லீபான் முதல் மசெரேப்பொத் ஏரி வரை மலை வாழ்வோர் நாடும், சீதோனியருடைய நாடனைத்துமேயாம். இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாக அவ்விடங்களில் வாழ்வோர் அனைவரையும் நாமே அழித்தொழிப்போம். எனவே நாம் உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி அவர்களுடைய நாடெல்லாம் இஸ்ராயேலருக்குச் சொந்தமாகும்.
மனாசேயின் பாதிக்கோத்திரத்தோடு ரூபன் கோத்திரமும் காத் கோத்திரமும் தங்களுக்கு உரிய நாட்டை அடைந்து விட்டனர். அதை ஆண்டவரின் அடியானான மோயீசன் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கில் அவர்களுக்குக் கொடுத்தார்.
அந்நாடு ஆர்னோன் என்ற ஆற்றங்கரையிலிருக்கும் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்திருக்கும் ஆரோயேரும், தீபோன் வரையுள்ள மேதபா என்றும் அழைக்கப்படும் எல்லா வயல் வெளிகளும்,
பாசான் நாட்டிலிருக்கும் ஓக் என்ற அரசனின் நாடுமே. ஓக் என்பவன் மட்டுமே இராபாயிம் இனத்தில் எஞ்சி இருந்தவன்; இவன் அஸ்தரோத்திலும் எதிராயிலும் ஆட்சி புரிந்தவன். மோயீசன் அந்த இராபாயித்தரைக் கொன்று அழித்திருந்தார்.
மேலும் அது ஏசெபோனில் அரசனாயிருந்த செகோனுடைய அரசன் மற்றப் பங்குகளாகிய பெத்தரான், பெத்னெம்ரா, சோகொத், சாபோன் என்ற பள்ளத்தாக்குகளிலேயும் விரியும்; கடைசியில் கீழ்த்திசை முகமாய் யோர்தானுக்கு அப்புறத்தில் பரவியிருந்த கெனேரேத் கடலோரம் வரை யோர்தான் அதற்கு எல்லையாய் இருக்கின்றது.
மேலும், பாதிக் காலாதையும், பாசானிலே அஸ்தரோத், எதிராய் என்ற ஓக் அரசனுடைய நகர்களையும், மனாசேயின் மகனாகிய மாக்கீரின் புதல்வர் பாதிப்பேருக்கு அவர்களுடைய வம்ச முறைப்படி கொடுத்தார்.
கீழ்த்திசை முகமாய் எரிக்கோவுக்கு எதிராக, யோர்தானுக்கு அக்கரையிலிருக்கும் மோவாபின் வயல்வெளிகளில் மோயீசன் ஒரு பாகம் பிரித்து அவர்களுக்குச் சொந்தமாய்க் கொடுத்திருந்தார்.
லேவி கோத்திரத்திற்கு மோயீசன் சொந்தமாக எதையும் கொடுக்கவில்லை; ஏனெனில், இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் அவனுக்குச் சொல்லியிருந்தபடி, அவரே மேற்சொன்ன கோத்திரத்தின் உடைமை.