எழுங்கள், குடிவெறியர்களே, எழுந்து அழுங்கள்; இனிய மதுவருந்துகிறவர்களே, அனைவரும் புலம்புங்கள்; ஏனெனில் இனிமேல் அவ்வினிய மது உங்கள் வாய்க்கு எட்டாமல் போகும்.
ஆற்றல் மிக்கதும், எண்ணிக்கையில் அடங்காததுமான மக்கள் இனமொன்று நம் நாட்டுக்கு எதிராய் வருகின்றது; அதன் பற்கள் சிங்கத்தின் பற்களைப் போன்றவை, அதன் கடைவாய்ப் பற்கள் பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்கள் போன்றவை.
நம் திராட்சைக் கொடிகளை அது பாழாக்கிற்று, நம் அத்திமரங்களைப் பிளந்தெறிந்தது; அவற்றின் பட்டைகளை உரித்து விட்டுக் கீழே வீழ்த்தியது, அதன் கிளைகள் உலர்ந்து வெளிறிப் போயின.
உழவர்களே, கலங்கி நில்லுங்கள், திராட்சைத் தோட்டக்காரர்களே, புலம்புங்கள்; ஏனெனில் கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமல் போயின; வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று.
திராட்சைக் கொடி வாடிப்போயிற்று, அத்திமரம் உலர்ந்து போனது; மாதுளை, பேரீந்து, பேரிலந்தை முதலிய வயல் வெளி மரங்கள் யாவும் வதங்கி விட்டன; மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு அகன்று விட்டது.
அர்ச்சகர்களே, கோணியுடுத்திக் கொண்டு அழுங்கள், பீடத்தில் பணிசெய்வோரே, புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, கோணியுடை அணிந்து இரவைக் கழியுங்கள்; ஏனெனில் உங்கள் கடவுளின் கோயிலில் உணவுப்பலியும் பானப்பலியும் இல்லாதாகின.
உண்ணா நோன்புக்கெனக் காலத்தைக் குறிப்பிடுங்கள், வழிபாட்டுக் கூட்டத்தைக் கூட்டுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கோயிலுக்கு மூப்பர்களையும், நாட்டு மக்கள் அனைவரையும் வரவழைத்து, ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள்.
விதைகள் மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயின, பண்டகச்சாலைகள் வெறுமையாய் கிடக்கின்றன, களஞ்சியங்கள் பாழடைந்து போயின; ஏனெனில் கோதுமை விளைச்சல் இல்லாமல் போயிற்று.
ஆண்டவரே, உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; ஏனெனில் காட்டிலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு பாழ்படுத்தி விட்டது. வயல் வெளியில் இருந்த மரங்களை எல்லாம் தீயானது சுட்டெரித்து விட்டது.