பபிலோனுக்கு எதிராகத் தூற்றுவரை அனுப்புவோம், அவர்கள் அதனைத் தூற்றிப் போடுவார்கள். அதன் நாட்டை வெறுமையாக்கி விடுவார்கள்; ஏனெனில் அதன் துன்ப காலத்தில் எப்பக்கத்தினின்றும் வந்து அதன் மேல் பாய்ந்து விழுவார்கள்.
பபிலோனின் நடுவிலிருந்து ஒடிப்போங்கள், ஒவ்வொருவனும் தன்னுயிரைக் காத்துக் கொள்ளட்டும்! அதன் அக்கிரமத்துக்காக, நீங்கள் அழிந்து போகாதீர்கள்; ஏனெனில் இது ஆண்டவர் பழிவாங்கும் காலம், அவரே அதற்குக் கைம்மாறு தருவார்.
பபிலோன் ஆண்டவர் கையில் பொற் கிண்ணம் போலிருந்தது, அது உலகமனைத்துக்கும் போதையூட்டிற்று; மக்களினங்கள் அதன் இரசத்தைப் பருகின, ஆதலால் மக்களினங்கள் வெறி கொண்டன.
பபிலோனுக்கு நாங்கள் நலந்தர முயன்றோம், ஆனால் அது நலமடையவில்லை; அதனைக் கைவிட்டு விட்டு வாருங்கள், ஒவ்வொருவரும் நம் சொந்த நாட்டுக்குப் போவோம்; ஏனெனில் அதன் தீர்ப்பு வானமட்டும் எட்டிற்று, அதன் கண்டனம் மேகம் வரை உயர்ந்து போனது.
அம்புகளைத் தீட்டுங்கள்! அம்பறாத்தூணிகளை நிரப்புங்கள்! ஆண்டவர் மேதியர் அரசனின் ஊக்கத்தைத் தூண்டினார்; அவருடைய தீர்மானம் பபிலோனை அழிக்க வேண்டுமென்பது; ஏனெனில் இதுவே ஆண்டவருடைய பழி, தம் திருக்கோயிலை முன்னிட்டுத் தீர்த்துக் கொள்ளும் பழி.
பபிலோனின் மதில்கள் மேல் கொடியேற்றுங்கள், காவலை மிகுதியாக்குங்கள்; காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்துங்கள், பதுங்கிப் பாய்வோரைத் தயார் படுத்துங்கள்; ஏனெனில் பபிலோன் குடிகளுக்கு எதிராய் ஆண்டவர் சொன்னதெல்லாம் திட்டமிட்டு நிறைவேற்றுவார்.
'உன்னை எரிப்பூச்சிகள் போல மனிதர் சூழும்படி செய்வோம், உன்பேரில் பெற்ற வெற்றிக்காகப் பாட்டிசைப்பர்' என்று சேனைகளின் ஆண்டவர் தம் திருப்பெயரால் ஆணையிட்டுள்ளார்.
அவர் குரலொலி வானத்தில் வெள்ளப் பெருக்கின் இரைச்சல்போலக் கேட்கின்றது; அவரே பூமியின் எல்லைகளினின்று மேகங்களை எழுப்புகின்றார், மின்னல்களையும் மழையையும் பொழிகின்றார், தம் கிடங்குகளிலிருந்து காற்றைக் கொண்டு வருகிறார்.
யாக்கோபின் பங்காயிருப்பவர் அப்படிப்பட்டவர் அல்லர், ஏனெனில் அவரே யாவற்றையும் படைத்தவர்; இஸ்ராயேல் கோத்திரம் அவருடைய உரிமைச் சொத்து, சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்.
உன்னைக் கொண்டு இடையனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்கினோம்; உன்னைக் கொண்டு உழவனையும் அவனுடைய எருதுகளையும் நொறுக்கினோம்; உன்னைக் கொண்டு ஆளுநர்களையும் படைத் தலைவர்களையும் நொறுக்கினோம்.
நாசம் விளைவிக்கும் மலையே, இதோ, நாம் உனக்கு விரோதமாய் வருகின்றோம்; நீ உலக முழுவதையும் அழிக்கின்றாயே, உனக்கெதிராய் நாம் நம் கைகளை நீட்டுவோம்; உன்னைப் பாறைகளினின்று உருட்டி விடுவோம், உன்னை எரிந்து விட்ட மலையாக்குவோம், என்கிறார் ஆண்டவர்.
கல்தேயர் நாடு நடுநடுங்கி வேதனையால் துடிதுடிக்கும். ஏனெனில் பபிலோனுக்குக் கெதிராய் ஆண்டவர் திட்டங்கள் தீட்டியிருக்கிறார்; பபிலோனைக் குடியற்ற காடாக்குவதே அவரது நோக்கம்.
பபிலோனின் போர்வீரர்கள் போரிடுவதைக் கைவிட்டனர், கோட்டைகளுக்குள்ளேயே தங்கிவிட்டார்கள்; அவர்களுடைய ஆண்மை நசிந்து விட்டது, அவர்கள் அனைவரும் பேடிகள் ஆனார்கள்; அவர்களுடைய உறைவிடங்கள் தீக்கிரையாயின, அதன் கோட்டைத் தாழ்ப்பாள்களெல்லாம் உடைக்கப்பட்டன.
ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: புணையடிக்கும் காலத்தின் களம் போலப் பபிலோன் என்னும் மகள் மிதிபடுவாள்; இன்னும் கொஞ்ச காலம், அதன் அறுவடைக் காலம் வரப்போகிறது.
"பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் என்னை விழுங்கிவிட்டான், என்னை நசுக்கி விட்டான்; என்னை வெறுமையான பாத்திரம் போல் ஆக்கி விட்டான், வேதாளம் போல் என்னை விழுங்கி விட்டான்; என் இனிய உணவுகளால் தன் வயிற்றை நிரப்பிக்கொண்டு என்னைக் கொப்புளித்து வெளியே துப்பி விட்டான்.
அவர்கள் வெம்மையுற்றவர்களாய் இருக்கும் போது, அவர்களுக்கு நாம் பானம் தருவோம்; அவர்கள் மயங்கி விழும் வரை போதை ஏறும்படி அவர்களைக் குடிக்கச் செய்வோம்; அவர்களோ நீங்காத உறக்கத்தில் விழிக்காமல் உறங்கிடுவர், என்கிறார் ஆண்டவர்.
"பபிலோனில் பேலைத் தண்டிப்போம், அவன் விழுங்கினதை வாயினின்று கக்கச் செய்வோம்; மக்களினங்கள் இனி அவனிடம் ஒருபோதும் போக மாட்டார்கள், பபிலோனின் மதில்கள் விழுந்து விட்டன.
உங்கள் உள்ளம் தளராதிருக்கட்டும், நாட்டில் உலவும் வதந்தியைக் கேட்டு அஞ்சாதீர்கள்; ஓராண்டில் ஒரு வதந்தி உலவும், அடுத்த ஆண்டில் இன்னொரு வதந்தி உலவும்: நாட்டில் அக்கிரமம் மலிந்திருக்கும், ஓர் ஆளுநனுக்கு எதிராய் இன்னொரு ஆளுநன் வருவான்.
எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது; ஏனெனில் நாங்கள் நிந்தையைக் கேட்டோம்; நாணம் எங்கள் முகத்தை மூடிற்று; ஏனெனில் ஆண்டவருடைய கோயிலின் பரிசுத்த இடங்களுக்கு, அந்நியர்கள் வந்து விட்டார்கள்' என்கிறீர்கள்.
வானம் வரையில் பபிலோன் தன்னை உயர்த்திக் கொண்டாலும், தன் வலியரணைப் பலப்படுத்தி உயர்த்தினாலும், பாழாக்குவோரை அதன் மேல் நாம் அனுப்புவோம், என்கிறார் ஆண்டவர்.
ஏனெனில் ஆண்டவர் பபிலோனை அழிக்கிறார், அதன் பெரும் ஆரவாரத்தை அடக்குகிறார், அவர்களின் அலைகள் பெரும் வெள்ளம் போல் இரையும், அவர்களுடைய கூக்குரல் பேரொலியாய்க் கேட்கும்.
ஏனெனில் பாழாக்குவோன் பபிலோன் மீது வந்து விட்டான், அதன் வீரர்கள் பிடிபட்டனர், விற்கள் முறிபட்டன; ஏனெனில் ஆண்டவர் கைம்மாறு கொடுக்கும் கடவுள், அவர் சரிக்குச் சரியாய்ப் பலனளிப்பார்.
அதன் தலைவர்களையும் ஞானிகளையும் ஆளுநர்களையும், படைத்தலைவர்களையும் போர் வீரர்களையும் போதையேறச் செய்வோம்; அவர்களோ நீங்காத உறக்கத்தில் விழிக்காமல் உறங்கிடுவர், என்கிறார் சேனைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய அரசர்.
"சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: பபிலோனின் மிகப் பரந்த கோட்டைச் சுவர் அடிப்படையிலிருந்தே தரைமட்டமாக்கப்படும்: அதன் உயர்ந்த கதவுகள் நெருப்புக்கு இரையாகும், மக்களின் முயற்சிகள் வீணாகும், மக்களினங்களின் உழைப்புகள் தீக்கிரையாகிப் பாழாகும்."
யூதாவின் அரசனான செதோசியாஸ் ஆளுகையின் நான்காம் ஆண்டில், மகாசியாவின் மகனான நேரியாசின் மகன் சராயியாஸ் செதோசியாசோடு பபிலோனுக்குப் போகும் போது, எரெமியாஸ் இறைவாக்கினர் சராயியாசுக்கு ஒரு கட்டளை கொடுத்தார்; இந்த சராயியாஸ் என்பவன் அரசனுடைய பயணத்தில் அவனுக்குத் தங்குவதற்கு இடவசதி செய்பவன்.
பின் ஆண்டவரை நோக்கி, 'ஆண்டவரே, இந்த இடத்திற்கு விரோதமாய் நீர் பேசினீர்; இதனைப் பாழாக்கப் போவதாகவும், மனிதனோ மிருகமோ வாழ முடியாத அளவுக்கு இதனை என்றென்றைக்கும் பாலை வெளியாய் ஆக்கப் போவதாகவும் நீர் சொல்லியிருக்கிறீர்' என்று சொல்.
'நான் வரச் செய்யப் போவதாகச் சொன்ன தீமையினின்று எழுந்து மீளாதபடி பபிலோனும் இவ்வாறே மூழ்கிப் போவதாக' என்று சொல்" என்றார். எரெமியாசின் வார்த்தை இத்துடன் முற்றிற்று.