வழிப்போக்கர் தங்குமிடத்தைப் போலப் பாலை நிலத்தில் எனக்கோர் இடம் இருக்கக் கூடாதா! அப்பொழுது அவர்களை விட்டகன்று அங்கே போய் விடுவேனே! ஏனெனில் அவர்கள் அனைவரும் விபசாரிகள், துரோகிகளின் கூட்டம்;
அவர்களுடைய நாக்கு வில்லைப் போல வளைகிறது, அதில் உண்மை கொஞ்சமும் இல்லை, பொய்யே மலிந்துள்ளது; அவர்கள் ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்கு முன்னேறுகிறார்கள். நம்மை அவர்கள் அறிந்தார்களல்லர்.
ஒவ்வொருவனும் தன் அயலான் மட்டில் எச்சரிக்கையாய் இருக்கட்டும், எவனும் தன் சகோதரனை நம்பக் கூடாது; ஏனெனில் ஒவ்வொரு சகோதரனும் மற்றவனுடைய இடத்தைத் தந்திரமாய்க் கவர்ந்து கொள்கிறான்; ஒவ்வொரு நண்பனும் புறணி பேசுகிறான்.
ஒவ்வொருவனும் தன் சகோதரனை ஏமாற்றுகிறான்; எவனும் உண்மை பேசுவது இல்லை; பொய் சொல்வதில் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள்; அக்கிரமம் செய்கின்றனர்; மனம் வருந்தவே மாட்டார்கள்;
"மலைகளைக் குறித்து ஒப்பாரி வைத்து அழுவோம்; பாலை நிலத்தில் இருக்கும் செழித்த இடங்களுக்காகப் புலம்புவோம்; ஏனெனில் அவையெல்லாம் பாழாக்கப்பட்டன; இனி அங்கே போகிறவன் எவனுமில்லை; ஆடுமாடுகளின் குரலொலி கேட்கவில்லை; வானத்துப் பறவைகளும், வயல்வெளி மிருகங்களும், எல்லாம் அங்கிருந்து ஓடிப்போயின.
இதனைக் கண்டுணரத் தக்க ஞானமுள்ளவன் யார்? இதனை அறிவிக்கும்படி யாருக்கு ஆண்டவரின் வாய் பேசியிருக்கிறது? மனிதர் கடக்க முடியாதபடி நாடு பாழாகிப் பாலையானது ஏன்? மீண்டும் ஆண்டவர் கூறுகிறார்:
அவர்களும் அவர்களுடைய முன்னோர்களும் அறியாத புறவினத்தார்களுக்குள் அவர்களைச் சிதறடிப்போம்; அவர்களை முற்றிலும் அழிக்கவேண்டி அவர்களுக்குப் பின்னாலேயே வாளையும் அனுப்புவோம்."
ஏனெனில் ஏற்கெனவே சீயோனிலிருந்து புலம்பல் கேட்கிறது: ' ஐயோ, நாம் எக்கதியானோம்! எங்கள் மானமெல்லாம் போயிற்றே! நாங்கள் நாட்டை விட்டு அகன்றோம், எங்கள் வீடுகள் தகர்க்கப்பட்டன' என்கிறார்கள்."
பெண்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; அவரது வாய்மொழி உங்கள் காதுகளில் நன்றாய் ஏறட்டும்; உங்கள் புதல்வியர்க்கு ஒப்பாரி கற்றுக் கொடுங்கள்; ஒவ்வொருத்தியும் தன் தோழிக்குப் புலம்பல் கற்பிக்கட்டும்.
ஏனெனில் சாவு நம் பலகணிகள் வழியாய் ஏறி வந்தது; நம்முடைய அரண்மனைகளுக்குள் நுழைந்து விட்டது; தெருக்களில் உள்ள சிறுவர்களையும் பொது இடங்களில் உள்ள இளைஞர்களையும் வீழ்த்தி விட்டது;
ஆண்டவர் கூறுகிறார்: "ஞானி தன் ஞானத்தைப் பாராட்ட வேண்டாம்; வல்லவன் தன் வலிமையில் பெருமை கொள்ள வேண்டாம்; செல்வன் தன் செல்வங்களால் செருக்கு அடைய வேண்டாம்.
பெருமையடைய விரும்புகிறவன் நம்மையறியும் ஞானத்திலேயே பெருமையடையட்டும்; நிலையான அன்பும் நீதியும் நியாயமும் காட்டுகிற ஆண்டவர் நாமே என்பதில் அவன் பெருமிதம் கொள்ளட்டும்; ஏனெனில், இவற்றில் நாம் இன்பம் காண்கிறோம், என்கிறார் ஆண்டவர்."
விருத்தசேதனம்: நிலையற்ற உத்தரவாதம்: "இதோ நாட்கள் வருகின்றன; அப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டும் செய்யப் படாதவர்களாய் இருப்பவர் எல்லாரையும் தண்டிப்போம்;
எகிப்து, யூதேயா, இதுமேயா முதலிய நாடுகளையும், அம்மோன், மோவாபு மக்களையும், தங்கள் தலைமயிரை வட்டமாய் வெட்டிக் கொள்கிறவர்களும், பாலை நிலத்தில் வாழ்கிறவர்களுமான எல்லாரையும் தண்டிப்போம்; ஏனெனில் இந்த இனத்தவரெல்லாரும் உடலில் விருத்தசேதனம் செய்யப்படவில்லை; ஆனால் இஸ்ராயேல் வீட்டார் அனைவரும் உள்ளத்திலே விருத்தசேதனம் இல்லாதவர்கள்."