அப்பொழுது ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நீ அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நாளை இந்நேரத்திலே நாம் அவர்களை எல்லாம் இஸ்ராயேலர் முன்பாக வெட்டுண்டு போகும் படி கையளிப்போம். நீ அவர்களுடைய குதிரைகளின் குதிங்கால் நரம்புகளை அறுத்து அவர்களுடைய தேர்களைச் சுட்டெரிக்கக்கடவாய்" என்றார்.
ஆண்டவர் இஸ்ராயேலின் கையில் அவர்களை ஒப்படைத்தார். இஸ்ராயேலர் அவர்களை முறியடித்துப் பெரிய சீதோன் வரையும், இதன் கீழ்ப்புறத்திலிருந்த மஸ்பே சமவெளி வரையும் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தனர். யோசுவா அவர்களில் ஒருவரும் உயிரோடு இராதபடி எல்லாரையுமே வெட்டி வீழ்த்தினார்.
அதில் இருந்த எல்லா உயிர்களையும் அவர் வாளினால் வெட்டி வீழ்த்தினார். மீதியானது ஒன்றுமில்லை என்று கண்டோர் சொல்லும்படி, ஒருவரையும் உயிரோடிருக்க விடாது யாவற்றையும் அழித்துக் கொன்று குவித்து நகரையும் நெருப்பால் அழித்தார்.
சுற்றுப்புறத்திலுமுள்ள எல்லா நகர்களையும் அவற்றின் அரசர்களையும் பிடித்து, ஆண்டவருடைய அடியானான மோயீசன் தமக்குக் கட்டளையிட்டிருந்தபடியே கொன்று குவித்தார்.
இப்படியெல்லாம் பாழாக்கினாலும், குன்றுகளிலும் மேடுகளிலும் இருந்த நகர்களை இஸ்ராயேலர் சுட்டெரிக்காமல் காப்பாற்றினர். மிக்க உறுதியாய் அரணிக்கப்பட்டிருந்த ஆசோர் நகருக்கு மட்டும் தீ வைத்து அழித்து விட்டனர்.
கபாவோனில் குடியிருந்த ஏவையரைத் தவிர வேறெந்த நகரும் வலிய இஸ்ராயேலர் கையில் தன்னை ஒப்படைக்கவில்லை. மற்ற எல்லா நகர்களையும் அவர்கள் போர் புரிந்து தான் பிடித்தார்கள்.
ஏனெனில் அவ்வூரார் கடின மனதுள்ளவர்களாகி இஸ்ராயேலுக்கு எதிராகப் போர் புரிந்து மடியவேண்டும் என்பதும், இரக்கத்துக்குத் தகுதியற்றவர்களாய் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி அழிந்தொழிய வேண்டும் என்பதும் ஆண்டவருடைய திருவுளம்.
அக்காலத்தில் யோசுவா வந்து, ஏனாக் புதல்வரைக் கொன்று குவித்தார். அவர்கள் எபிரோனின் மலைகளிலும் தாபீரின் மலைகளிலும் ஆனாபின் மலைகளிலும் யூதாவின் மலைகளிலும் இஸ்ராயேலின் மலைகளிலும் குடியிருந்தார்கள். அவர் அவர்களுடைய நகர்களை அழித்து,
இஸ்ராயேல் மக்களின் நாட்டில் ஏனாக்கியரில் ஒருவரை முதலாய் உயிரோடு விட்டு வைக்கவில்லை. ஆயினும், காஜா, கேத், அஜோத் என்ற நகர் மக்களை உயிரோடு விட்டு வைத்தார்.
ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டருந்தபடியே யோசுவா நாடு அனைத்தையும் பிடித்து அதை அந்தந்தக் கோத்திரத்திற்கு அமைந்த மக்களின்படியே இஸ்ராயேலருக்குச் சொந்தமாகக் கொடுத்தார். போரின்றி நாடு அமைதியாய் இருந்தது.