யோசியாசின் மகனான யோவாக்கீம் என்னும் யூதா அரசனுடைய நான்காம் ஆண்டில் பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் எப்பிராத் நதியருகிலுள்ள கார்க்காமீசில் முறியடித்த எகிப்து மன்னன் நெக்கோவோ என்னும் பார்வோனின் சேனையையும் எகிப்தையும் பற்றிய வாக்கு:
குதிரைகள் மேல் சேணங்களைப் பூட்டுங்கள், வீரர்களே, குதிரை மேல் ஏறுங்கள். தலைச்சீராவை அணிந்து கொள்ளுங்கள், ஈட்டிகளைத் தீட்டுங்கள், மார்க் கவசங்களைப் பூணுங்கள்;
என்ன இது? அவர்கள் திகில் கொண்டு பின்னிடுகிறார்கள், புறமுதுகு காட்டி ஓடுகிறார்கள்; அவர்களுடைய வலிமை மிக்க வீரர்கள் முறியடிக்கப்பட்டனர், போர்க்களத்தை விட்டு ஓடுகிறார்கள்; திரும்பிப் பாராமல் ஓடுகிறார்கள், எப்பக்கமும் திகில், என்கிறார் ஆண்டவர்.
நைல் நதிப் பெருக்கைப் போல் ஓங்கியெழுந்து அலை மோதும் நதி போல் எழுந்து வருபவன் எகிப்தியனே! 'பொங்கியெழுவேன், பூமியை மூடிக்கொள்வேன், நகரங்களையும் குடிமக்களையும் அழிப்பேன்' என்கிறான்.
அந்த நாளோ சேனைகளின் கடவுளாகிய ஆண்டவரின் நாள், தம்முடைய பகைவர்களைப் பழிவாங்கும் நாள்; அவர்கள் வாளுக்கு இரையாக்குவார்கள், வாளும் அவர்களின் இரத்தத்தை நிறையக் குடிக்கும்; குடித்துத் திருப்தியடைந்து வெறித்திருக்கும்; வடநாட்டில் எப்பிராத்து நதியருகில் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு வேள்வி உண்டு.
வேற்றினத்தார் உன் மானபங்கத்தைக் கேள்விப்பட்டார்கள், உனது கூக்குரல் உலகெங்கும் பரவிற்று; ஏனெனில் போர்வீரர் ஒருவர் இன்னொரு வீரரோடு மோதிக் கொண்டு, இருவரும் ஒருமிக்க இடறி விழுந்தார்கள்."
பல பேர் சோர்ந்து வீழ்ந்தனர், அவனவன் தனக்கடுத்தவனிடம், 'எழுந்திரு,கொடியவனின் வாளுக்குக் தப்பித்துக் கொள்ள, நம் இனத்தாரிடமும் பிறந்த நாட்டுக்கும் திரும்பிப் போவோம்' என்று சொல்வான்.
எகிப்து நாடென்னும் உரிமை மகளே, நாடு கடத்தப்பட்ட வாழ்க்கை நடத்தத் தேவையானவற்றை மூட்டை கட்டிக்கொள். ஏனெனில் மேம்பீஸ் காடாகும், பாழடைந்து குடியற்றுப் போகும்.
கொழுத்த காளைகள்போல் அதன் நடுவிலுள்ள கூலிப் படைகள் கூட எதிர்த்து நிற்க முடியாமல் ஒருமிக்க ஓட்டம் பிடித்தார்கள்; ஏனெனில் அவர்களுடைய அழிவின் நாள் அவர்கள் மேல் வந்துற்றது; அதுவே அவர்களுக்குத் தண்டனை நாள்.
அவர்கள் அதன் காட்டை வெட்டுவார்கள், அது ஆள் நுழைய முடியாத காடாயினும் வெட்டப்படும். வெட்டுகிளிகளைப் போல் எண்ணிக்கையில் அடங்காதவர்கள், அவர்களைக் கணக்கிட முடியாது, என்கிறார் ஆண்டவர்.
இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, தீப்ஸ் நகரத்தின் அம்மோனையும் பார்வோனையும் எகிப்தையும் அதன் தெய்வங்களையும், அரசர்களையும் பார்வோனையும், அவன் மேல் நம்பிக்கை வைக்கிறவர்களையும் தண்டிக்கப் போகிறோம்.
அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும், பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசார் கையிலும், அவனுடைய ஊழியர் கையிலும், அவர்களை ஒப்புவிப்போம்; பிறகு பண்டை நாளில் இருந்தது போல், எகிப்து குடியேற்றப்படும், என்கிறார் ஆண்டவர்.
ஆனால் நம் ஊழியனாகிய யாக்கோபே, அஞ்சாதே; இஸ்ராயேலே, நீ கலங்காதே; ஏனெனில் உன்னைத் தொலை நாட்டினின்று மீட்போம், உன் சந்ததியை அடிமைத்தனத்தினின்று விடுவிப்போம்; யாக்கோபு திரும்பி வந்து அமைதியுடன் இளைப்பாறுவான், அவனை எவனும் அச்சுறுத்த மாட்டான்;
நம் ஊழியனாகிய யாக்கோபே, அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் நாம் உன்னோடு இருக்கிறோம்; நீ சிதறி வாழ்ந்த நாட்டு மக்கள் அனைவரையும் முற்றிலும் அழிப்போம்; ஆனால் உன்னை முற்றிலும் அழிக்க மாட்டோம்; உன்னை நீதியோடு தண்டிப்போம்; உன்னைத் தண்டியாமலும் விட மாட்டோம்."