போரிட்டுத் தாக்கவும் நமது கோபத்திலும் ஆத்திரத்திலும் வீழ்த்தி மடித்த மனிதர்களின் உயிரற்ற உடல்களால் நிரப்பவும் இந்த நகரத்துக்குள் கல்தேயர் வருகிறார்கள்; ஏனெனில் அவர்களுடைய தீய செயல்களை முன்னிட்டு நம் முகத்தை இந்நகரத்தினின்று திருப்பிக் கொண்டோம்.
அவர்கள் நமக்கு விரோதமாய்ச் செய்த எல்லா அக்கிரமங்களினின்றும் அவர்களைத் தூய்மைப் படுத்தி, அவர்கள் நம்மை நிந்தித்துப் பிரிந்து சென்று, நமக்கெதிராய்க் கட்டிக் கொண்ட பாவங்களனைத்தையும் மன்னித்து விடுவோம்.
நாம் இவர்களுக்குச் செய்யப்போகும் நன்மைகளையெல்லாம் கேள்விப்படும் உலக மக்கள் அனைவர் முன்னிலையிலும் நமக்குப் பேரும் மகிமையும் மகிழ்ச்சியும் புகழுமிருக்கும்; நாம் அவர்களுக்கு அருளும் எல்லா வித சமாதானத்தையும் நன்மைகளையும் கண்டு மற்ற மக்களினத்தாரெல்லாம் கலங்கி அஞ்சுவார்கள்.
ஆண்டவர் கூறுகிறார்: மனிதனோ, மிருகமோ இல்லாத பாழ்நிலம் என்று நீங்கள் சொல்லும் இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும், மனிதனின்றிக் குடியற்று, மந்தையற்றுப் பாழாய்க் கிடக்கும் யெருசலேமின் தெருக்களிலும்,
அக்களிப்பின் ஆரவாரமும், மகிழ்ச்சிச் சந்தடியும், மணவாளன் மணவாட்டியின் குரலொலியும், 'ஆண்டவர் நல்லவர், எல்லையில்லா இரக்கமுள்ளவர்; ஆதலால் அவரைப் போற்றுங்கள்' என்று சொல்லிப் பாடிக் கொண்டே ஆண்டவரின் கோயிலுக்குக் காணிக்கைகள் கொண்டு போகிறவர்களின் சந்தடியும் திரும்பவும் கேட்கும்; ஏனெனில் இந்நாட்டினை பண்டைக் காலத்தில் இருந்தவாறு மீண்டும் நிலைநாட்டுவோம், என்கிறார் ஆண்டவர்.
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மனிதனற்று, மிருகமற்றுக் காடகிக் கிடக்கும் இவ்விடத்திலும், இதன் எல்லாப் பட்டணங்களிலும், தங்கள் மந்தைகளை மடக்கும் இடையர்களின் குடியிருப்புகள் இன்னும் இருக்கும்.
நமது முன்னிலையில் தகனப்பலிகளை ஒப்புக் கொடுக்கவும், தானியக் காணிக்கைகளை எரிக்கவும், என்றென்றும் பலிகளைத் தரவும் தக்க மனிதன் லேவியினுடைய குலத்து அர்ச்சகர்களுள் இல்லாமற் போகான்."
ஆண்டவர் கூறுகிறார்: இரவோடும் பகலோடும் நாம் செய்திருக்கும் நமது உடன்படிக்கையை முறித்து இரவும் பகலும் தங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் வராதபடி நீங்கள் செய்யக் கூடுமானால்,
நம்முடைய ஊழியனாகிய தாவீதோடு நாம் செய்திருக்கும் உடன்படிக்கையை முறித்துத் தாவீதின் அரியணையில் வீற்றிருக்கத் தக்க வழித் தோன்றலும், நமக்குப் பணிபுரியக் கூடிய லேவியின் குலத்தைச் சேர்ந்த அர்ச்சகரும் அற்றுப் போகும்படி செய்ய உங்களால் ஒரு வேளை இயலும்.
ஆண்டவர் தேர்ந்து கொண்ட இரண்டு குடும்பங்களும் தள்ளுண்டு போயின' என்று இம்மக்கள் சொன்னதை நீ கவனிக்கவில்லையா? இவ்வாறு, தங்கள் கண்ணில் நம் மக்கள் ஓர் இனம் என்று கூறப்படாத அளவுக்கு அவர்கள் நம் மக்களை அவமதித்தார்கள்.
யாக்கோபின் சந்ததியையும், நம் ஊழியனாகிய தாவீதின் சந்ததியையும் புறக்கணித்து, அவர்களினின்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களின் வழி வந்தவர்களை ஆளும்படி யாரையும் தேர்ந்தெடுக்க மாட்டோம் என்றாகும். ஆனால் நாம் அவர்களுக்கு மீண்டும் நல் வாழ்வளித்து அவர்கள் மீது இரக்கம் காட்டுவோம்."