யெருசலேம் நகரத்தார் அனைவருக்கும் கேட்கும்படி நீ போய் அறிவி: ஆண்டவர் கூறுகிறார்: உன் இளமையின் அன்பை நினைவு கூர்கிறோம், பத்தினிக்குரிய உன் அன்பை அறிவோம், விதைக்கப்படாத இடமாகிய பாலைநிலத்தில் நம்மை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நாம் நினைவு கூர்கிறோம்.
இஸ்ராயேல் இனம் ஆண்டவருக்கென அர்ச்சிக்கப்பட்டதாகவும், அவருடைய அறுவடையின் முதற்கனியாகவும் இருந்தது; அதை உண்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள்; தீங்கு அவர்களைச் சூழ்ந்து கொண்டது, என்கிறார் ஆண்டவர்
நம்மை எகிப்து நாட்டினின்று விடுவித்து, பாலை நிலத்தின் வழியாகவும், கரடு முரடானதும் வறண்டதுமான நாட்டிலும், நீரற்றதும் இருள் சூழ்ந்ததுமான வழியிலும், மனிதன் வாழாததும் நடமாடாததுமான நாட்டிலும் நம்மை நடத்தி வந்த ஆண்டவர் எங்கே?' என்று உங்கள் தந்தையர் கேட்டார்களில்லையே!
செழிப்பான நாட்டுக்கு உங்களைக் கூட்டி வந்தோம்; நீங்கள் உண்டு இன்பமுறக் கூட்டி வந்தோம். ஆனால், நீங்கள் அங்கே போய்ச் சேர்ந்ததும் நமது நாட்டைத் தீட்டுப்படுத்தினீர்கள்; நமது உரிமைச் சொத்தை அருவருப்பாக்கினீர்கள்.
அந்த மக்கள் வழிபடுவது உண்மையில் கடவுளர் அல்லர்; இருப்பினும், அவர்கள் தங்கள் தெய்வங்களை மாற்றிக் கொண்டாடாகளோ? ஆனால், நம் மக்கள் தங்கள் மகிமையை, பயனற்ற ஒன்றுக்காக மாற்றி விட்டனர்.
நம் மக்கள் இரண்டு தீமைகள் செய்தார்கள்: உயிருள்ள நீர் சுரக்கும் ஊற்றாகிய எம்மைக் கைவிட்டனர், நீரை வைத்திராத ஓட்டைத் தொட்டிகளைத் தங்களுக்கெனக் கட்டிக் கொண்டனர்.
அவனுக்கு எதிராய்ச் சிங்கங்கள் சீறுகின்றன, பயங்கரமாய் சீறுகின்றன; அவன் நாட்டைப் பாழாக்கி விட்டன; அவன் நகரங்கள் சுட்டெரிக்கப்பட்டன; அங்கே குடியிருப்பார் யாருமில்லை.
உன் தீய செயலே உன்னைக் குற்றம் சாட்டும், எம்மை நீ விட்டகன்ற குற்றமே உன்னைக் கண்டிக்கும்; உன் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிடல் எத்துணைத் தீயது, எத்துணைக் கசப்பானது என்பதை நீ கண்டுணர்ந்து கொள். எம்மைப்பற்றிய அச்சம் உன்னிடம் இல்லையே, என்கிறவர் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர்.
நல்ல விதையினின்று முளைத்த திராட்சைக் கொடியாய், உன்னைத் தேர்ந்தெடுத்து நட்டு வைத்தோம்; பின்னர் எவ்வாறு நீ கெட்டுப் போனாய்? எவ்வாறு நீ காட்டுத் திராட்சையானாய்?
நீ உன்னை வெள்ளை உப்பினால் கழுவினாலும், சவுக்காரப் புல்லினால் தேய்த்து முழுகினாலும் உன் அக்கிரமத்தின் கறை நம் கண் முன்பாக மறைவதில்லை, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
நான் தீட்டுப்படவில்லை, நான் பாகாலைத் தொழவில்லை' என்று நீ சொல்வதெப்படி? இதோ, கணவாயில் உன் கால் சுவடுகளைப் பார்; நீ செய்ததென்ன என எண்ணிப்பார்; இங்கு மங்கும் குதித்தோடும் பெண்ணொட்டகம் நீ;
பாலைநிலத்திலே பழகினதும், தன் இச்சையின் மத வெறியில் காம வாடை பிடிக்கிறதுமான காட்டுக் கழுதை நீ! அதன் காமத்தைக் கட்டுப்படுத்துபவன் யார்? அதனை யாரும் தேடி வருந்த வேண்டியதில்லை; அதன் அசுத்த நிலைமையில் எளிதில் காண்பார்கள்.
நாம்: 'செருப்புத் தேய ஓடாதே, உன் தொண்டை வறள அலையாதே' என்றோம். நீயோ: 'நம்பிக்கையெல்லாம் அற்றுப் போயிற்று, உமது வார்த்தையை ஒரு போதும் கேளேன், அந்நியர் மேல் ஆசை கொண்டேன், அவர்கள் பின்னே ஓடுவேன்' என்றாய்.
திருடன் அகப்படுகிற போது எவ்வாறு மானபங்கமடைவானோ, அவ்வாறே இஸ்ராயேல் மக்களும், அவர்களுடைய அரசர்களும் தலைவர்களும், அர்ச்சர்களும் இறைவாக்கினர்களும் மானபங்கமடைவர்.
ஒரு மரத்தை நோக்கி: 'நீ என் தந்தை' ஒரு கல்லை நோக்கி: "நீ என்னைப் பெற்றவள் என்று சொல்லி, அவற்றுக்கு முகத்தைத் திருப்பி நமக்கு முதுகையே காட்டுகின்றனர்; ஆனால் தங்கள் துன்ப வேளையில்: 'ஆண்டவரே எழுந்திரும், எங்களை விடுவியும்' என்கிறார்கள்.
நீ உண்டாக்கிக் கொண்ட தெய்வங்கள் எங்கே? உன் இடையூறு காலத்தில், முடிந்தால் அவர்கள் எழுந்து உன்னை மீட்கட்டுமே; யூதா நாடே, உன் பட்டணங்கள் எத்தனையோ, உனக்கு அத்தனை தெய்வங்கள் இருக்கிறார்கள்
நாம் உங்கள் மக்களைத் தண்டித்தும் பயனில்லை; அவர்கள் தண்டனையால் திருந்தினார்கள் அல்லர்; சீறியெழும் சிங்கம் போன்றது உங்கள் இனம், உங்கள் வாளே உங்கள் இறைவாக்கினர்களை ஒழித்தது.
மக்களே, ஆண்டவருடைய வாக்கியத்தைக் கேளுங்கள்: நாம் இஸ்ராயேலுக்குப் பாலை நிலமா? அல்லது இருள் அடைந்த பூமியா? நம் மக்கள்: 'உம்மை விட்டு அகன்றோம், இனி என்றும் உம்மிடம் திரும்பி வரமாட்டோம்' என்று சொல்லுவானேன்?
நீயோ, 'நான் குற்றமற்றவன், என்னிடம் மாசுமில்லை; ஆதலால் உம் கடுஞ்சினம் என்னை விட்டகன்று விட்டது' என்கிறாய். 'நான் குற்றவாளியல்ல' என்று நீ சொன்னதால் இதோ, நாம் உன்னை தீர்ப்புக்குக் கொண்டு வருவோம்.
உன் கைகளைத் தலை மேல் வைத்துக் கொண்டு தான் அந்நாட்டை விட்டும் திரும்பி வருவாய்; உனது நம்பிக்கைக்கு ஆதாரமானவர்களை ஆண்டவர் நொறுக்கி விட்டதால் உனக்குப் பயன் ஒன்றுமிராது."