நான் திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவன் என்னுள்ளும் நான் அவனுள்ளும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனி தருவான். ஏனெனில், என்னை பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.
உங்களை நான் இனி ஊழியர் என்று சொல்லேன்; ஏனெனில், தலைவன் செய்வது இன்னது என்று ஊழியனுக்குத் தெரியாது. ஆனால் உங்களை நண்பர்கள் என்றேன்; ஏனெனில், தந்தையிடமிருந்து நான் கேட்டதையெல்லாம் உங்களுக்கு அறிவித்தேன்.
நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்; நீங்கள் உலகில் சென்று பலன் தரும்படியாகவும், அந்தப் பலன் நிலைத்திருக்கும்படியாகவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே, நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்.
நீங்கள் உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால், உலகம் தனக்குச் சொந்தமானதை நேசிக்கும்; நீங்களோ உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல; ஏனெனில், நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்தேன். ஆதலால் தான் உலகம் உங்களை வெறுக்கின்றது.
ஊழியன் தலைவனுக்கு மேற்பட்டவன் அல்லன் என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள்; உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கேட்டிருந்தால்தானே, உங்கள் வார்த்தையையும் கேட்பார்கள்.
யாரும் செய்திராத செயல்களை நான் அவர்களிடையே செய்யாமல் இருந்திருந்தால், அவர்களுக்குப் பாவம் இராது. இப்பொழுதோ என்னையும் என் தந்தையையும் கண்டார்கள், கண்டும் வெறுத்தார்கள்.
நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார்; அவர் தந்தையிடமிருந்து வரும் உண்மையின் ஆவியானவர். அவர் வந்து என்னைப்பற்றிச் சாட்சியம் கூறுவார்.