அவர்களுடைய பிள்ளைகள், அவர்களின் பீடங்களும் புனித கோலங்களும், தழை செறிந்த மரங்களின் கீழும் உயர்ந்த குன்றுகளிலும், மலைகளிலும் திறந்த வெளிகளிலும் இருப்பதை நினைத்துக் கொண்டனர்.
நாம் உனக்குக் கொடுத்த உரிமைச் சொத்து, உன்னிடத்தினின்று பறிமுதல் செய்யப்படும்; நீ அறியாத நாட்டில் உன் பகைவர்களுக்கு உன்னை நாம் அடிமையாக்குவோம்; ஏனெனில் நமது கோபத் தீயை மூட்டினாய்; அது என்றென்றும் மூண்டெரியும்."
அவன் பாலைநிலத்துப் பூண்டுக்குச் சமம்; நன்மை வந்தாலும் அதில் பலனைக் காண மாட்டான்; வறட்சி மிக்க பாலை நிலத்திலும் வாழ முடியாத உவர் நிலத்திலுமே அவன் குடியிருப்பு
அவன் நீரருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பானவன்; அது ஈரத்தில் வேரூன்றி இருக்கும்; கோடைக்காலத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையோடிருக்கும்; வறட்சிக் காலத்தில் அதற்குக் கவலையில்லை; அது ஒருகாலும் கனி கெடாதிருக்காது."
அநியாயமாய்ச் செல்வம் திரட்டுகிறவன், தானிடாத முட்டைகளை அடைகாக்கும் கவுதாரிக்கு ஒப்பாவான்; பாதி நாட்களிலேயே இவற்றை இழந்து, கடைசி நாளில் பைத்தியனென்று சொல்லப்படுவான்.
ஆண்டவரே, இஸ்ராயேலின் நம்பிக்கையே, உம்மைக் கைவிட்டவர்கள் வெட்கி நாணுவார்கள்; உம்மை விட்டு விலகினவர்கள் மண்ணில் வரையப்பட்டவர்கள்; ஏனெனில் உயிருள்ள நீரின் ஊற்றாகிய ஆண்டவரைக் கைவிட்டு விட்டார்கள்.
நானோ தீமையை அனுப்பும்படி உம்மை வற்புறுத்தவில்லை; அழிவின் நாளையும் நான் ஆசிக்கவில்லை; இதெல்லாம் உமக்குத் தெரியுமே! என் உதடுகளினின்று புறப்பட்டது உம் முகத்தின் முன்னால் இருக்கின்றதே!
என்னைத் துன்புறுத்துகிறவர்கள் நாணக் கடவார்கள்; ஆனால், நான் நாணமுறாதிருக்கச் செய்யும்; அவர்கள் நடுங்கித் திகில் அடையட்டும்; நான் நடுங்காதிருப்பேனாக! துன்ப நாளை அவர்கள் மீது கொண்டு வாரும், இரட்டிப்பான அழிவினால் அவர்களை நசுக்கும்!
ஆண்டவர் என்னிடம் சொன்னார்: "நீ போய், யூதாவின் மன்னர்கள் உள்ளே போவதற்கும் வெளியே வருவதற்கும் பயன்படும் பொதுமக்கள் வாயிலிலும், யெருசலேமின் ஒவ்வொரு வாயிலிலும் நின்று கொண்டு,
அவர்களுக்கு அறிவி: "இந்த வாயில்கள் வழியாய் உள்ளே போகின்ற யூதாவின் மன்னர்களே, யூதா நாட்டு மக்களே, யெருசலேமின் குடிகளே, ஆண்டவருடைய வாக்கியத்தைக் கேளுங்கள்:
ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் உயிரைக் காத்துக்கொள்ளுங்கள்; ஓய்வு நாளில் சுமை தூக்க வேண்டாம்; அல்லது அதை யெருசலேமின் வாயில்கள் வழியாய் உள்ளே கொண்டு வரவும் வேண்டாம்.
ஓய்வு நாளில் உங்கள் வீடுகளினின்று சுமைகள் எடுக்க வேண்டாம். எந்த வேலையும் செய்யாதீர்கள்; உங்கள் முன்னோருக்கு நாம் கற்பித்தவாறு ஓய்வு நாளைப் பரிசுத்தப்படுத்துங்கள்.
ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: நீங்கள் நம் சொல்லுக்கமைந்து, ஓய்வு நாளில் இப்பட்டணத்தின் வாயில்கள் வழியாய்ச் சுமைகள் கொண்டு வராமலும், எந்த வேலையும் செய்யாமலும், ஓய்வு நாளைப் பரிசுத்தமாய்க் காப்பீர்களாகில்,
அரசர்களும் தலைவர்களும், தேர்களிலும் குதிரைகளிலும் ஏறி இப்பட்டணத்தின் வாயில் வழியாய் உள்ளே வந்து, தாவீதின் அரியணையில் அமர்வார்கள்; அவர்களுடன் அவர்களின் தலைவர்களும், யூதாவின் மனிதர்களும், யெருசலேமின் குடிகளும் உள்ளே போவார்கள்; இப்பட்டணம் என்றென்றும் மனிதர்களின் குடியிருப்பாய் விளங்கும்.
அப்போது, யூதாவின் பட்டணங்கள், யெருசலேமின் சுற்றுப்புறங்கள், பென்யமீன் நாடு, சிற்றூர்கள், மலைநாடு, தென்னாடு முதலிய இடங்களிலிருந்து மக்கள் தகனப் பலிகளையும் மற்றப் பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் தூபத்தையும் நன்றிப் பலிகளையும் கொண்டு வந்து, ஆண்டவரின் கோயிலில் அர்ப்பணம் செய்வார்கள்.
ஆனால் நமது சொல்லுக்கமைந்து ஓய்வு நாளைப் பரிசுத்தப்படுத்தாமலும், ஓய்வு நாளில் யெருசலேமின் வாயில் வழியாய்ச் சுமை தூக்கிக் கொண்டு உள்ளே வருவதை நிறுத்தாமலும் இருந்தீர்களாகில், அதன் வாயில்களில் தீ வைப்போம்; யெருசலேமின் அரண்மனைகள் அதற்கு இரையாகும்; தீயும் அவியாது மூண்டெரியும்"