ஆண்டவரே, உம் கண்கள் நேர்மையையன்றோ தேடுகின்றன? நீர் அவர்களைத் தண்டித்தீர்; ஆயினும் அவர்கள் மனம் வருந்தவில்லை; நீர் அவர்களை நசுக்கினீர்; அவர்களோ திருத்தத்தை ஏற்க மறுத்து விட்டனர்; தங்கள் முகத்தைக் கல்லினும் கடியதாக்கிக் கொண்டனர்; மனம் வருந்த மறுத்து விட்டார்கள்.
ஆதலால் நான் பெரியோர்களிடம் போய்ப் பேசுவேன்; ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழியை அறிந்தவர்கள்; தங்கள் கடவுளின் சட்டத்தைக் கற்றவர்கள்." ஆயினும் அவர்கள் கூட நுகத்தை முறித்தார்கள்; கட்டுகளை அறுத்தெறிந்தார்கள்.
ஆதலால், காட்டுச் சிங்கம் அவர்களைக் கொன்றுவிடும்; பாலை நிலத்து ஓனாய் அவர்களை நாசமாக்கும்; வேங்கை அவர்கள் பட்டணங்கள் மீது கண்ணோக்குகிறது; அங்கிருந்து வெளியேறும் எவனையும் அது கிழித்தெறியும். ஏனெனில் அவர்களின் துரோகங்கள் மிகப் பல; அவர்கள் பல முறை ஆண்டவரை விட்டகன்றனர்.
நாம் உங்களை மன்னிப்பது எப்படி? உங்கள் மக்கள் நம்மைக் கைவிட்டார்கள்; கடவுளல்லாதவர்கள் பேரால் ஆணையிட்டார்கள்; நாம் அவர்களை வயிராற உண்பித்தோம்; அவர்கள் விபசாரம் பண்ணினார்கள்; விலைமாதர் வீடுகளுக்குக் கூட்டங் கூட்டமாய்ப் போனார்கள்.
சுவர்கள் மேல் ஏறுங்கள்; அவற்றையெல்லாம் அழியுங்கள்; ஆனால் முற்றிலும் அழித்து விடாதீர்கள்; அவளுடைய கிளைகள் ஆண்டவருடையவை அல்ல; ஆதலால் அவற்றைப் பிய்த்தெறியுங்கள்.
ஆகையால், சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "அவர்கள் அவ்வாறு பேசினமையால், இதோ அக்கினி மயமான நம் வார்த்தைகளை உன் வாயில் ஊட்டுவோம்; அவை கட்டைகளாகிய இம்மக்களைச் சுட்டெரிக்கும்;
இஸ்ராயேல் வீடே, உனக்கு விரோதமாகத் தொலைவிலிருந்து ஓர் இனத்தை அழைத்து வருவோம்; அது வல்லமை பொருந்திய இனம்; நெடுங்காலத்திலிருந்து நிலைத்திருக்கும் இனம்; அதன் மொழி உனக்குத் தெரியாது. அவர்கள் பேசுவதும் உனக்குப் புரியாது, என்கிறார் ஆண்டவர்.
அவர்கள் நீ வைத்திருக்கும் தானியங்களையும், சாப்பிட வைத்திருக்கும் அப்பத்தையும் உண்டு தீர்ப்பார்கள்; உன் புதல்வர், புதல்வியரை விழுங்குவார்கள்; ஆட்டுக் கிடைகளையும், மாட்டு மந்தையையும் கொன்றொழிப்பார்கள்; திராட்சைக் கொடியையும், அத்திமரங்களையும் தீர்த்து விடுவார்கள்; நீ நம்பிக்கை வைத்திருந்த அரண் சூழ்ந்த உன் பட்டணங்களையும் வாளால் அழிப்பார்கள்.
அவர்கள்: 'எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு இவற்றையெல்லாம் ஏன் செய்தார்?' என்று கேட்பார்களாகில், நீ அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி சொல்: ' நீங்கள் நம்மைக் கைவிட்டு விட்டு உங்கள் சொந்த நாட்டில் அந்நிய தெய்வங்களை வணங்கியது போல, நாம் உங்களை அந்நிய நாட்டில் அந்நியர்க்கு ஊழியஞ் செய்ய வைப்போம்."
ஆண்டவர் கேட்கிறார்: நீங்கள் நமக்கு அஞ்சுவதில்லையோ? நம் முன்னிலையில் நீங்கள் நடுங்குவதில்லையா? கடலுக்கு வரம்பாக நாம் மணலை வைத்தோம், அந்த வரம்பை என்றென்றைக்கும் அது கடக்க முடியாது; அலைகள் அடித்தாலும் அதை மேற்கொள்வதில்லை; சீறி எழுந்தாலும் அதை மீறி வருவதில்லை.
தக்க பருவகாலத்தில் முன் மாரி பின் மாரி மழையை நமக்கு அனுப்பி ஆண்டு தோறும் மிகுந்த விளைவு தரும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடப்போம்' என்று இம் மக்கள் நினைக்கவே இல்லை.
அவர்கள் கொழுத்துப் பருத்தார்கள்; அவர்கள் செய்த தீய செயல்களுக்குக் கணக்கில்லை: வழக்குகளை நீதியுடன் விசாரிப்பதில்லை, பெற்றோரை இழந்தவர்களுக்கு வாழ வழி செய்வதில்லை, ஏழைகளின் உரிமைகளைக் காப்பதுமில்லை.
தீர்க்கதரிசிகள் பொய் வாக்குரைக்கின்றனர்; அர்ச்சகர்கள் அவர்கள் சொற்படி ஆளுகிறார்கள்; மக்களும் அதைக் கண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் முடிவு வரும் போது என்ன செய்வீர்கள்?