இப்படிப் பேசியபின், இயேசு வானத்தை அண்ணாந்துபார்த்து மன்றாடியதாவது: "தந்தாய், நேரம் வந்துவிட்டது: உம் மகன் உம்மை மகிமைப்படுத்துமாறு நீர் உம் மகனை மகிமைப்படுத்தும்.
ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் எல்லாருக்கும் அவர் முடிவில்லா வாழ்வைக் கொடுக்கும்பொருட்டு, மனுமக்கள் அனைவர்மீதும் நீர் அவருக்கு அதிகாரம் அளித்திருக்கிறீர்.
உலகிலிருந்து பிரித்து நீர் எனக்கு அளித்த மக்களுக்கு உமது பெயரை வெளிப்படுத்தினேன். அவர்கள் உமக்கு உரியவர்களாயிருந்தார்கள்; அவர்களை என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உமது வார்த்தையைக் கேட்டார்கள்.
ஏனெனில், நீர் எனக்கு அறிவித்ததையே நான் அவர்களுக்கு எடுத்துச்சொன்னேன்; அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையாகவே அறிந்துகொண்டார்கள்; நீர் என்னை அனுப்பினீர் என்பதையும் விசுவசித்தார்கள்.
இனி, நான் உலகில் இரேன்; அவர்களோ உலகில் இருக்கின்றார்கள்; நான் உம்மிடம் வருகிறேன். பரிசுத்த தந்தாய், நாம் ஒன்றாய் இருப்பதுபோல, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் ஒன்றாயிருக்கும்படி உமது பெயரால் அவர்களைக் காத்தருளும்.
நான் அவர்களோடு இருந்தபொழுது, அவர்களை உமது பெயரால் காத்து வந்தேன். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களைக் காப்பாற்றினேன். அவர்களுள் ஒருவனும் அழிவுறவில்லை. மறைநூல் நிறைவேறும்படி, அழிவுக்குரியவன்மட்டுமே அழிவுற்றான்.
எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக. தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்; நீர் என்னை அனுப்பினீர் என்று இதனால் உலகம் விசுவசிக்கும்.
இவ்வாறு நான் அவர்களுள்ளும், நீர் என்னுள்ளும் இருப்பதால், அவர்களும் ஒருமைப்பாட்டின் நிறைவை எய்துவார்களாக; இங்ஙனம், நீர் என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல் அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்.
தந்தாய், நானிருக்கும் இடத்திலே நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் என்னோடிருக்கும்படி விரும்புகிறேன். இதனால், உலகம் உண்டாகுமுன்பு நீர் என்மேல் அன்பு வைத்து எனக்களித்த மகிமையை அவர்கள் காண்பார்கள்.