இஸ்ராயேல் மக்களிடம் நடந்தவற்றைச் சொன்னார்.
அச்செய்தியைக் கேட்டவர் யாவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இஸ்ராயேல் மக்கள் கடவுளை வாழ்த்தி. 'தங்கள் சகோதரரோடு போருக்குப் போவோம், அவர்கள் நாட்டை அழித்துப் போடுவோம்' என்ற பேச்சை விட்டு விட்டனர்.
மேலும், "ஆண்டவரே உண்மைக் கடவுள் என்பதற்கு அப்பீடம் எங்களுக்குச் சாட்சியாய் இருக்கும்" என்று சொல்லி ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் தாங்கள் கட்டியிருந்த பீடத்திற்கு 'எங்கள் சாட்சி' என்று பெயர் இட்டனர்.