அம்மோன் மக்களைப் பற்றிய இறைவாக்கு: ஆண்டவர் கூறுகிறார்: "இஸ்ராயேலுக்குப் புதல்வர் இல்லையா? அவனுக்கு வாரிசு இல்லையா? இருந்தால், மெல்கோம், காது நாட்டைக் கைப்பற்றுவானேன்? அவன் மக்கள் அதன் நகரங்களில் குடியேறுவானேன்?
ஆதலால், இதோ நாட்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்; அப்போது அம்மோன் மக்களின் இராபாத்துக்கு எதிராகப் போர் முரசு ஒலிக்கச் செய்வோம். அது பாழடைந்து மண்மேடாகும், அதனுடைய ஊர்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்; அப்போது இஸ்ராயேலோ தன் நாட்டைக் கைப்பற்றியவர்களைக் கைப்பற்றிக் கொள்ளும், என்கிறார் ஆண்டவர்.
எசெபோனே, புலம்பியழு, ஏனெனில், ஆயி நகர் அழிவுற்றது, இராபாத்துப் பெண் மக்களே, ஓலமிடுங்கள், சாக்குத் துணிகளை உடுத்திக் கொள்ளுங்கள்; வேலிகளைச் சுற்றித் திரிந்து புலம்புங்கள்; ஏனெனில் மெல்கோமும் அவன் பூசாரிகளும் தலைவர்களும் ஒருமிக்க நாடு கடத்தப்படுவார்கள்.
பிரமாணிக்கமற்ற மகளே, உன் செல்வங்களில் நம்பிக்கையை வைத்து, 'எனக்கெதிராய் வருபவன் யார்?' என்று சொல்லிக் கொண்டு, உன் பள்ளத்தாக்குகளைப் பற்றித் தருக்கிக் கொள்வானேன்? உன் பள்ளத்தாக்கு பாழாயிற்றே.
கேதான் குடிமக்களே, ஓடுங்கள், திரும்புங்கள், குழிகளில் இறங்கிக் கொள்ளுங்கள்; ஏனெனில் ஏசாவின் அழிவை அவன் மேல் கொண்டு வருவோம்; இது அவனது தண்டனைக் காலத்தில் நிறைவேறும்.
திராட்சைப் பழம் பறிப்பவர்கள் உன் தோட்டத்திற்கு வந்தால், திராட்சைப் பழங்களில் கொஞ்சமாவது விடமாட்டார்களா? இரவில் திருடர்கள் வருவார்களாயின், போதிய அளவுக்கு மேல் திருடமாட்டார்கள் அன்றோ?
நாமோ ஏசாவை வெளியே கொண்டு வருவோம், அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்துவோம், மறைந்திருக்க அவனால் இனி முடியாது; அவன் சந்ததியும் சகோதரரும் அயலாரும் அறிவார்கள்; அவனும் இல்லாமற் போவான்.
ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, இந்தத் தண்டனைப் பாத்திரத்தில் குடிக்கத் தக்க குற்றம் செய்யாதவர்களும் அதனைக் குடித்திருக்க, நீ மட்டும் தண்டனைக்குத் தப்புவாயோ? நீ தண்டனைக்குத் தப்ப முடியாது; நீயும் குடித்தே தீருவாய்.
ஏனெனில், ஆண்டவர் கூறுகிறார்: நமது பேரில் ஆணை! போஸ்ரா காடாகி, பாலைநிலமாகி மான பங்கத்திற்கும் சாபணைக்கும் இலக்காகும்; அதனைக் கண்டு யாவரும் திகிலடைவர்; அதன் பட்டணங்கள் யாவும் என்றென்றைக்கும் பாலையாய்க் கிடக்கும்."
ஆண்டவரிடமிருந்து எனக்கொரு செய்தி வந்தது, புறவினத்தார் நடுவில் ஒரு தூதுவன் அனுப்பப்பட்டான்: "ஒருமிக்கச் சேருங்கள், அதற்கெதிராய் வாருங்கள், போருக்குப் புறப்படுங்கள்!" என்று சொன்னான்.
பாறையின் வெடிப்புகளில் வாழ்கிறவனே, குன்றின் உச்சியைப் பிடித்திருக்கிறவனே, நீ விளைத்த அச்சமும், உன் உள்ளத்தின் இறுமாப்பும் உன்னை மயக்கி விட்டன; கழுகைப் போல் உன் கூட்டை உயரத்தில் நீ கட்டினாலும், உன்னை அங்கிருந்து இழுத்துப் போடுவோம், என்கிறார் ஆண்டவர்.
சோதோம், கொமோரா, அதன் சுற்றுப்புற நகரங்கள் யாவும் அழிக்கப்பட்ட போது நிகழ்ந்தது போல், இதிலும் மனிதன் எவனும் குடியிருக்கமாட்டான்; அதில் குடியேறவும் மாட்டான், என்கிறார் ஆண்டவர்.
இதோ யோர்தான் ஆற்றையடுத்துள்ள அடர்ந்த காட்டிலிருந்து செழிப்பான மேய்ச்சல் நிலத்துக்குள் பாய்ந்து வரும் சிங்கம் துரத்துவது போல் அவர்களை நாம் நாட்டிலிருந்து துரத்துவோம்; நமக்கு விருப்பமானவனை அதற்குத் தலைவனாக்குவோம்; நமக்குச் சமமானவன் யார்? நம்மை அழைத்து வர ஆணையிடத் தக்கவன் யார்? நம் முன்னிலையில் எதிர்த்து நிற்கும் மேய்ப்பன் எவன்?
ஆதலால் ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் செய்திருக்கும் யோசனையையும், தேமான் குடிமக்களுக்கு விரோதமாக அவர் எண்ணியிருக்கும் எண்ணங்களையும் கேளுங்கள்: மந்தையில் மிகச் சிறியனவும் இழுத்துப் போகப்படும்; அவற்றின் கிடை அதைக் கண்டு திகைப்படையும்.
இதோ, கழுகைப் போல் ஒருவன் எழுந்து பறந்து வருவான், தன் இறக்கைகளைப் போஸ்ராவின் மேல் விரிப்பான்; அந்நாளில் இதுமேயாவின் வீரர்களுடைய மனம், பிரசவ வேதனையுறும் பெண்ணின் மனத்தைப் போலிருக்கும்."
தமஸ்குவைப் பற்றிய இறைவாக்கு: "ஏமாத்தும் ஆற்பாதும் கலங்குகின்றன; ஏனெனில் அவர்கள் தீய செய்தியைக் கேள்விப்பட்டனர்! அவர்களுடைய இதயம் கவலையால் நொறுங்குகிறது, அதற்கு அமைதி கிடையாது.
தமஸ்கு வலிமையிழந்து ஓட்டம் பிடிக்கிறது, அதனைக் கிலி பிடித்துக் கொண்டது; இடையூறும் துன்பங்களும் அதனைச் சுற்றிப் பிரசவப் பெண்ணை வளைப்பது போல வளைத்துக் கொண்டன;
அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் பிடிக்கப்படும், குடில்களும் பொருட்களும் கைப்பற்றப்படும், அவர்களுடைய ஒட்டகங்கள் பறிக்கப்படும், 'எப்பக்கமும் பேரச்சம்' என்று மனிதர் அலறுவார்கள்.
போருக்கு எழுங்கள், அமரிக்கையாய் அச்சமின்றி வாழும் மக்களுக்கு எதிராக முன்னேறுங்கள்; அவர்கள் ஊருக்கு வாயில்களும் தாழ்ப்பாள்களும் இல்லை; அவர்கள் தனித்து வாழ்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையடிக்கப்படும், அவர்களுடைய கணக்கற்ற மந்தைகள் பறிமுதலாகும்; வட்டமாய் மயிர் வெட்டியிருக்கும் அம்மக்களைக் காற்றில் பறக்கடிப்போம், எப்பக்கமுமிருந்து அவர்கள் மேல் தீமையை வரச்செய்வோம், என்கிறார் ஆண்டவர்.
ஏலாமின் மேல் வானத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் நான்கு வகைக் காற்றைக் கொண்டு வருவோம்; அவர்களை எல்லா வகைக் காற்றிலும் தூற்றுவோம், ஏலாமினின்று ஓடியவர்கள் செல்லாத நாடே இராது.
பகைவர் முன்னிலையிலும், உயிரைப் பறிக்கத் தேடுவார் முன்னும், ஏலாபித்தாரை நடுங்கச் செய்வோம்: அவர்கள் மேல் தீமையைக் கொண்டு வருவோம், நம் ஆத்திரத்தைப் பொழிவோம், என்கிறார் ஆண்டவர். அவர்கள் முற்றிலும் சிதைகிற வரையில் அவர்களை வாளுக்கிரையாகக் கொடுப்போம்.