செதேசியாஸ் மன்னன் மெல்கியாசின் மகனான பாசூரையும், மகாசியாசின் மகனான சொப்போனியாஸ் என்கிற அர்ச்சகரையும் எரெமியாசிடம் தூதனுப்பிய போது, ஆண்டவரிடமிருந்து அவருக்கு அருளப்பட்ட வாக்கு இதுவே:
அத்தூதுவர் வந்து அவரிடம், "நபுக்கோதனசார் அரசன் நமக்கு எதிராகப் படையெடுத்து வந்துள்ளான்; ஆண்டவர் ஒருகால் தம் வியத்தகு செயல்களுக்கேற்றவாறு நமக்கு உதவி செய்து, அவன் நம்மிடமிருந்து பின்வாங்கிப் போகச் செய்வார்; இதுபற்றி ஆண்டவரைக் கேட்டுச் சொல்" என்று சொன்னார்கள்.
நீங்கள் போய்ச் செதேசியாஸ் மன்னனுக்குப் பின்வருமாறு சொல்லுங்கள்: 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: மதில்களைச் சூழ்ந்து முற்றுகையிட்டு உங்களை வளைத்து நிற்கும் பபிலோனிய அரசனோடும், கல்தேயரோடும் நீங்கள் போராடுவதற்குப் பயன்படுத்தும் போர்க் கருவிகளை உங்களுக்கு விரோதமாகவே திருப்புவோம்; அவற்றை இந்நகரத்துக்குள் வரச் செய்வோம்.
அதன் பின், யூதாவின் அரசனான செதேசியாசையும், அவனுடைய ஊழியரையும், மக்களையும், இன்னும் இப்பட்டணத்தில் கொள்ளை நோய், வாள், பஞ்சம் இவற்றுக்குத் தப்பினவர்களையும், பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் கையிலும், அவர்களுடைய பகைவர்களின் கையிலும், அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும் நாம் ஒப்புவிப்போம்; அவன் அவர்களை வாளுக்கு இரையாக்குவான்; அவர்கள் மேல் மனம் இளக மாட்டான்: அவர்களை மன்னிக்கவும் மாட்டான்; அவர்களுக்கு இரக்கம் காட்டவும் மாட்டான், என்கிறார் ஆண்டவர்.'
இப்பட்டணத்தில் தங்கி விடுபவன் வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவான்; ஆனால் வெளியேறி உங்களை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டிருக்கும் கல்தேயரிடம் சரணடைபவன் உயிர் வாழ்வான்; அவன் உயிர் அவனுக்குப் போரில் கிடைத்த கொள்ளைப் பொருளாகும்.
இப்பட்டணத்தின் மீது நன்மையை அல்ல, தீமையையே வரச் செய்யத் தீர்மானிக்கிறோம்; அது பபிலோனிய அரசன் கையில் ஒப்புவிக்கப்படும்; அதனை அவன் நெருப்பினால் சுட்டெரிப்பான், என்கிறார் ஆண்டவர்.'
தாவீதின் வீடே, ஆண்டவர் கூறுகிறார்: காலை நேரத்திலேயே நீதி செலுத்துங்கள், கொள்ளையடிக்கப் பட்டவனை ஒடுக்குபவன் கையினின்று விடுதலை செய்யுங்கள்; இல்லையேல், நமது கோபம் நெருப்புப் போல மூண்டெழும்பும்; உங்கள் தீய செயல்களின் காரணமாய் இது பற்றியெரியும்; அதை அணைக்க யாராலும் இயலாது.'
உங்கள் செயல்களின் பலனுக்கேற்றவாறு உங்களைத் தண்டிப்போம்; யெருசலேமின் காட்டில் நெருப்பை மூட்டுவோம், அதைச் சுற்றியுள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும், என்கிறார் ஆண்டவர்."